Sunday, August 28, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம்11

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

 

வளமான ஏற்றுமதி

ஒரு சினிமா பல வாரங்கள் தொடர்ந்து ஓடினால் வெற்றிகரமான 10வது வாரம், 20வது வாரம் என்று போஸ்டர் அடிப்பார்கள். அது போல போஸ்டர் அடிக்க வேண்டிய தருணம் இது. இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து பல மாதங்களாக சென்ற வருடம் இதே கால ஏற்றுமதியை விட உயர்ந்து செல்கிறது. ஜுலை மாத ஏற்றுமதியும் இதற்கு விதிவிலக்கல்ல. சென்ற வருட இதே கால ஏற்றுமதியை விட 82 சதவீதம் கூடுதலாக உள்ளது. அதிகமான எஞ்சினியரிங், பெட்ரோலியம் பொருட்கள், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், வைரம் மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதி இந்த உயர்வுக்கு காரணமாக இருந்தது.

ஆனால், இந்த கனவு ஓட்டம் தொடர்ந்து இருக்குமா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அமெரிக்க, ஐரோப்பிய பிரச்சனைகள் இந்தியாவின் ஏற்றுமதி வரும் மாதங்களில் குறைக்கும்.

டெக்ஸ்டைல்ஸ்  மற்றும் ஆயத்த ஆடைகள்

டெக்ஸ்டைல்ஸ்  இண்டஸ்டிரியை மூன்றாக பிரிக்கலாம், காட்டன் யார்ன், மேன்மேட் பைபர்ஸ்  (எம்.எம்.எப்), ரெடிமேட் கார்மெண்ட்ஸ்  என்று. இதில் காட்டன் யார்ன் மற்றும் ரெடிமேட் கார்மெண்ட்ஸ்  இண்டஸ்டிரி பெரிய கம்பெனிகள் 5 சதவீதம் மார்க்கெட்டை தங்கள் வசம் வைத்துள்ளன. ப்ரோவோக், கேவல் கிரான் கிளாதிங், ஜோடியாக், மதுராம் கார்மெண்ட்ஸ்  போன்றவை ரெடிமேட் கார்மெண்ட்சிலும், வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ், டிரைடெண்ட் லிமிடெட், நாகர் ஸ்பின்னிங் மில், கேபிஆர் மில் லிமெடெட் ஆகியவை காட்டன் யார்ன் இண்டஸ்டிரியிலும் முன்னணியில் இருக்கின்றன.

மேன்மேட் பைபர் இண்டஸ்டிரியில் ரிலையன்ஸ்  இண்டஸ்டிரீஸ், இந்தோ ரமா, பாம்பே டையிங்,  ஜேபிஎப் போன்றவையும், விஸ்கோஸ்  இழையில் கிராசிம், ஆதித்ய பிர்லா நுவோ, செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், கேசோரோம் போன்ற கம்பெனிகளும் முன்னணி வகிக்கின்றன. ஏன் இவ்வளவையும் கூறியுள்ளோம் என்றால், தொழிலில் யார் சிறப்பாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். மேலும், உங்கள் தயாரிப்புக்களையும் அவர்களிடம் சந்தைப்படுத்தவும் உதவும்.
டெக்ஸ்டைல்சுக்கு தமிழ்நாடு அரசாங்கம் ஜுலை 12 முதல் விதித்திருந்த வாட் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி.


ஏலக்காய்

அதிகமான் உற்பத்தி ஏலக்காயை மொத்த விலை ஒரு கிலோ 600 ரூபாய் என்ற அளவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் வாங்கி இருப்பு வைத்துக் கொள்கிறார்கள். சென்ற வருடம் இதே சமயத்தை விட 5 மடங்கு வரத்து அதிகமாகியுள்ளது. பொதுவாக உலகளவில் கமாடிட்டி விலைகள் குறைந்து வருகின்றன. ஆதலால் அதிகமாக ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டாம். விலைகள் குறைய வாய்ப்புக்கள் உள்ளது.


வாருங்கள் ஒமனுக்கு ஏற்றுமதி செய்யலாம்
இந்திய ஒமன் வர்த்தகம் சென்ற வருடம் 4.5 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது சுமார் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. முன்பெல்லாம் ஒமனுக்கு ஏற்றுமதி என்றால் உணவுப் பொருட்கள் மட்டும் தான் நடைபெற்று வந்தது. தற்போது இது தவிர மெஷினரி, எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல்ஸ், கன்சல்டன்சி, டிரெயினிங் ஆகியவையும் அதிகளவில் ஏற்றுமதி ஆகிறது. 
இது தவிர இந்தியா பாசுமதி அல்லாத அரிசியை வருடத்திற்கு 10000 டன்கள் ஏற்றுமதி செய்ய ஒத்துக் கொண்டுள்ளது.

ஆர்கானிக் பொருட்கள்

உலகளவில் ஆர்கானிக் பொருட்களுக்கு உள்ள மவுசு கூடிக் கொண்டெ போகிறது. காரணம் ஆர்கானிக் பொருட்களுக்கு கிடைக்கும் விலை கூடுதலாக இருப்பது தான். ஆனால் இந்தியாவிலிருந்து 86 ஆர்கானிக் பொருட்களே ஏற்றுமதி செய்யபடுகிறது. இதன் மொத்த மதிப்பு 450 கோடி ரூபாய் வரை தான். பீகாரில் ஆர்கானிக் விவசாயத்திற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு இதற்கான முயற்சிகள் அங்கு செய்யப்பட்டு வருகின்றன. இது அங்குள்ள விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடும் விவசாய பல்கலைகழகத்துடன் இணைந்து இது போல முயற்சிகளில்  ஈடுபட்டால் விவசாயிகளின் வாழ்க்கை தரமும் உயரும், ஏற்றுமதியும் உயரும்.
மாவட்டம் தோறும் ஏற்றுமதி மையங்கள்

ஏற்றுமதியில் பலரும் தமிழ்நாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், சரியான வழிகாட்டிகள் இல்லை. அரசாங்கம் மாவட்டம் தோறும் மாவட்ட தொழில் மையங்களில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றுமதி மையங்களை இன்னும் நல்ல முறையில் விளம்பரபடுத்தி, நல்ல நூலக வசதிகளை ஏற்படுத்தி அங்கு ஏற்றுமதி சம்பந்தமான அனைத்து நூல்களும் இருக்குமாறும், தகுந்த ஆலோசனைகள் கிடைக்குமாறும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை வளப்படுத்த உதவும்.


                                                          கேள்விக்கு என்ன பதில்?

வெங்கடேஷ், சென்னை

கேள்வி: ஏற்றுமதிக்கு முன் பணம் கொடுக்க ஒத்துக் கொண்ட வெளிநாட்டு இறக்குமதியாளர், அதற்காக எங்களிடம் ஒரு கியாரண்டி கேட்கிறார்கள். அதை கொடுக்கலாமா எப்படி கொடுப்பது?

பதில்: வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு முன்பணம் அனுப்புவர் நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அதற்கான சரக்குகளை அனுப்புவீர்களா மாட்டீர்களா என்ற சந்தேகம் வருமே, அதற்காகத்தான் கேட்கிறார். நீங்கள் கொடுக்கு கியாரண்டி அட்வான்ஸ்   பேமண்ட் கியாரண்டி எனப்படும். உங்கள் வங்கியில் சென்று கேளுங்கள், அவர்கள் என்ன செய்வது என்று கூறவார்கள்.

கேள்வி: எல்லா பொருட்களுக்கும் ஏற்றுமதி இன்ஸ்பெக்ஷன் தேவையா?
பதில்: ஏற்றுமதி ஆகும் எல்லா பொருட்களுக்கும் இன்ஸ்பெக்ஷன் தேவையில்லை. அரசாங்கம் இந்த பொருட்களுக்கு கட்டாயமாக இன்ஸ்பெக்ஷன் தேவை என்று வைத்துள்ள பொருட்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டும். இது தவிர வெளிநாட்டிலுள்ள இறக்குமதியாளர் பொருட்களை இன்ஸ்பெக்ஷன்  செய்து தான் அனுப்ப வேண்டும் என்ற அந்த பொருட்களுக்கும் செய்து அதற்கான அத்தாட்சியுடன் அனுப்ப வேண்டும்.


                                                                 இந்த வார இணையதளம்

http://www.freshplaza.com/
விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் இருப்பவர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணையதளம். காய்கறிகள், பழங்கள், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பதப்படுத்தப்பட்ட பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், நட்ஸ்ஸ, பேக்கேஜிங், மெஷினரி, விலை விபரஙகள், கண்காட்சிகள் போன்று ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. படிக்கத்தான் நேரம் வேண்டும். ஏற்றுமதி செய்ய விரும்புபவர்களுக்கு நிறைய தகவல்கள் கொண்ட ஒரு இணையதளம்.

இந்த தொடரை பற்றிய உங்கள் விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

Sunday, August 21, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் -10

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

குறைந்து வரும் வெண்கலப் பொருட்கள் ஏற்றுமதி

வெண்கலப் பொருட்கள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றில் இருந்து ஆர்டர்கள் குறைவாக வருவதே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் வெண்கல விலைகள் ஏற்ற இறக்கமாக இருப்பதும் ஒரு காரணம். குஜராத்தில் உள்ள இந்த தொழிற்சாலைகள் தற்சமயம் 70 முதல் 75 சதவீதம் வரை தான் தனது கெபாசிட்டியில் உற்பத்தி செய்து வருகின்றன.


வர்த்தக கண்காட்சி

வரும்காலத்தில் டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ்  துறையில் ஒரு பெரும் பங்கு வகிக்கப்போகிறது. அந்த துறை மிகவும் வளர்ந்து வருகிறது. இந்த மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மும்பையில் டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்  பற்றிய வர்த்தக கண்காட்சி நடக்கவுள்ளது. மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டிரான்ஸ்போர்ட் டெக்ஸ்டைல்ஸ், இண்டஸ்டிரியல் டெக்ஸ்டைல்ஸ், ஜியோ டெக்ஸ்டைல்ஸ், ஹோம் டெக்ஸ்டைல்ஸ், பாதுகாப்பு டெக்ஸ்டைல்ஸ், ஸ்போர்ட்ஸ்  டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டெக்ஸ்டைல்ஸ்  துறை சம்பந்தமான மிஷினரிகள் ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெறும். இது மும்பையில் பாம்பே எக்சிபிஷன் சென்டரில் நடக்கவுள்ளது.



பேரிச்சம்பழம் இறக்குமதி

பேரிச்சம்பழம் என்றதும் தான் ஞாபகம் வருகிறது. குஜராத்தில் ஒருவர் பேரிச்சம் பழ மரங்கள் வளர்ந்து அது நன்கு பலன் தருவதாக பேப்பரில் பெரிய அளவில் செய்திகள் போட்டிருந்தார்கள். தமிழ்நாட்டிலும் இது போல பல பேர் சவூதியில் வேலை பார்த்தவர்கள் வந்து பேரிச்சம் பழ மரங்கள் நட்டு அது நன்கு பலன் தருவதாக முன்பு செய்திகள் வந்தது. இது போல புதிய முயற்சிகளை அவர்கள் பத்திரிக்கைகளுக்கு பெரிய அளவில் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் தமிழர்களின் முயற்சிகள் வெளியே தெரிய வரும்.


ஏற்றுமதி டாகுமென்ட்டில்  என்ன தவறுகள் நேரலாம்

நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் அருமையாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் நீங்கள் எல்.சி. மூலம் அனுப்பும் டாக்குமெண்ட்களும் எல்.சி.படி தவறில்லாமல் இருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு இருக்குமானேயாலும் உங்களுடைய ஏற்றுமதிக்கான பணம் கிடைப்பதில் மிகவும் கஷ்டம் ஆகிவிடும். ஆகவே இதில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும்.

பாகிஸதான் மாம்பழம் அமெரிக்காவிற்கு

மாம்பழங்கள் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டால் மற்ற நாடுகளை சென்றடைய அதிக நாட்கள் ஆகும். ஆனால் அனுப்பும் செலவு குறைவு. உதாரணமாக பாகிஸதானிலிருந்து அமெரிக்காவிற்கு மாம்பழங்கள் விமானத்தில் அனுப்பப்பட்டால் ஒரு கிலோவிற்கு ரூபாய் 300 செலவாகிறது. அதே சமயம் கப்பல் மூலம் அனுப்பப்பட்டால் ரூபாய் 25 தான் கிலோவிற்கு ஆகிறது. கப்பல் மூலம் அனுப்பப்பட்டால் இன்னும் அதிகம் ஏற்றுமதி செய்ய முடியும் என்று எண்ணுகிறார்கள். அமெரிக்கா வாங்கும் 650,000 டன்கள் மாம்பழத்தில் 150,000 டன்கள் பாகிஸதானிலிருந்து தான் போகிறது.


வலுக்கும் டாலர்

கடந்த சில வாரங்களாக ரூபாய் வலுத்துக் கொண்டிருந்தது. ஒரு டாலர் ரூபாய் 44 வரை வந்து ஏற்றுமதியாளர்களை கலங்கடித்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது டாலர் உலக கரன்சிகளுக்கு எதிராக வலுத்துக் கொண்டிருக்கிறது. தற்சமயம் ஒரு டாலர் ரூபாய் 44.70 வரை வந்துள்ளது. இது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி தான்.


கேள்விக்கு என்ன பதில்?

சேகர், திருச்சி

கேள்வி: ஏற்றுமதியை கலெக்ஷன் மூலமாக செய்யலாமா?

பதில்: ஏற்றுமதியை பல வகைகளில் செய்யலாம். அதாவது முன்பணம் வாங்கி கொண்டு, கலெக்ஷன் மூலமாக, எல்.சி.மூலமாக என்று மூன்று வகையாக செய்யலாம். கலெக்ஷன் என்பது பலராலும் உபயோகப்படுத்த கூடிய ஒரு வகை தான். இறக்குமதியாளரை உங்களுக்கு தெரியும் பட்சத்தில் தாராளமாக செய்யலாம். அதே சமயம் எல்.சி. கிடைத்தால் தான் ஏற்றுமதி செய்வேன் என்று உடும்பு பிடித்த பிடியாகவும் இருக்ககூடாது. கலெக்ஷன் மூலமாக ஏற்றுமதி செய்யும் போது ஈ.சி.ஜி.சி. யில் இன்சூரன்ஸ்  வாங்கிக் கொண்டு செய்வது மிகவும் முக்கியம்.


கணேசன், நாமக்கல்

கேள்வி: ஏற்றுமதியாளர்களுக்கு வெப்சைட் தேவையா? ஒரு வெப்சைட் ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும்?

பதில்: முன்பெல்லாம் ஏற்றுமதியாளர்கள் கடிதம் மூலமாக இறக்குமதியாளர்களை தொடர்பு கொண்டிருந்தார்கள். அப்போது தங்கள் பொருட்களை பற்றிய விபரங்களை ப்ரோஷர் அச்சிட்டு அதை தபால் மூலமாக அனுப்பி ஆர்டர் பெற்று வந்தார்கள். ஆனால், அந்த காலெமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது எதெற்கெடுத்தாலும் இண்டர்நெட் தான். இணையதளம் இல்லாத வியாபாரங்களை வருங்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. ஆகவே இணையதளம் உங்களுடைய பிசினசுக்கு கட்டாயம் தேவை. ஒரு சாதாரண இணையதளம் ஆரம்பிக்க சுமார் 4000 ரூபாய் வரை தேவைப்படும்.




உங்களை கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com


Sunday, August 14, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 9

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

சென்ற வார ஏற்றுமதி உலகத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெற்றது என்று பார்ப்போம்.

