Sunday, July 31, 2011

ஏற்றுமதி உலகம் 7

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
பங்களாதேஷும் இந்திய ஏற்றுமதியும்

ஒரு காலத்தில் நாம் பங்களாதேஷுக்கு நிறைய ஏற்றுமதிகள் செய்து கொண்டிருந்தோம். தற்போது நமக்கு போட்டியாக சைனாவும் களத்தில் வந்துவிட்டது. 2000ம் வருடம் அந்த நாட்டிற்கு நம்முடைய ஏற்றுமதி 640 மில்லியன் டாலர்களாக இருந்தது, அப்போது சைனாவின் ஏற்றுமதி 900 மில்லியன் டாலர்களாக இருந்தது. பெரிய வித்தியாசம் இல்லாமல் இருந்தது. அதுவே, 2010ம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 2177 மில்லியன் டாலர்களாக இருந்தது, சைனாவின் ஏற்றுமதி 6789 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. பாருங்கள் எவ்வளவு வித்தியாசம்? ஆனால், பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்து பணம் வாங்குவதே ஒரு கலை தான். அந்த கலையை கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.

மில்லியன், பில்லியன்

மில்லியன் என்றால் என்ன, அது எத்தனையை குறிக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கு வரும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய குறியீடு இது. மில்லியன் என்றால் பத்து லட்சம் (அதாவது ஆறு சைபர் வரும்). ஒரு மில்லியன் டாலர் என்றால் கிட்டதட்ட 4.5 கோடி ரூபாய்கள் என்று அர்த்தம். ஒரு பில்லியன் என்றால் 4500 கோடி ரூபாய்கள் என்று அர்த்தம்.

கார்மெண்ட் ஏற்றுமதி இலக்கு

2012ம் வருடம் கார்மெண்ட் ஏற்றுமதி இலக்கு 14 பில்லியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் தேவைகள் அதிகரித்துள்ளதால் கூடுதலான ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக அளவிலான கார்மெண்ட் கண்காட்சியில் அதிகம் இறக்குமதியாளர்கள் வராதது இந்த 14 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி இலக்கை எட்ட முடியுமா என்ற கவலையையும் ஏற்படுத்துகிறது.

சைனா, இந்தியா

சைனா எப்படி ஏற்றுமதியில் இவ்வளவு புகழ் பெற்று வருகிறது. நம்மால் ஏன் அவர்களை தொட இயலவில்லை இது பலருக்கும் பல சமயத்திலும் வரும் நியாயமான சந்தேகம். சைனா எதை உற்பத்தி செய்தாலும் அது லட்சக்கணக்கில் தான் இருக்கும், விலை உலகளவில் போட்டி போடக்கூடிய அளவில் இருக்கும். அதே சமயம் பொருட்களின் தரம் என்பது இந்திய அளவில் இருக்காது. ஆதலால் அதிக எண்ணிக்கை வேண்டும் என்பவர்கள், அதே சமயம் விலையும் சிறிது குறைத்து இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சைனா பக்கம் திரும்புவார்கள். அதே சமயம் தரமாக இருக்க வேண்டும், சிறிது விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை, லட்சக்கணக்கில் தேவையில்லை பத்தாயிரக்கணக்கில் போதும் என்று நினைப்பவர்கள் முதலில் வாங்க நினைப்பது இந்திய பொருட்களைத் தாம். சில சமயம் அவசரத் தேவைக்காக இந்திய இறக்குமதியாளர்களே கோடிக்கணக்கில் சாமி படங்களை அச்சிட்டு சைனாவிடமிருந்து வாங்கியுள்ளார்கள் என்றால் பாருங்களேன்.

புண்ணாக்கு ஏற்றுமதி

புண்ணாக்கு ஏற்றுமதி கூடிக்கொண்டே வருகிறது. சென்ற வருடத்தை விட இந்த ஜுன் மதம் 58 சதவீதம் கூடுதலாகி இருக்கிறது. சென்ற வருடம் ஜுன் மாதம் 158750 டன்கள் ஏற்றுமதி செய்திருந்தோம், இந்த வருடம் ஜுன் மாதம் 250,335 டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் ஜப்பான், வியட்நாம், சைனா, தென் கொரியா, ஐரோப்பா ஆகும். இது அங்கு மாட்டுத்தீவனங்களில் கலப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. அதிகம் ஏற்றுமதி செய்யும் மாநிலங்கள் குஜராத், மஹாராஷ்டிரா, கொல்கத்தா, ஆந்திரா ஆகும்.

இந்த வார இணையதளம்

http://www.fraud.org/

என்னிடம் பல மில்லியன் டாலர்கள் இருக்கின்றன அதை பத்திரமான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும், உங்கள் மொபைல் போன் எண்ணுக்கு ஒரு மில்லியன் டாலர் லாட்டரி விழுந்துள்ளது, உங்களுக்கு லண்டன் ஒட்டலில் வேலை கிடைத்துள்ளது, உங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் பெற்றுத் தருகிறோம், டெலிமார்க்கெட்டிங் ஏமாற்றுதல்கள் போன்ற ஈமெயில்கள், எஸ்.எம்.எஸ். கள் வராதவர்கள் இந்தியாவில் குறைவு. இவர்களின் வலையில் தினந்தோறும் விழுந்து பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை, ஏன் பல லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்து கொண்டிருப்பவர்கள் அதிகம். இது போல உள்ள பல ஏமாற்றுக்களை வெளிச்சமிட்டு காட்டுவது தான் இந்த இணையதளங்களின் முக்கியத்துவம்.

கேள்விக்கு என்ன பதில்?
சங்கரன், புதுக்கோட்டை

கேள்வி: அலங்கார மீன்கள் (கொய் மீன்கள்) இறக்குமதி செய்ய முடியுமா?

பதில்:இது ஒரு ரெசிடிரிக்டெட் இறக்குமதி. டைரக்டர் ஜெனரல் ஆப் பாரின் டிரேட் அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் செய்ய முடியும்.

ராமசந்திரன்,திருச்சி

கேள்வி: இறக்குமதியாளர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி தெரிந்து கொள்வது?

பதில்: முதலில் உங்கள் பொருட்களுக்கு எந்த நாட்டில் வாய்ப்புக்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள், தேவையில்லாமல் எல்லா நாடுகளிலும் போய் உங்கள் பொருட்களுக்கு வாய்ப்புக்கள் தேடாதீர்கள். அந்த நாட்டில் உங்கள் பொருட்களை வாங்கும் இறக்குமதியாளரை இனம் காணுங்கள். பின்னர் அவரை பற்றிய நன்னம்பிக்கை அறிக்கையை இசிஜிசி, மீரா இன்பார்ம், டன் அண்ட் ப்ராட்ஸ்டீரிட் ஆகிய நிறுவனங்கள் மூலம் பெறலாம். இதை வைத்துக் கொண்டு ஏற்றுமதி செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.

அடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம். sethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment