Monday, October 31, 2011

ஏற்றுமதி உலகம் 16

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்



ஏற்றுமதி இறக்குமதி உலகத்தை வாரா வாரம் வேறு எந்த இணையதளமும் தொட்டதாக தெரியவில்லை. அந்தப் பெருமை உங்கள் இணையதளத்தையே சாரும் என்று வரும் கடிதங்கள் மகிழ்ச்சிப்படுத்துகின்றன. சென்ற வார ஏற்றுமதி உலகத்தை பார்ப்போம்.


டெல்லியில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி

2300 கலைஞர்கள், 950 பொருட்கள் என களைகட்டியது டெல்லியில் சமீபத்தில் நடந்த கைவினைப்பொருட்கள் கண்காட்சி. இதில் முக்கிய அம்சம் வெளிநாட்டை சேர்ந்த 5000 பார்வையாளர்கள் கலந்துகொண்டது தான். இது இந்திய கைவினைப்பொருட்களுக்கு உலகளவில் உள்ள மதிப்பை காட்டுகிறது. இந்த கண்காட்சி வர்த்தக நோக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற முறையில் நடந்தது. இது போன்ற கண்காட்சியில் கலந்து கொள்வது உங்களுக்கு நல்லது, நிறைய ஐடியா கிடைக்கும்.


பே பால் மூலமாக ஏற்றுமதி பணம்

இதுவரை ஈகாமர்ஸ்  இணையதளங்களின் மூலம் விற்கும் போது 500 டாலர் வரையே பே பால் மூலமாக பெறமுடியும் என்ற தடை இருந்தது. அதாவது 500 டாலருக்கு மேல் இ பே போன்ற இணையதளங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பொருட்களுக்கு பணம் பே பால் மூலமாக வாங்க முடியாது என்று இருந்ததை, தற்போது 3000 டாலராக ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.


புளி ஏற்றுமதி

முன்பெல்லாம் ஒரு கிராமத்தையும், இன்னொரு கிராமத்தையும் இணைக்கும் ரோட்டின் இருபுறங்களிலும் புளிய மரங்களை தான் நடுவார்கள். நிழலுக்கும் நிழல், வருமானத்துக்கும் வருமானம், மண் அரிப்பையும் தடுக்கும், அதிக நீரும் தேவையில்லை, நீண்டகாலம் பயன்தரும். கடந்த 22 மாதத்தில் புளி விலை மூன்று மடங்காக கூடியுள்ளது. இதற்கு காரணம் ஏற்றுமதி டிமாண்ட் அதிகரித்தது, உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. கடந்த வருடத்தில் 17500 டன் புளி ஏற்றுமதி செய்துள்ளோம். இதன் மதிப்பு 80 கோடி ரூபாய்கள் ஆகும். நாம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பங்களாதேஷ், பாகிஸதான், மலேஷியா, வளைகுடா நாடுகள். காலியாக இருக்கும் இடத்தில் புளியமரம் வளர்க்கலாமே?


ஜீரா ஏற்றுமதி

இந்திய ஜீரா விலை உலகளவில் மற்ற நாடுகளை வைத்துப் பார்க்கும் போது குறைவாக இருக்கிறது. அதாவது இந்திய ஜீரா ஒரு டன்னுக்கு3200 டாலருக்கு விற்கப்படுகிறது. அதே சமயம் சிரியா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வரும் ஜீரா 3450, 3500 டாலர் ஒரு டன்னுக்கு விலை கூறப்படுகிறது. ஆதலால், இந்திய ஜீராவிற்கு மதிப்பு கூடி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதிகம் விளைவிக்கப்படுவதில்லை. அதிகளவில் ராஜஸதான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிகம் விளைவிக்கப்படுகிறது.


செப்டம்பர் மாத ஏற்றுமதி

இந்த செப்டம்பர் மாத ஏற்றுமதி சென்ற வருடம் செப்டம்பர் மாத ஏற்றுமதியை விட 36     சதவீதம் கூடி 24.8     பில்லியன் டாலர் மதிப்பிற்கு (        121,520 கோடி ரூபாய் மதிப்பிற்கு) ஏற்றுமதி செய்துள்ளோம். இந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை என்று எடுத்துக் கொண்டால் 52 சதவீதம் அதிகமாக செய்துள்ளோம். அதுவும் ஒரு மாதத்தில் 82 சதவீதம் அதிகமாக செய்துள்ளோம். இந்த அளவு ஏற்றம் ஒரு மாதத்தில் சீனாவில் கூட இருந்ததில்லை. இந்த முழு வருடத்திற்கும் 300 பில்லியன் டாலர் ஆக உள்ள ஏற்றுமதி அளவை எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் சாப்ட்வேர் ஏற்றுமதி கணக்கில் இல்லை (அதாவது சர்வீசஸ ஏற்றுமதி). 


