ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
காரமான ஏற்றுமதி
இந்த வருடம் மிளகு ஏற்றுமதி சிறிது குறையும் போல இருப்பதால், விலைகளிலும் பெரிய முன்னேற்றம் இல்லை. உலக அளவில் வியட்நாம் தான் அதிகம் மிளகு உற்பத்தி செய்கிறது. வியட்நாம் வருடத்திற்கு 110,000 டன்கள், இந்தியா 48,000 டன்கள், இந்தோனேஷியா 37000 டன்கள், பிரேசில் 35000 டன்கள், மலேஷியா 25000 டன்கள், சைனா 23000 டன்கள், இலங்கை 17000 டன்கள் மற்றும் தாய்லாந்து 9700 டன்கள். உலகளவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடும் வியட்நாம் தான். கடந்த வருடம் சுமார் 56000 டன்கள் ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா 18850 டன்கள் ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 383 கோடி ரூபாய்களாகும். ஒரு கிலோ 203 ரூபாய் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வருடம் ஒரு கிலோ 158 ரூபாய் என்ற அளவில் தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்குஉலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு என்ன தெரியுமா?
1.4 சதவீதம் தான். இதை 2020 வருடத்திற்குள் 5 சதவீதமாக கூட்டுவதற்கு அரசாங்க முயற்சிகள் எடுத்து வருகிறது.
வரும் மாதங்களில் ஏற்றுமதி குறையுமா?
ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக இருந்தது. இன்னும் சில மாதங்களில் டி.ஈ.பி.பி. திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் எடுக்கப்பட்டுவிடும், அதானால் ஏற்றுமதிகள் குறையும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அப்படி டி.ஈ.பி.பி., திட்டம் எடுக்கப்படும் பட்சத்தில், ஏற்றுமதியாளர்கள் நஷ்டமடையாத அளவு ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று டிஜிஎப்டி டைரக்டர் ஜெனரல் கூறியுள்ளார். இது நிச்சியம் ஏற்றுமதியாளர்கள் வயிற்றில் பால் வார்த்த மாதிரி தான்.
கனடா தேடும் இந்தியா
இந்தியாவிலிருந்து கனடாவிற்கு சுமார் 42 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு வருடத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம் கனடாவிலிருந்து இறக்குமதி சுமார் 2.1 பில்லியன் டாலர்கள் தான் செய்கிறோம். உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டாவது நாடாக இருக்கும் கனடாவிற்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.
எக்சிம் வங்கியும், ஆப்பிரிக்க நாடுகளும்
எக்சிம் வங்கி எத்தியோப்பியா நாட்டிற்கு 91 மில்லியன் டாலர்களும், டான்சானியா நாட்டிற்கு சுமார் 36 மில்லியன் டாலர்களும் லைன் ஆப் கிரிடிட் கடனாக கொடுத்துள்ளது, சமீபத்தில் நமது பிரதமர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று வந்ததும், அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதை பற்றியும் கூறியது நினைவிருக்கலாம்.
மலேஷியாவிற்கு ஏற்றுமதி செய்யலாமா?
இந்திய-மலேஷிய வர்த்தக உறவுகள் பலப்பட்டு வருகின்றன. 2011 வருடத்தில் முதல் நான்கு மாதத்தில் மட்டும் சுமார் 30 சதவீதம் வர்த்தகம் கூடியுள்ளது. இந்தியா அதிகம் இறக்குமதி செய்வது எலக்டிரிக்கல், எலக்டிரானிக் சாமன்கள், குரூடு பெட்ரோலியம், கெமிக்கல், பாமாயில் முதலியவவை. அதே சமயம் இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்வது மெஷினரிகள், அயர்ன் அன்டு ஸ்டீல், மெட்டல், அப்ளையன்சஸ போன்றவையாகும். இது தவிர இந்தியர்கள் அங்கு அதிகம் உள்ளதால் அங்கு அவர்களுக்கு தேவையான பொருட்களும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவின் தடை பாகிஸ்தானின் ஆதாயம்
இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த வருடம் 2 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இன்னும் பல லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யவுள்ளது.
ஏற்றுமதி வட்டி விகிதங்கள்
உலக அளவில் வட்டி விகிதங்கள் கூடாததால் ஏற்றுமதி கடன்களை ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு பணத்திலே (பாரின் கரன்சி பிசிஎப்சி) பெற நினைக்கிறார்கள். அதற்கு வட்டி விகிதஙகள் குறைவு என்ற காரணம் தான். ஆனால், பல வங்கிகளிடம் வெளிநாட்டு பணமாக கொடுக்க வசதிகள் இல்லை. ஆதலால், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி கடனை ரூபாயாக வாங்க வேண்டியுள்ளது. அதற்கு வட்டி விகிதங்கள் அதிகம். இதனால் பல வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுடன் விலையில் போட்டி போட முடியவில்லை. சிறிய கம்பெனி வைத்திருப்பவர்களுக்கு, அதாவது எஸ்.எஸ்.ஐ. கம்பெனிகள் வைத்திருப்பவர்களுக்கு 7 சதவீதத்திலும், மற்ற கம்பெனிகளுக்கு 9 சதவீதத்திலும் ரூபாய் ஏற்றுமதிக் கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வார இணையதளம்
www.edb.gov.sg
வர்த்தகம் செய்ய வாய்ப்புள்ள் நாடுகள், பாதுகாப்பான நாடு என்று எடுத்துக் கொண்டால் அதில் சிங்கப்பூரும் நிச்சியம் வரும். உலகத்தில் வர்த்தகம் செய்ய சிறப்பான நாடுகள் என்ற வரிசையில் 6வது இடத்தில் இருக்கிறது சிங்கப்பூர். அந்த நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அங்குள்ள வர்த்தக வாய்ப்புக்களை அறிந்து கொள்ளவும் உதவும் அரசாஙக இணையத்தளம்.
கேள்விக்கு என்ன பதில்?
கிரிகரி, அமெரிக்கா (ஈமெயில் மூலம்)
கேள்வி: பனை வெல்லம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியுமா?
பதில்: சர்க்கரை ஏற்றுமதிக்கு தான் தடை இருக்கிறது. சில சமயம் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது ஏற்றுமதிக்கு வாய்ப்புக்களுக் அளிக்கப்படுகிறது. ஆனால், பனைவெல்லம் ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை.
ஹரி, பாபநாசம்
கேள்வி:விபூதி ஏற்றுமதி செய்ய முடியுமா?
பதில்:நிச்சியம் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், வாய்ப்புக்கள் குறைவு. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் உள்ள நாடுகளை தான் நீங்கள் குறிவைத்து ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய வேண்டும். அதுவும் அங்குள்ள ஆலயங்களை தொடர்புகொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து ஏற்றுமதி செய்யலாம். பெரிய அளவு ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புக்கள் இல்லாவிடினும், தொடக்கம் சிறியதாக இருப்பது மிகவும் நல்லது. சிறிது சிறிதாக மற்ற பூஜைப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக்கள் உங்களை தேடிவரும்.
அடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம். sethuraman.sathappan@gmail.com
great
ReplyDeleteVERY USEFUL INFORMATIONS
ReplyDelete