டாலரும், ரூபாயும்
முக்கியமான நிகழ்வு என்று பார்க்கப் போனால் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்வது. இப்படி உயருவது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது. ஏனெனில் முன்பு ஒரு பொருளை ஒரு டாலருக்கு நீங்கள் விற்பனை செய்து கிடைத்த அந்த ஒரு டாலருக்கு 45.50 ரூபாய்  வங்கியிலிருந்து பெற்றிருந்தால், தற்போது அதே ஒரு டாலருக்கு உங்களுக்கு 44.20 ரூபாய் வரை தான் கிடைக்கிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கு சந்தோஷமான செய்தி அல்ல. அதே சமயம் விலையையும் கூட்டி வைத்து விற்கமுடியாது. அதாவது நீங்கள் ஒரு டாலருக்கு விற்ற பொருளை 1 டாலர் 20 சென்ட் என்று விற்றால் அவர் உங்களிடமிருந்து வாங்கமாட்டார். வேறு எந்த நாட்டில் அதே பொருள் 1 டாலருக்கு கிடைக்கிறது என்று தேட சென்று விடுவார், அங்கு வாங்கி விடுவார். அதே சமயம் உங்களுக்கு மூலப்பொருட்களின் விலை குறைந்திருக்காது. இது இருதலைக்கொள்ளி எறும்பு போலக் கதை தான். எப்படி சமாளிப்பது? நீங்கள் இறக்குமதியாளருக்கு விலை குறிப்பிட்டு அவர் ஒத்துக்கொண்டு கான்டிராக்ட் போடும் போதே வங்கியில் சென்று பார்வர்ட் காண்டிராக்ட் போடுவது சிறந்தது. அதாவது, இந்தத் தேதியில் இவ்வளவு வெளிநாட்டு பணம் தருகிறேன் என்று நீங்கள் கூறினால் அவர்கள் ஒரு டாலருக்கு இவ்வளவு ரூபாய் தருகிறேன் என்று கூறுவார்கள். இது போன்ற காண்டிராக்ட் போடுவது மூலமாக உங்களின் ஏற்றுமதி பணம் பத்திரமாக இருக்கும்.


கூட்டுறவே ஏற்றுமதியில் சிறந்த வழி

 தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஏற்றுமதியில் ஈடுபட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்குக்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும் என்ற ஆசையும் அதிகமாக இருக்கிறது. பல ஒருமித்த கருத்துடையவர்கள் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏற்றுமதியை செய்வார்களேயானால் அது லாபகரமாக முடியும். உதாரணமாக போடிநாயக்கனூரில் இருக்கும் பத்து பேர் சேர்ந்து ஏலக்காய் ஏற்றுமதி பற்றியும், திருச்சியில் இருக்கும் பத்து இளைஞர்கள் சேர்ந்து வாழை ஏற்றுமதி பற்றியும், பத்தமடையில் இருக்கும் பத்து பேர் சேர்ந்து கோரம்பாய் ஏற்றுமதி பற்றியும் சிந்திப்பார்களேயானால் அதுவே ஏற்றுமதியில் ஈடுபட சிறந்த வழி. கூட்டுறவே நாட்டுயுர்வு.



கடல் பொருட்கள் ஏற்றுமதி

 உலகளவில் கடல் பொருட்கள் ஏற்றுமதியில் முதல் 10 இடங்களில் இந்தியாவும் இருக்கிறது. மலேஷியா, தாய்லாந்து, வியட்நாம், ஹாங்காங் போன்ற நாடுகளில் மீன் பிரதான உணவாக இருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி கடந்த காலங்களில் அதிகப்படியாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சைனா என்றே இருந்தது. தற்போது மேலே கூறிய நாடுகளுக்கும் அதிகரித்துள்ளது. அதிகப்படியாக ஏற்றுமதியாகும் கடல் மீன் வகைகள், டைகர் ப்ரான், ரிப்பன் பிஷ், வெள்ளை ப்ரான், க்ராப் ஆகியவை ஆகும். பெரும்பாலும் மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகின்றது.



உருளைக்கிழங்கு ஏற்றுமதி


உருளைக்கிழங்கு ஏற்றுமதிக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்காததால் குளிர்சாதன கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்குகள் உள்நாட்டு வியாபாரத்திற்கு வருகின்றன. இது உள்நாட்டு விலையை கிலோவிற்கு 2 முதல் 3 வரை குறைக்க உதவியது. சாதாரணமாக உருளைக்கிழங்கிற்கு அதிகப்படியாக காமன்வெல்த் நாடுகளில் இருந்து தான் கிடைக்கும். தற்போது அது குறைந்திருப்பதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் இந்த வருடம் அதிகப்படியான விளைச்சலும், உபயோகிப்போர் மற்ற கிரீன் வெஜிடபுள்களை விரும்பி சாப்பிடுவதாலும் கிராக்கி இல்லை. இது இன்னும் உள்நாட்டு விலையை குறைக்கும்.




                                                கேள்விக்கு என்ன பதில்?
முரளி
சேலம்

கேள்வி: ஜன்னல்களுக்கு பொருத்தப்படும் ப்ளோட் கிளாஸ்  இறக்குமதி செய்ய விரும்புகிறோம். செய்ய முடியுமா?