ஏற்றுமதி புள்ளி விபரங்கள் தவறா?

அரசாங்கம் கொடுக்கும் ஏற்றுமதி புள்ளி விபரங்களும், ஒவ்வொரும் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி ஆகும் சரக்குகளின் மதிப்பையும் கூட்டி பார்க்கும் போது அவை இரண்டும் சரிசமமாக வரவில்லை. அரசாங்கம் கொடுக்கும் புள்ளிவிபரங்கள் அதிகமாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. புள்ளி விபரங்கள் சரிவர தரப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இது சரி செய்யப்பட வேண்டும்.


வெளிநாட்டு வர்த்தக கொள்கை

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை திருத்தியமைக்கப்பட்டு கடந்த வாரம் வெளியானது. அதில் ஏற்றுமதியாளர்களுக்கு 900 கோடி ரூபாய்கள் வரை சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய யூனிகளுக்கு செய்யப்படும் அப்பாரல் ஏற்றுமதிகளுக்கு 2 சதவீதம் ஏற்றுமதி மதிப்பில் கிடைக்கும். சில ஏற்றுமதி பொருட்களுக்கு 2 சதவீதம் சரக்குக் கட்டணத்தில் திருப்பி அளிக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது சரக்குக் கட்டணத்தில் 1 சதவீதம் திருப்பி அளிக்கப்படும் போன்றவை முக்கியமானவை ஆகும்.


கேள்விக்கு என்ன பதில்?

சேகர்
ஈரோடு
கேள்வி

ஏற்றுமதி சரக்குகளை விமானம், கப்பல் மூலமாக தான் அனுப்ப முடியுமா? லாரி, டிரக் வழியாக அனுப்ப இயலாதா?

பதில்
ஏற்றுமதி சரக்குகளை தாராளமாக லாரி, டிரக் ஏன் போட் மூலமாக கூட அனுப்ப இயலும். ஏற்றுமதி செய்யப்படும் நாட்டிற்கும், இறக்குமதி செய்யப்படும் நாட்டிற்கும் இடையே தரை வழி இருந்தால் லாரி, டிரக் மூலமாக சரக்குகள் அனுப்பப்படலாம். உதாரணமாக இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு சரக்குகள் லாரி, டிரக் வழியாக நிறைய அனுப்பப்படுகிறது. இது போல ஐரோப்பிய நாடுகளுக்குள் தரை வழி போக்குவரத்து அதிகமாக உள்ளது. சில சமயம் கப்பல் மூலம் சரக்குகள் அனுப்பும் போது செலவுகள் அதிகமாக இருக்கும். ஆதலால், சரக்குகள் போட் மூலமாக அனுப்பப்படும். உதாரணமாக பாகிஸதான் நாட்டிலிருந்து துபாய் போன்ற இடங்களுக்கு போட் மூலம் சரக்குகள் அனுப்பப்படுகின்றன.


இந்த வார இணையதளம்

http://www.e-tendering.com/

ஆசிய அளவில் வெளிவரும் ஈ-டெண்டர்கள் எல்லாவற்றையும் தொகுத்து தரும் இணையதளம். குறிப்பாக ஹாங்காங், சைனா, ஜப்பான் போன்ற நாடுகளின் நிறுவனங்கள் வழங்கும் ஈ-டெண்டர்கள் இதில் இருக்கும். பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இலவச ட்ரையல் மற்றும் டெமோ வசதியுள்ளது.

தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

Monday, October 24, 2011

ஏற்றுமதி உலகம் 15

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

உலகளவில் பங்குச் சந்தைகள் பரபரத்துக் கொண்டிருந்தாலும், தங்கம், வெள்ளி ஏறி இறங்கிக் கொண்டிருந்தாலும், இந்திய ஏற்றுமதி உலகம் ஒரு சீரான இயக்கத்திலேயே இருக்கிறது. ஆகஸட் மாத இந்திய ஏற்றுமதியும் இதற்கு ஒரு சான்றாக இருக்கிறது.


