Sunday, September 4, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 12

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி
கைவினைப் பொருட்கள் அதிகம் ஏற்றுமதி ஆவது அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் தாம். தற்போது அந்த நாடுகளில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளதால் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும். 2008ம் வருடம் இதே போல ஒரு சந்தர்ப்பத்தை இந்தியா சந்தித்தது. அப்போது கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்தது.
தற்போதும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எப்படி சரிக்கட்டுவது? இந்திய அளவில் கைவினைப் பொருட்களுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது கணவன் மனைவி ஆகிய இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பதாலும்,  வீடுகளை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் அதிகமாகியுள்ளதாலும் இந்திய அளவில் கைவினைப்பொருட்களுக்கும் மவுசு கூடியுள்ளது.


ரூபாயில் ஏற்றுமதி வர்த்தகம்
டாலர் ரூபாயில் அதிக அளவு ஏற்றத் தாழ்வுகள் தினசரி இருப்பதால், ஏற்றுமதியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆதலால் இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது இன்வாய்ஸ்களை ரூபாயில் செய்யலாமா என்று யோசித்து வருகிறார்கள், ரூபாய் வர்த்தகத்திற்கு மாறியும் வருகிறார்கள்.
இது எப்படி நடக்கிறது? முன்பு 44000 ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு அமெரிக்க டாலர் 44 ரூபாய் மதிப்பு என்று எடுத்துக் கொண்டு 1000 அமெரிக்க டாலர் அந்த இறக்குமதியாளரிடம் இருந்து வரவேண்டும் என்று கணக்கிட்டு இன்வாய்ஸ் செய்வீர்கள். அவரிடம் இருந்து அப்படி 1000 டாலர் வரும் பட்சத்தில், நீங்கள் பார்வார்டு காண்டிராக்ட் போடாத பட்சத்தில் அன்றைய தினத்தில் டாலருக்கு 44 ரூபாய் கிடைத்தால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைத்ததாக அர்த்தம். அதே சமயம் அன்றைய தினம் டாலர் 42 ரூபாய் என்று இருந்தால் உங்கள் ஏற்றுமதியில் 2000 ரூபாய் நஷ்டம் என்று அர்த்தம். அன்றைய தினம் டாலர் 47 ரூபாய் என்று இருந்தால் உங்கள் ஏற்றுமதியில் மேலும் 2000 ரூபாய் லாபம் என்று அர்த்தம். அதே சமயம் நீங்கள் ரூபாயில் 44000 என்று இன்வாய்ஸ்  செய்தால் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புபவர் 44000 உங்களுக்கு அனுப்பிவிடுவார். உங்களுக்கு எந்த லாப நஷ்டமும் இருக்காது. டாலரின் லாப நஷ்டங்கள் அவரை சேர்ந்தது. ஆனால், உங்களின் இறக்குமதியாளர் இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் இந்திய அரசாங்கத்தின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை இதை அனுமதியளித்துள்ளது. பெரிய பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் இதை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
டாலரும், ரூபாயும்
ஒரு டாலர் தற்போது 45 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இன்னும் 6 மாதத்தில் ரூபாய் இன்னும் வலுவடைந்து விடும் எனவும், ஒரு டாலர் 40 முதல் 41 ரூபாய் வரை வந்து விடுமெனவும் எதிர்பார்க்கிறார்கள் கரன்சி டிரேடர்கள். ஏற்றுமதியாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. உங்களின் ஏற்றுமதிக்கு பார்வட் காண்டிராக்ட் போடுவதே தற்போது சிறந்த வழி ஆகும்.