பதில்: தாரளமாக இறக்குமதி செய்ய முடியும். இது தடையில்லா இறக்குமதி பொருட்கள் வகையில் வரும். ஆனால், சுங்க வரி செலுத்த வேண்டியிருக்கும். ஐஈசி கோடு கட்டாயம் தேவை.

நாகராஜன்

கேள்வி
பதில்: ஏன் முடியாது? மெனுபாக்சரிங் எக்ஸ்போர்ட்டர் என்றால் நீங்களே பொருள் தயாரிப்பவர் என்று அர்த்தம். மர்ச்செண்ட் எக்ஸ்போர்ட்டர் என்றால் நீங்கள் மற்றவரிடம் பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்கிறீர்கள் என்று அர்த்தம். இரண்டும் ஒரு நபர் தாராளமாக செய்யலாம்.

                                          இந்த வார இணையதளம்
இண்டர்நெட்டில் பல சமயங்களில் தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும், தகவல்கள் நம்ப தகுந்ததா என்ற சந்தோகம் பலருக்கு வரும். அதுவும் வெளிநாட்டில் உள்ள கம்பெனிகளை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கையான இணையதளம் வேண்டும். இந்த இணையதளம் உலகத்தின் 50 மில்லியன் கம்பெனிகளுடைய தகவல்களை திரட்டி வைத்திருக்கிறது. ஆனால், இவை இலவசமாக கிடைப்பதில்லை. பணம் செலுத்த வேண்டும். எத்தனை கம்பெனி தகவல்கள் பெறுகிறோமோ அதற்கு தகுந்தாற்போல் செலுத்தினால் போதும். உங்களுக்கு ஒரு கம்பெனி ஆர்டர் கொடுத்து அந்த கம்பெனி நல்ல கம்பெனியா என்று தெரிந்து கொள்ள உதவும் இந்த இணையதளம்.

தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

Sunday, August 7, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 8

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

சென்ற வாரம் ஏற்றுமதி உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன, அவைகளை பார்ப்போம்.

விவசாய ஏற்றுமதி மண்டலங்கள் தேவையா?
விவசாய ஏற்றுமதி தற்போது வருடத்திற்கு 15.6 பில்லியன் டாலர் அளவில் இருக்கிறது (ஒரு பில்லியன் டாலர் என்பது 4450 கோடி ரூபாய்கள் என்று எடுத்துக் கொள்ளவும்). பல விவசாய பொருட்களில் இந்திய அளவில் தன்னிறைவு அடைந்தது மட்டுமல்லாமல், உலகளவிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறோம். அதாவது உலகளவில் பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் முதலிடமும், முந்திரிக்கொட்டை, முட்டைகோஸ், காட்டன், பூண்டு, ஏலக்காய், வெங்காயம், கரும்பு, தக்காளி, தேங்காய், நிலக்கடலை, டீ, பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவை உற்பத்தியில் உலகளவில் சிறப்பாக செய்து வருகிறோம். ஆனால், உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 1.6 சதவீதம் தான். பொருட்களின் அளவில் 222ம் இடத்திலும், பணமதிப்பில் 237ம் இடத்திலும் இருக்கிறோம், நம்ப முடிகிறதா?  இதை கூட்டுவதற்கு விவசாய விளைபொருள் மண்டலங்களும், குளிர்சாதன சேமிப்பு கிடங்குகளும் தான் உதவும்.

பொருட்கள் ஏற்றுமதி, சர்வீசஸ்  ஏற்றுமதி
பொருட்கள் ஏற்றுமதியில் கடந்த வருடத்தில் இந்தியா உலகளவில் 20 வது இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய வருடம் 22வது இடத்தில் இருந்தது. உலகளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளவர்கள் சைனா, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆகும்.

சர்வீசஸ்  ஏற்றுமதியில் சென்ற வருடம் சுமார் 110 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்து உலகளவில் 10வது இடத்தில் இருக்கிறது.

ஏற்றுமதியில் என்னென்ன முக்கியமான டாக்குமெண்ட்கள்
ஏற்றுமதியில் முக்கியமான டாக்குமெண்ட்கள் என்று பார்க்கபோனால் இன்வாய்ஸ், பில் ஆப் லேடிங் அல்லது ஏர்வே பில் ஆகியவை மிகவும் முக்கியமான டாக்குமெண்ட்களாக கருதப்படும். மற்ற டாக்குமெண்ட்கள் தேவையெனில் கொடுத்தால் போதும். அவை, சர்ட்டிபிகேட் ஆப் ஆர்ஜின், இன்ஸபெக்ஷன் சர்ட்டிபிகேட், வெயிட் சர்டிபிகேட், பில் ஆப் எக்சேஞ்ச், இன்சூரன்ஸ்  டாக்குமெண்ட் போன்றவை ஆகும்.