டெக்னிகல் டெக்ஸடைல்ஸ்

சாதாரண டெக்ஸ்டைல்சை விட டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்  ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது என்று முன்பே கூறியிருந்தோம். அந்தத் துறையில் நாம் முன்னேறி வருகிறோம். இந்தத் துறைக்கு அரசாங்க உதவிகளும் கிடைத்து வருகின்றன. இந்த துறை 2016-17 வருடத்தில் 31.4 பில்லியன் அளவிற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (அதாவது கிட்டதட்ட 152,000 கோடி ரூபாய்கள் மதிப்புள்ளதாக இந்த துறை இருக்கும்). டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்  துறையில் மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ், ஜியோ டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமோடிவ் டெக்ஸ்டைல்ஸ், அக்ரோ டெக்ஸ்டைல்ஸ், தீயனைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உடைகள், புல்லட் புரூப் உடைகள், விண்வெளி வீரர்களின் உடைகள் போன்றவையும் அடங்கும். இதற்காக சமீபத்தில் மும்பையில் ஒரு உலகளவிலான கண்காட்சி நடந்தது குறிப்பிடதக்கது.




நறுமன பொருட்களின் ஏற்றுஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் நறுமன பொருட்களின் ஏற்றுமதி 23 சதவீதம் (சென்ற வருடம் இதே காலத்தை விட) குறைந்தது. காரணம் என்ன தெரியுமா? சைனாவிற்கு மிளகாய் ஏற்றுமதி வாய்ப்புக்கள் குறைந்தது தான். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் நறுமணப் பொருட்களில் மிகவும் முக்கியமானது மிளகாய். சென்ற வருடம் 255000 டன்கள் ஏற்றுமதி செய்திருந்தோம், ஆனால் தற்போது 195000 டன்னாக இது குறைந்திருந்தது. இது தவிர கொத்துமல்லி, ஜீரா ஏற்றுமதிகளும் குறைந்திருந்தன. அதே சமயம் ஏலக்காய், மிளகு போன்றவைகளின் ஏற்றுமதி கூடியிருந்தது






இந்திய கடலுணவு பொருட்கள் சீனாவிற்கு
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிரச்சனைகள் தலைக்தூக்கி இருக்கும் சமயத்தில் இந்தியாவிலிருந்து கடலுணவுப் பொருட்கள் அதிக அளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது ஒரு நல்ல செய்தியாகும். சீன இறக்குமதியாளர்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் இந்திய ஏற்றுமதியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க விரும்புகின்றனர். இந்தியாவிலிருந்து கடலுணவுப் பொருடக்ள் இறக்குமதி செய்வதில் தற்போது சீனா முன்னணி  வகிக்கும் அளவிற்கு முன்னேறி வருகிறது. கிட்டதட்ட 15 சதவீத ஏற்றுமதி சீனாவிற்கு நடைபெறுகிறது. தாய்லாந்தில் வெள்ளத்தால் அதிக கடலுணவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதால் இந்திய ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புக்கள் கூடி வருகிறது. இந்தியாவில் குஜராத்திலிருந்து தான் அதிகளவு ஏற்றுமதி கடலுணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் டிமாண்ட் குறைந்து வருகிறது.


தாய்லாந்தும், அரிசி ஏற்றுமதியும்
தாய்லாந்து நாடு அரிசி ஏற்றுமதியில் சிறந்து விளங்குவது எல்லோரும் அறிந்ததே. அந்த நாட்டு அரசாங்கம் விவசாயிகளின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக தற்போதைய நெல் விலையில் 50 சதவீதம் கூடுதலாக கொடுத்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்கிறது. இதனால் வெளிவியாபாரிகளும் அவ்வாறு கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. அப்படி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது, வெளிநாட்டு விலைகளுக்கு ஏற்ப விற்க இயலுவதில்லை. ஆதலால், அங்கு ஏற்றுமதி குறையும் அபாயம் உள்ளது. நமது நாட்டு ஏற்றுமதியாளர்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.


திருப்பூர் ஏற்றுமதி
சாதரணமாக திருப்பூர் நகரின் ஏற்றுமதி வருடத்திர்கு சுமார் 18000 கோடி ரூபாய் அளவில் இருக்கும். தற்போது நிலவி வரும் டையிங் யூனிட் பிரச்சனைகளால் அங்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் இந்த வருட ஏற்றுமதி 11500 முதல் 12000 கோடி ரூபாய் வரை தான் இருக்கும் என கூறப்படுகிறது. சாயப்பிரச்சனை சுமூகமாக தீர்ந்து ஏற்றுமதி கூடினால் அது திருப்பூருக்கும் நன்மை, இந்திய ஏற்றுமதிக்கும் நன்மை.


