Sunday, August 21, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் -10

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

குறைந்து வரும் வெண்கலப் பொருட்கள் ஏற்றுமதி

வெண்கலப் பொருட்கள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றில் இருந்து ஆர்டர்கள் குறைவாக வருவதே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் வெண்கல விலைகள் ஏற்ற இறக்கமாக இருப்பதும் ஒரு காரணம். குஜராத்தில் உள்ள இந்த தொழிற்சாலைகள் தற்சமயம் 70 முதல் 75 சதவீதம் வரை தான் தனது கெபாசிட்டியில் உற்பத்தி செய்து வருகின்றன.


வர்த்தக கண்காட்சி

வரும்காலத்தில் டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ்  துறையில் ஒரு பெரும் பங்கு வகிக்கப்போகிறது. அந்த துறை மிகவும் வளர்ந்து வருகிறது. இந்த மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மும்பையில் டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்  பற்றிய வர்த்தக கண்காட்சி நடக்கவுள்ளது. மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டிரான்ஸ்போர்ட் டெக்ஸ்டைல்ஸ், இண்டஸ்டிரியல் டெக்ஸ்டைல்ஸ், ஜியோ டெக்ஸ்டைல்ஸ், ஹோம் டெக்ஸ்டைல்ஸ், பாதுகாப்பு டெக்ஸ்டைல்ஸ், ஸ்போர்ட்ஸ்  டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டெக்ஸ்டைல்ஸ்  துறை சம்பந்தமான மிஷினரிகள் ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெறும். இது மும்பையில் பாம்பே எக்சிபிஷன் சென்டரில் நடக்கவுள்ளது.



பேரிச்சம்பழம் இறக்குமதி

பேரிச்சம்பழம் என்றதும் தான் ஞாபகம் வருகிறது. குஜராத்தில் ஒருவர் பேரிச்சம் பழ மரங்கள் வளர்ந்து அது நன்கு பலன் தருவதாக பேப்பரில் பெரிய அளவில் செய்திகள் போட்டிருந்தார்கள். தமிழ்நாட்டிலும் இது போல பல பேர் சவூதியில் வேலை பார்த்தவர்கள் வந்து பேரிச்சம் பழ மரங்கள் நட்டு அது நன்கு பலன் தருவதாக முன்பு செய்திகள் வந்தது. இது போல புதிய முயற்சிகளை அவர்கள் பத்திரிக்கைகளுக்கு பெரிய அளவில் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் தமிழர்களின் முயற்சிகள் வெளியே தெரிய வரும்.


ஏற்றுமதி டாகுமென்ட்டில்  என்ன தவறுகள் நேரலாம்

நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் அருமையாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் நீங்கள் எல்.சி. மூலம் அனுப்பும் டாக்குமெண்ட்களும் எல்.சி.படி தவறில்லாமல் இருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு இருக்குமானேயாலும் உங்களுடைய ஏற்றுமதிக்கான பணம் கிடைப்பதில் மிகவும் கஷ்டம் ஆகிவிடும். ஆகவே இதில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும்.

பாகிஸதான் மாம்பழம் அமெரிக்காவிற்கு

மாம்பழங்கள் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டால் மற்ற நாடுகளை சென்றடைய அதிக நாட்கள் ஆகும். ஆனால் அனுப்பும் செலவு குறைவு. உதாரணமாக பாகிஸதானிலிருந்து அமெரிக்காவிற்கு மாம்பழங்கள் விமானத்தில் அனுப்பப்பட்டால் ஒரு கிலோவிற்கு ரூபாய் 300 செலவாகிறது. அதே சமயம் கப்பல் மூலம் அனுப்பப்பட்டால் ரூபாய் 25 தான் கிலோவிற்கு ஆகிறது. கப்பல் மூலம் அனுப்பப்பட்டால் இன்னும் அதிகம் ஏற்றுமதி செய்ய முடியும் என்று எண்ணுகிறார்கள். அமெரிக்கா வாங்கும் 650,000 டன்கள் மாம்பழத்தில் 150,000 டன்கள் பாகிஸதானிலிருந்து தான் போகிறது.


வலுக்கும் டாலர்

கடந்த சில வாரங்களாக ரூபாய் வலுத்துக் கொண்டிருந்தது. ஒரு டாலர் ரூபாய் 44 வரை வந்து ஏற்றுமதியாளர்களை கலங்கடித்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது டாலர் உலக கரன்சிகளுக்கு எதிராக வலுத்துக் கொண்டிருக்கிறது. தற்சமயம் ஒரு டாலர் ரூபாய் 44.70 வரை வந்துள்ளது. இது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி தான்.


கேள்விக்கு என்ன பதில்?

சேகர், திருச்சி

கேள்வி: ஏற்றுமதியை கலெக்ஷன் மூலமாக செய்யலாமா?

பதில்: ஏற்றுமதியை பல வகைகளில் செய்யலாம். அதாவது முன்பணம் வாங்கி கொண்டு, கலெக்ஷன் மூலமாக, எல்.சி.மூலமாக என்று மூன்று வகையாக செய்யலாம். கலெக்ஷன் என்பது பலராலும் உபயோகப்படுத்த கூடிய ஒரு வகை தான். இறக்குமதியாளரை உங்களுக்கு தெரியும் பட்சத்தில் தாராளமாக செய்யலாம். அதே சமயம் எல்.சி. கிடைத்தால் தான் ஏற்றுமதி செய்வேன் என்று உடும்பு பிடித்த பிடியாகவும் இருக்ககூடாது. கலெக்ஷன் மூலமாக ஏற்றுமதி செய்யும் போது ஈ.சி.ஜி.சி. யில் இன்சூரன்ஸ்  வாங்கிக் கொண்டு செய்வது மிகவும் முக்கியம்.


கணேசன், நாமக்கல்

கேள்வி: ஏற்றுமதியாளர்களுக்கு வெப்சைட் தேவையா? ஒரு வெப்சைட் ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும்?

பதில்: முன்பெல்லாம் ஏற்றுமதியாளர்கள் கடிதம் மூலமாக இறக்குமதியாளர்களை தொடர்பு கொண்டிருந்தார்கள். அப்போது தங்கள் பொருட்களை பற்றிய விபரங்களை ப்ரோஷர் அச்சிட்டு அதை தபால் மூலமாக அனுப்பி ஆர்டர் பெற்று வந்தார்கள். ஆனால், அந்த காலெமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது எதெற்கெடுத்தாலும் இண்டர்நெட் தான். இணையதளம் இல்லாத வியாபாரங்களை வருங்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. ஆகவே இணையதளம் உங்களுடைய பிசினசுக்கு கட்டாயம் தேவை. ஒரு சாதாரண இணையதளம் ஆரம்பிக்க சுமார் 4000 ரூபாய் வரை தேவைப்படும்.




உங்களை கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com


No comments:

Post a Comment