இறக்குமதி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக இறக்குமதி செய்யும் போது பாரினில் இருந்து இறக்குமதி செய்கிறோம், நமக்கு சரக்கு விற்பவர் நல்லவராக தான் இருப்பார் என்ற எண்ணத்திலேயே பலர் இறக்குமதி செய்வதால்
பல சமயத்தில் இன்னல்களில் மட்டிகொள்கிறோம். இதை தவிர்க்க வெளிநாட்டு ஏற்றுமதியாளர் பற்றியும் நன்னம்பிக்கை அறிக்கை எடுத்து பார்த்து அவர் நல்லவர் என்று தெரிந்துகொண்ட பிறகு  இறக்குமதி செய்வதே நல்லது.


கோழி முதலா, முட்டை முதலா?
உலகளவில் கோழி இறைச்சி உற்பத்தியில் இந்தியா 4வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தி 2.9 மில்லியன் டன்கள் ஆகும். அமெரிக்காவும், சைனாவும் தான் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது. அவர்களின் உற்பத்தி எவ்வளவு தெரியுமா? முறையே 24 மில்லியன் டன்கள், 12.3 மில்லியன் டன்களாகும். அது போல முட்டை உற்பத்தியில் நாம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளோம். முதல் இரண்டு இடங்களும் அமெரிக்காவிற்கு, சைனாவிற்கும் தான். இந்திய முட்டை உற்பத்தி 57 பில்லியன் (மில்லியன் இல்லை) ஆகும்.

இவ்வளவு உற்பத்தி செய்தாலும், இந்த துறையில் ஏற்றுமதியில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம். அதாவது, வருடத்திற்கு 500 கோடி ரூபாய் அளவிற்கு தான் ஏற்றுமதி செய்கிறோம்.
உணவுப் பொருட்கள் கண்காட்சி
ஆகார் என்ற உணவுப் பொருட்கள் வர்த்தக வாய்ப்புக்கள், அது சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் என்ற கண்காட்சி சென்னையில் ஆகஸ்ட் 25 முதல் 27 வரை   நடக்கவுள்ளது. ஐ.டி.பி.ஒ. என்ற அரசாங்க நிறுவனம் நடத்தும் இந்த கண்காட்சி சென்னை டிரேட் சென்டரில் நடக்கவுள்ளது.

                                               இந்த வார இணையதளம்
http://www.imex.com/
உலகளவில் இன்டர்நெட் மூலமாக வர்த்தகம் வளர்ந்து வருகிறது. அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள உதவும் இணையத்தளம். பல நல்ல தகவல்களை கொண்டுள்ளது. 1994ல் ஆரம்பிக்கப்பட்ட இணையதளம்.


                                                கேள்விக்கு என்ன பதில்?
சிவா சீனிவாசன்

கேள்வி
ஐ.ஈ.சி. கோடு நிறுவனத்தின் பெயரில் தான் எடுக்க வேண்டுமா? தனிநபர் பெயரில் எடுக்க முடியாதா?

பதில்
தனிநபர் பெயரில் எடுக்க முடியும் என்றாலும், வெளிநாட்டிலிருந்து உங்களிடம் வர்த்தகம் செய்ய விரும்புபவர் (இறக்குமதி செய்ய விரும்புபவர்) இவரிடம் ஒரு நிறுவனமே இல்லையே, இவர் எப்படி நமக்கு சரக்குகளை அனுப்பி தருவார் என்ற சந்தேகம் வந்து விடும். மேலும், வங்கிகள் தனிநபர் கணக்கில் அதாவது சேவிங்ஸ்  அக்கவுண்டில் வியாபார வரவு செலவுகளை நடத்த விடமாட்டார்கள். ஆதலால் நிறுவனம் பெயரில் எடுப்பதே நல்லது.
உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் எங்களுக்கு எழுதுங்கள். எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com