கேள்விக்கு என்ன பதில்?
துரை
திருச்சி

கேள்வி

பில் ஆப் லேடிங் என்றால் என்ன?
பதில்

பில் ஆப் லேடிங் என்பது கப்பல் சரக்கு ரசீது என தமிழில் அழைக்கப்படும். அதாவது ஏற்றுமதி சரக்குகளை கப்பல் மூலமாக அனுப்பும் போது கொடுக்கப்படும் ரசீது ஆகும். இது ஏற்றுமதியில் மிகவும் முக்கியமான டாக்குமெண்டாகும்.து சாதாரணமாக 3 ஒரிஜனலாக கொடுக்கப்படும். இதில் நீங்கள் ஏற்றி அனுப்பும் சரக்குகளின் முழு விபரமும் இருக்கும். வாங்குபவர் விலாசம், விற்பரின் விலாசம், ஏற்றி அனுப்பப்படும் தேதி, என்ன சரக்கு அனுப்பப்பட்டுள்ளது, சரக்கின் எடை, எங்கிருந்து எங்கு வரை அனுப்பப்பட்டுள்ளது, சரக்குக்கட்டணம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா?, ஏற்றி அனுப்பிய தேதி, கப்பலின் பெயர் போன்ற விபரங்கள் அடங்கியிருக்கும். இது ஒரு நெகோஷியபுள் இண்ஸ்ட்ருமெண்டாகும். அதாவது, அதை வைத்திருப்பவர் கையெழுத்திட்டு வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம்.


இந்த வார இணையதளம்www.eudict.com
பல சமயங்களில் குறிப்பிட்ட சில மொழிகளின் வார்த்தைகளுக்கு அர்த்தம் நமக்கு பிடிபடாது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் என்றால் டிக்ஷ்னரி எடுத்து பார்த்து விடலாம். ஆனால், வேறு மொழிகள் என்றால் கடினம். இதற்காகவே இந்த இணையதளம் இருக்கிறது. 30 மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவுகிறது. அது போல ஆங்கிலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஜெர்மன் மொழியில் இருந்து தமிழுக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள உதவுகிறது. மிகவும் உபயோகமான ஒரு இணையதளம். அதிகமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மொழிகளின் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க உதவும்.

தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

Monday, October 17, 2011

ஆகஸ்ட் மாத ஏற்றுமதி உயர்வு, அம்ரஸ் சாப்பிடலியா அம்ரஸ், ஷாநாஸ் ஹுசைன் தெரியுமா உங்களுக்கு?, கயிறு ஏற்றுமதி, வெங்காயம் தானே?. கேள்விக்கு என்ன பதில்?, இந்த வார இணையதளம்

சென்ற வார ஏற்றுமதி உலகம்

ஆகஸ்ட் மாத ஏற்றுமதி உயர்வு
சென்ற வருடம் இதே சமயங்களை வைத்துப் பார்க்கும் போது, ஏப்ரல் முதல் இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்து கொண்டே தான் வருகிறது. ஏப்ரல் மற்றும மே மாதங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் இந்த உயர்வு இருந்தது. ஜுன் மாதம் 46 சதவீதமாக இருந்தது. இந்த ஜுலை மாதம், சென்ற வருட ஜுலை மாதத்தை விட 82 சதவீதம் கூடுதலாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் சுமார் 40 சதவீதம் கூடுதலாக இருக்கிறது. ஜுலை மாதத்தை வைத்துப் பார்க்கும் போது ஆகஸ்ட் குறைவாக இருக்கிறது. இருந்தாலும், இந்தியாவின் ஜி.டி.பி.க்கு ஏற்றுமதி சுமார் 25 சதவீதம் கைகொடுக்கிறது. இதனால் தான் உலகளவில் பாதிப்புக்கள் ஏற்படும் போது இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் பலருக்கு தோன்றுகிறது.
 

அம்ரஸ்  சாப்பிடலியா அம்ரஸ்
பதப்படுத்தப்பட்ட கெட்டியான மாம்பழ சாறு தான் அம்ரஸ் என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற இந்த மாம்பழச் சாறு, மாம்பழ சீசனில் அதிகம் கிடைக்கும். ஆனால், இனி இதை வருடம் முழுவதும் பிராண்டட் டெட்ரா பாக் அல்லது பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய திட்டுமிட்டுள்ளது பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களான வாடிலால் கம்பெனி. இது தவிர ஜெயின் இரிகேஷன், சூரத்தை சேர்ந்த விமல் அக்ரோ சர்வீசஸ்  ஆகிய கம்பெனிகளும் இந்த சந்தையில் நுழைய உள்ளன. வாடிலால் “கார்டன் பிரஷ்” என்ற பெயரிலும், ஜெயின் இரிகேஷன் “பார்ம் பிரஷ்” என்ற பெயரிலும், விமல் அக்ரோ “சுவாத்” என்ற பெயரிலும் மார்க்கெட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளன. மாம்பழம் விற்க விரும்பும் கிருஷ்ணகிரிக்காரர்கள் இவர்களை அணுகலாமே? இல்லை அவர்களே ஒரு பிராண்ட்டின் பெயரில் தயாரித்து மார்க்கெட்டிங் செய்யலாமே? வாருங்கள் ஏற்றுமதி செய்வோம்.