வாழைப்பழமும், ஏற்றுமதியும்
இந்தியா வருடத்திற்கு 27 மில்லியன் டன்கள் (அதாவது 27,00,00,00,000 கிலோக்கள்) வாழைப்பழங்கள் உற்பத்தி செய்தாலும் அதில் 0.1 சதவீதம் தான் ஏற்றுமதி செய்து வருகிறோம். மீதம் 99.99 சதவீதம் இந்தியாவிலேயே உபயோகப்படுத்தபப்டுகிறது. இதில் பல மில்லியன் டன்கள் யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாகிப்போகிறது, அதாவது அழுகி விடுகிறது. பல சமயங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் போதே அழுகி விடுகிறது. இதை தவிர்க்க குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களை பலரும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது பழங்களை 50 நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க உதவுகிறது. இதனால் வருங்காலத்தில் ஏற்றுமதி அதிகமாகும் வாய்ப்புக்கள் உள்ளது.
சரியான குளிர்சாதன வசதி கிடங்குகள் இல்லாததால் இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 30000 கோடி மதிப்புள்ள உணவுப்பொருடகள் வீணாகுகின்றன.

மூலிகை பொருட்கள் ஏற்றுமதி
இந்திய மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி வருடத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய்கள் என்ற அளவில் இருக்கிறது. இதில் 200 கோடி ரூபாய்கள் அளவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. இது தவிர இந்திய மூலிகைப் பொருட்களை அதிகம் வாங்கும் நாடுகள் பாகிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, அயர்லாந்து, யூகே, ஆஸ்ஸதிரேலியா, பங்களாதேஷ், வியட்நாம், மலேஷியா ஆகிய நாடுகள் ஆகும். 500 கோடி ரூபாய்கள் என்பது மூலிகைகள் அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் சிறிய தொகை தான். இந்த துறையில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளது.


கேள்வி பதில்
அன்பரசன், கோவை
கேள்வி: எனக்கு வந்த எல்.சி.யை வேறு ஒரு நபருக்கு மாற்றிக் கொடுக்க முடியுமா? அப்படியெனில் நான் அவரிடமிருந்து கமிஷன் வாங்கிக் கொள்ள முடியுமா?
பதில்தாராளமாக நீங்கள் உங்களுக்கு வந்த எல்.சி.யை வேறு ஒரு நபருக்கு மாற்றி கொடுக்க முடியும். இதை யூசிபி600ன் விதி 38 அனுமதியளிக்கிறது. எல்.சி.யை அப்படியே மாற்றி கொடுக்கும் பட்சத்தில், ஏற்றுமதியை நீங்கள் யாருக்கு மாற்றிக் கொடுக்கிறீர்களோ அவர் செய்வார். அப்படி மாற்றி கொடுக்கும் பட்சத்தில் அவரிடமிருந்து நீங்கள் கமிஷனும் தனியாக பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது எல்.சி. உள்ள விலை, சரக்கின் அளவு, ஏற்றுமதி செய்யப்படவேண்டிய காலம், டாக்குமெண்ட் சமர்பிக்கவேண்டிய காலம் ஆகியவைகளை குறைத்து (இதில் எல்லாம் அல்லது ஒன்றிரண்டு) அவருக்கு நீங்கள் எல்.சி.யை கொடுக்கும் பட்சத்தில் அவர் உங்களுக்கு டாக்குமெண்ட்களை அனுப்புவார். நீங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும்.  மாற்றிக் கொடுப்பதில் உள்ள சிரமம் என்னவென்றால், நீங்கள் மாற்றிக் கொடுக்கப்போகும் நபர் சரக்குகளை நன்கு தயாரிப்பவராக இருக்க வேண்டும். இல்லாவிடில் உங்கள் பெயர் கெட்டு விடும்.


ரகுராமன்
திருச்சி
கேள்வி:
மருத்துவத்துறையில் ஆயுஸ் (Ayush) என்றால் என்ன?
பதில்: ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய பெயர்களின் முதல் ஆங்கில எழுத்துக்களை வைத்து தான் ஆயுஸ் என அழைக்கப்படுகிறது. அதாவது அலோபதி அல்லாத முக்கிய மருத்துவ துறைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.


உங்களது கேள்விகளையும், கருத்துக்களையும் எழுதி அனுப்ப வேண்டிய
ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com