ஷாநாஸ்  ஹுசைன் தெரியுமா உங்களுக்கு?
ஷாநாஸ்  ஹுசைன் இந்தியாவின் மிகப்பெரிய தொடர் பியூட்டி பார்லர்களின் உரிமையாளர் ஆவார். இவர் ஷாநாஸ்  ஹெர்பல்ஸ்  என்ற பெயரில் ஆயுர்வேத அழகு சாதன பொருட்களை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். இது தவிர இவரின் தயாரிப்புக்கள் உள்நாட்டிலும் சக்கை போடு போடுகின்றன. இவரின் பிராண்டின் தற்போதைய மதிப்பு சுமார் 450 கோடி ரூபாய்களாகும். ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்ய நினைப்பவர்கள் இவர்களையோ அல்லது டாபர், சாரக், சென்னையை சேர்ந்த முருகப்பா குரூப்ஸ், ஹிமாலயா ட்ரக்ஸ்  போன்ற நிறுவனங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் உங்களுடைய ஆயுர்வேத மூலிகைகள் போன்றவை தரமானவையாக இருந்தால் வாங்கும் வாய்ப்புக்கள் உண்டு.


கயிறு ஏற்றுமதி

கயிறு மற்றும் கயிறு சம்பந்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி இந்தியாவில் பெண்களின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கிறது. ஏனெனில் இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்கள் பெண்கள் தாம். இதன் மூலம் செய்யப்படும் பொருட்கள் சுற்றுபுற சுழல் கெடாமல் இருக்கவும் உதவுகிறது. 12வது திட்ட காலத்தில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு இது சம்பந்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் தானே?

வெங்காயம் தானே என்று அரசாங்கம் சும்மா இருக்காமல் மறுபடி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. ஏன்? வெங்காய விலைகள் தாறுமாறாக ஏறி வருகின்றன. ஒவ்வொரு முறை வெங்காயம் விலை ஏறும் போது அரசாங்கத்தின் நாடித்துடிப்பும் ஏறிவருகிறது. ஆதலால் வேறு வழியில்லாமல் ஏற்றுமதியை தடை செய்து விடுகிறார்கள். ஏற்றுமதிக்கு ஆர்டர் வாங்கி வைத்திருந்தவர்கள் பாடும் சிறிது திண்டாட்டம் தான். வெங்காயம் போன்ற பொருட்களுக்கு ஏற்றுமதி காண்டிராக்ட் போடும் போதே அரசாங்கத்தின் மூலம் தடைகள் வருமானால் அதனால் இந்த காண்டிராக்ட் கேன்சல் செய்யப்படுமானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று போட்டுக் கொள்வது நல்லது. அது உங்களுக்கு பிரச்சனைகளை குறைக்க உதவும்.


கேள்விக்கு என்ன பதில்?
ராமராஜ்
கரூர்

கேள்வி:
ஆண்டி டம்பிங் டுயூட்டி என்றால் என்ன?
பதில்
ஒரு நாட்டுக்கு தேவையில்லாத பொருட்களை அந்த நாட்டுக்குள் கொண்டு வந்து கொட்டி அதனால் அந்த பொருளின் உள்நாட்டு விலையை குறைப்பார்களேயானால், அப்படி உள்ளே நுழையும் பொருட்களுக்கு ஆண்டி டம்பிங் டுயூட்டி விதிக்கப்படும். இது அந்த பொருளின் வாங்கும் விலையை கூட்டுவதனால், அந்தப் பொருளை இறக்குமதி செய்ய மாட்டார்கள்.

இந்த வார இணையதளம்http://www.bidline.com/

உலகம் முழுவதும் அரசாங்கங்கள் தினசரி தங்கள் தேவைகளுக்கு பொருட்களை வாங்கிக்கொண்டு இருக்கின்றன. அவையெல்லாம் தற்போது ஈடெண்டர் என்ற முறைப்படியே கொடுக்கப்படுகின்றன. உலகத்தில் வெளியிடப்பெறும் டெண்டர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அவற்றை ஒரு இணையதளம் மூலமாக அளிக்கிறார்கள். கட்டண இணையதளமாக இருந்தாலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் உள்ளது. பலர் சேர்ந்து இதன் மூலம் காண்டிராக்ட்கள் பெறுவார்களேயானால் அது மிகவும் பயனளிக்கும்.

தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

Monday, October 10, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் - 13

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


கூடிவரும் ஏற்றுமதி
சென்ற வருடம் ஜுலை மாதத்தை விட இந்த ஜுலையில் ஏற்றுமதி சுமார் 82 சதவீதம் கூடியிருக்கிறது. குறிப்பாக பார்த்தால் இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஏற்றுமதி கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ஏப்ரல், மே, ஜுன் மாத ஏற்றுமதி அளவை வைத்துப் பார்த்தால் அது இந்திய ஜி.டி.பி.யில் 25 சதவீதம் இருக்கிறது.


வெற்றிலை ஏற்றுமதி
இந்தியா உலகளவில் 20 நாடுகளுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்து வருகிறது. பாகிஸதான், ஔமன், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ, கென்யா, ஹாங்காங், சவுதி, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகள் இதில் அடங்கும். 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை  1656 டன்கள் வெற்றிலை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்தியாவில் சுமார் 50000 ஹெக்டேர் அளவில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. மேற்கு வங்களாத்தில் இருந்து தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து கர்நாடகா வருகிறது. கும்பகோணம் என்றதும் டிகிரி காப்பியும், வெற்றிலையும் தான் ஞாபகம் வருகிறது. ஏற்றுமதி செய்பவர்கள் இருந்தால் உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


ஏற்றுமதியில் டாக்குமெண்டேஷன்
ஏற்றுமதியில் டாக்குமெண்டேஷன் தான் மிகவும் கஷ்டமானது. அதாவது, பொருளை தயாரிப்பதற்கு நீங்கள் எவ்வளவு கவனம் கொடுக்கிறீர்களோ அவ்வளவு கவனம் எல்.சி. மூலம் செய்யப்படும் ஏற்றுமதி டாக்குமெண்டேஷனுக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் உங்கள் டாக்குமெண்டேஷன் கவலையை விட்டுவிடுங்கள். உங்களுக்காக இந்த பகுதி உதவக் காத்திருக்கிறது. ஏற்றுமதி டாக்குமெண்டேஷனில் உலகளவில் அனுபவம் வாய்ந்த சேதுராமன் சாத்தப்பன் உங்களுடைய டாக்குமெண்டேஷன்களை சரிபார்த்து தருவார்.

அரிசி ஏற்றுமதி
அரசாங்கம் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு தடைகள் ஏதும் விதிக்கவில்லை. அதே சமயம் பாசுமதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதிக்கு முன்பு தடை இருந்தது. தற்போது கட்டுபாடுகள் உள்ளது. அதாவது பொன்னி அரிசி தலா 50000 டன்கள் விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்கள் மூலமாகவும், தலா 25000 டன்கள் தூத்துக்குடி, கொச்சின் துறைமுகங்கள் மூலமாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர முன்பு 20,25 கிலோ பாக்கிங் கூட ஏற்றுமதி செய்ய அனுமதி இருந்தது. தற்போது அது 10 கிலோ அல்லது அதற்கு கீழே உள்ள பாக்கிங்களில் தான் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற கட்டுபாடு இருப்பதால் அது ஏற்றுமதி விலையை வேறு கூட்டி விடுகிறது. இதனால் மற்ற நாடுகளுடன் விலையில் போட்டி போட இயலாமல் போய்விடுகிறது. இதை அரசாங்கத்திடம் எடுத்து சென்றுள்ளார்கள் தென்னிந்திய அரிசி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள். தற்போது அரிசி உற்பத்தியில் தன்னிறைவு இருப்பதால் அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறதா என்று பார்ப்போம்.

லெதர் ஏற்றுமதி
இந்தியா கிட்டதட்ட 18 நாடுகளுக்கு லெதர் மற்றும் லெதர் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் அதிகமாக ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் செல்கிறது. உலகளவில் லெதர் பொருட்கள் தயாரிப்பில் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடம் சீனாவிற்கு தான். இந்தியாவில் லெதர் உற்பத்தியில் சென்னை, வேலூர் மாவட்டம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மும்பை வந்து பாருங்கள். தாரவியில் உள்ள லெதர் பொருட்கள் கடைகளில் பெரும்பாலும் தமிழர்களே வைத்துள்ளார்கள்.


பங்களாதேஷ் வழியாக இந்திய ஏற்றுமதி
இந்திய அப்பாரல் ஏற்றுமதியாளர்கள் துணிகளை பங்களாதேஷ்க்கு ஏற்றுமதி செய்து அங்கு ஆயத்த ஆடைகளை தயார் செய்து அங்கிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இது ஏன் என்றால் அங்கு லேபர் மலிவாக கிடைப்பதால் தான். இங்குள்ளவர்கள் கடினமாக உழைக்க ரெடியாக இருந்தால் இங்கேயே செய்யலாமே? தொழிலாளி, முதலாளி என்று இருவரும் யோசிக்க வேண்டிய நேரம் இது.


கேள்விக்கு என்ன பதில்?
அரசன்
திருத்துறைப்பூண்டி

கேள்வி: ஏற்றுமதி செய்ய பான் நம்பர் தேவையா? பான் நம்பர் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டுமா?
பதில்: பலரும் கேட்கும் கேள்வி இது. ஏற்றுமதி செய்ய பான் நம்பர் தேவையில்லை என்றாலும், ஐ.ஈ.சி. கோடு நம்பர் வாங்குவதற்கு கட்டாயம் பான் நம்பர் தேவை. பான் நம்பர் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வருமான வரி கட்டும் அளவு வருமானம் இருந்தால் கட்டாயம் வருமான வரி கட்ட வேண்டும். அந்த அளவைத் தாண்டாவிட்டாலும் பான் நம்பர் இருப்பதனால் வருமான வரி கட்ட வேண்டும் என்ற எண்ணம் தவறானது.

உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய முகவரி sethuraman.sathappan@gmail.com

Monday, October 3, 2011

ஏற்றுமதி உலகம் - 12

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்



மாதுளம்பழம் ஏற்றுமதி
இந்தியா உலகத்தில் அதிகமாக பழங்கள் உற்பத்தி செய்தாலும் அதன் ஏற்றுமதியில் சிறக்கவில்லை. இந்தியாவின் முன்னனி பழங்கள் ஏற்றுமதியாளர்களான கேபி எக்ஸ்போர்ட்ஸ் தற்போது கேப் சர்ட்டிபைட் மாதுளம்பழங்களை தங்களது அகமதாபாத் தோட்டத்திலிருந்து விளைவித்து ஏற்றுமதி செய்கிறார்கள். விளைச்சலில் குறைந்த அளவு பூச்சி மருந்துகள் உபயோகித்து விளைவிக்கிறார்கள். வருடத்திற்கு 2000 டன்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


சோயா மீல்மாதத்திற்கு சுமார் 150,000 டன்கள் சோயா மீல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகமாக இந்தூரிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சோயா மீல் அதிகமாக தீவனங்களில் கலப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது

ஹெ.எஸ். கோடுஒரு பொருளுக்கு இந்தியாவில் ஒரு பெயர் இருக்கும். அதே பொருளுக்கு மற்ற நாட்டில் வேறு பெயர் இருக்கும். இந்தக் குழப்பத்தை தவிர்ப்பதற்காக தான் ஹெ.எஸ். கோடு கொண்டுவரப்பெற்றது. அதாவது, ஹார்மனைஸ்டு கோடு எனப்படும். இது கிட்டதட்ட 11000 பொருட்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நம்பர் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நம்பரை குறிப்பிடும் போது இரு நாட்டவரும் தாம் வாங்கும் பொருள், விற்கும் பொருள் சரியானது தானா என்று சரிபார்த்துக் கொள்ள உதவும். இது புத்தகமாகவும் கிடைக்கிறது. பல இணையத்தளங்களிலும் எளிதாக இந்த கோடுகளை காணலாம்.


இந்தியாவின் ஏற்றுமதிஏப்ரல் முதல் ஜுன் வரை மூன்று மாதங்களில் 108 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். சென்ற வருடம் முழுவதும் 246 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இந்த வருட டார்கெட் 300 பில்லியன் டாலர்களாகும். முதல் மூன்று மாதத்திலேயே 108 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்துவிட்டதால் 300 பில்லியன் டாலர் அளவை இந்த வருடம் எட்டிவிட முடியும் என அரசாங்கம் கருதுகிறது.


முந்திரிப்பருப்பு2009-10 வருடத்தில் இந்தியாவிலிருந்து 117453 டன்கள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2797 கோடி ரூபாய்கள் ஆகும். இந்த வருடம் 2010-11 வருடம் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 67792 டன்கள் 1920 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் பண்ருட்டி, கன்யாகுமரி மாவட்டங்களில் பல இடங்கள், கேரளாவில் கொல்லம் ஆகிய இடங்கள் முந்திரி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சென்று பார்த்தால் உங்களுக்கும் இதன் ஏற்றுமதி பற்றி ஆர்வம் வரும். முந்திரி ஏற்றுமதி வாரியம், முந்திரி ஏற்றுமதிக்கு உதவும் வகையில் பல திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.


நேபாளத்தின் ஏற்றுமதி, இறக்குமதிநேபாளம் வருடத்திற்கு 6000 கோடி ரூபாய்கள் தாம் ஏற்றுமதி செய்கிறது. அதே சமயம் இறக்குமதி அதற்கு 6 மடங்கு இருக்கிறது. அதாவது கிட்டதட்ட 36000 கோடி ரூபாய்கள். நேபாளம் நாடு நமக்கு அருகில் இருப்பதால் இந்திய பொருட்களுக்கு அந்த நாட்டிலும், அருகில் உள்ள பூட்டான் போன்ற நாட்டிலும் மவுசு அதிகம். நேபாளத்திலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்
உல்லன் கார்பெட், கார்மெண்ட், பருப்பு வகைகள், டெக்ஸ்டைல்ஸ், பாலியஸ்டர் மற்றும் யார்ன். இது தவிர மற்ற எல்லா பொருட்களுக்கும் இந்தியாவிலிருந்து நிறைய ஏற்றுமதி செய்ய வாய்ப்பிருக்கிறது.

என்னனென்ன கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன?ஆர்ட் மெட்டல் பொருட்கள், மர வேலைப்பாடு பொருட்கள், கையால் பிரிண்ட் செய்யப்பட்ட டெக்ஸ்டைல்ஸ், ஸ்கார்ப், எம்பிராய்டட் துணிகள், ஷால், ஜரி மற்றும் ஜரி வேலைப்பாடு உள்ள துணிகள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. மாதத்திற்கு 700 கோடி ரூபாய்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


இந்த வார இணையதளம்இணையதளங்கள் உங்களது ஏற்றுமதிக்கு மிகவும் இன்றியமையாதது.
http://www.singaporefva.com/ சிங்கப்பூர் பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணையதளம். 1948ல் 18 மெம்பர்களுடன் துவங்கப்பட்ட இந்த சங்கம் தற்போது மிகவும் பெரிதாக வளர்ந்துள்ளது. இதில் பல உபயோகமான தகவல்கள் உள்ளன. நிச்சியம் உங்களுக்கு உபயோகமான இணையதளம்.


கேள்விக்கு என்ன பதில்?
ஜவஹர், சீர்காழி
கேள்வி
ஏற்றுமதியை ஏஜெண்ட் மூலமாக செய்யும் போது அவருக்கு கமிஷன் கொடுக்க இயலுமா? அவர் வெளிநாட்டில் இருக்கிறார், ஆகவே வெளிநாட்டிற்கு பணத்தை அனுப்ப வேண்டும். எப்படி அனுப்புவது?
பதில்
ஏற்றுமதி வணிகத்தில் நாமே ஆர்டர் பிடிப்பது என்பது சிறிது கடினமான ஒன்று தான். ஆதலால் ஏஜெண்ட்களை நியமித்துக் கொள்ளலாம். அவர்கள் வாங்கிக் கொடுக்கும் ஆர்டர்களுக்கு கமிஷன் நீங்கள் வெளிநாட்டுப் பணமாக அனுப்பலாம். இதை ரிசர்வ் வங்கி அனுமதியளிக்கிறது. முன்பு இத்தனை சதவிகிதம் தான் கமிஷன் அனுப்பலாம் என்று இருந்ததை தற்போது எடுத்து விட்டார்கள். எத்தனை சதவீதம் கமிஷன் வேண்டுமானாலும் வங்கி முலமாக அனுப்பலாம்.


துரை, வேலூர்
கேள்வி
ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதுண்டா?
பதில்:
நல்ல கேள்வி. பொதுவாக ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், சில பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்யும் விதமாக ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு பொருள் இந்தியாவிற்கே தேவையாக இருக்கிறது, அதே சமயம் அதன் ஏற்றுமதியை தடை செய்யாமல் குறைக்க வரி விதிக்கப்படும். அப்படி வரி விதிக்கப்படும் சமயத்தில் அந்தப் பொருளின் விலை அதிகமாவதால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் வேறு நாடுகளிலிருந்து அந்தப் பொருளை வாங்கிக் கொள்வார்கள். இதன் மூலம் அந்தப் பொருளின் ஏற்றுமதி குறையும் வாய்ப்புக்கள் உள்ளது.

உங்களது கேள்விகளையும், கருத்துக்களையும் எழுதி அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com