Sunday, July 31, 2011

ஏற்றுமதி உலகம் 7

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
பங்களாதேஷும் இந்திய ஏற்றுமதியும்

ஒரு காலத்தில் நாம் பங்களாதேஷுக்கு நிறைய ஏற்றுமதிகள் செய்து கொண்டிருந்தோம். தற்போது நமக்கு போட்டியாக சைனாவும் களத்தில் வந்துவிட்டது. 2000ம் வருடம் அந்த நாட்டிற்கு நம்முடைய ஏற்றுமதி 640 மில்லியன் டாலர்களாக இருந்தது, அப்போது சைனாவின் ஏற்றுமதி 900 மில்லியன் டாலர்களாக இருந்தது. பெரிய வித்தியாசம் இல்லாமல் இருந்தது. அதுவே, 2010ம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 2177 மில்லியன் டாலர்களாக இருந்தது, சைனாவின் ஏற்றுமதி 6789 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. பாருங்கள் எவ்வளவு வித்தியாசம்? ஆனால், பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்து பணம் வாங்குவதே ஒரு கலை தான். அந்த கலையை கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.

மில்லியன், பில்லியன்

மில்லியன் என்றால் என்ன, அது எத்தனையை குறிக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கு வரும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய குறியீடு இது. மில்லியன் என்றால் பத்து லட்சம் (அதாவது ஆறு சைபர் வரும்). ஒரு மில்லியன் டாலர் என்றால் கிட்டதட்ட 4.5 கோடி ரூபாய்கள் என்று அர்த்தம். ஒரு பில்லியன் என்றால் 4500 கோடி ரூபாய்கள் என்று அர்த்தம்.

கார்மெண்ட் ஏற்றுமதி இலக்கு

2012ம் வருடம் கார்மெண்ட் ஏற்றுமதி இலக்கு 14 பில்லியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் தேவைகள் அதிகரித்துள்ளதால் கூடுதலான ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக அளவிலான கார்மெண்ட் கண்காட்சியில் அதிகம் இறக்குமதியாளர்கள் வராதது இந்த 14 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி இலக்கை எட்ட முடியுமா என்ற கவலையையும் ஏற்படுத்துகிறது.

சைனா, இந்தியா

சைனா எப்படி ஏற்றுமதியில் இவ்வளவு புகழ் பெற்று வருகிறது. நம்மால் ஏன் அவர்களை தொட இயலவில்லை இது பலருக்கும் பல சமயத்திலும் வரும் நியாயமான சந்தேகம். சைனா எதை உற்பத்தி செய்தாலும் அது லட்சக்கணக்கில் தான் இருக்கும், விலை உலகளவில் போட்டி போடக்கூடிய அளவில் இருக்கும். அதே சமயம் பொருட்களின் தரம் என்பது இந்திய அளவில் இருக்காது. ஆதலால் அதிக எண்ணிக்கை வேண்டும் என்பவர்கள், அதே சமயம் விலையும் சிறிது குறைத்து இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சைனா பக்கம் திரும்புவார்கள். அதே சமயம் தரமாக இருக்க வேண்டும், சிறிது விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை, லட்சக்கணக்கில் தேவையில்லை பத்தாயிரக்கணக்கில் போதும் என்று நினைப்பவர்கள் முதலில் வாங்க நினைப்பது இந்திய பொருட்களைத் தாம். சில சமயம் அவசரத் தேவைக்காக இந்திய இறக்குமதியாளர்களே கோடிக்கணக்கில் சாமி படங்களை அச்சிட்டு சைனாவிடமிருந்து வாங்கியுள்ளார்கள் என்றால் பாருங்களேன்.

புண்ணாக்கு ஏற்றுமதி

புண்ணாக்கு ஏற்றுமதி கூடிக்கொண்டே வருகிறது. சென்ற வருடத்தை விட இந்த ஜுன் மதம் 58 சதவீதம் கூடுதலாகி இருக்கிறது. சென்ற வருடம் ஜுன் மாதம் 158750 டன்கள் ஏற்றுமதி செய்திருந்தோம், இந்த வருடம் ஜுன் மாதம் 250,335 டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் ஜப்பான், வியட்நாம், சைனா, தென் கொரியா, ஐரோப்பா ஆகும். இது அங்கு மாட்டுத்தீவனங்களில் கலப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. அதிகம் ஏற்றுமதி செய்யும் மாநிலங்கள் குஜராத், மஹாராஷ்டிரா, கொல்கத்தா, ஆந்திரா ஆகும்.

இந்த வார இணையதளம்

http://www.fraud.org/

என்னிடம் பல மில்லியன் டாலர்கள் இருக்கின்றன அதை பத்திரமான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும், உங்கள் மொபைல் போன் எண்ணுக்கு ஒரு மில்லியன் டாலர் லாட்டரி விழுந்துள்ளது, உங்களுக்கு லண்டன் ஒட்டலில் வேலை கிடைத்துள்ளது, உங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் பெற்றுத் தருகிறோம், டெலிமார்க்கெட்டிங் ஏமாற்றுதல்கள் போன்ற ஈமெயில்கள், எஸ்.எம்.எஸ். கள் வராதவர்கள் இந்தியாவில் குறைவு. இவர்களின் வலையில் தினந்தோறும் விழுந்து பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை, ஏன் பல லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்து கொண்டிருப்பவர்கள் அதிகம். இது போல உள்ள பல ஏமாற்றுக்களை வெளிச்சமிட்டு காட்டுவது தான் இந்த இணையதளங்களின் முக்கியத்துவம்.

கேள்விக்கு என்ன பதில்?
சங்கரன், புதுக்கோட்டை

கேள்வி: அலங்கார மீன்கள் (கொய் மீன்கள்) இறக்குமதி செய்ய முடியுமா?

பதில்:இது ஒரு ரெசிடிரிக்டெட் இறக்குமதி. டைரக்டர் ஜெனரல் ஆப் பாரின் டிரேட் அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் செய்ய முடியும்.

ராமசந்திரன்,திருச்சி

கேள்வி: இறக்குமதியாளர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி தெரிந்து கொள்வது?

பதில்: முதலில் உங்கள் பொருட்களுக்கு எந்த நாட்டில் வாய்ப்புக்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள், தேவையில்லாமல் எல்லா நாடுகளிலும் போய் உங்கள் பொருட்களுக்கு வாய்ப்புக்கள் தேடாதீர்கள். அந்த நாட்டில் உங்கள் பொருட்களை வாங்கும் இறக்குமதியாளரை இனம் காணுங்கள். பின்னர் அவரை பற்றிய நன்னம்பிக்கை அறிக்கையை இசிஜிசி, மீரா இன்பார்ம், டன் அண்ட் ப்ராட்ஸ்டீரிட் ஆகிய நிறுவனங்கள் மூலம் பெறலாம். இதை வைத்துக் கொண்டு ஏற்றுமதி செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.

அடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம். sethuraman.sathappan@gmail.com

Monday, July 25, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 6

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

சென்ற வாரம் ஏற்றுமதி உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன, அவைகளை பார்ப்போம்.

வெங்காய ஏற்றுமதி

வெங்காயம் தான் என்று சும்மா இருக்கக்கூடாது. சில சமயம் அழுகிப்போகும் அளவு விலை குறையும். சில சமயம் கண் எரியும் அளவு விலை கூடும். ஆதலால் கவனமாக இருக்க வேண்டும். தற்போது வெங்காய ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், அதன் ஏற்றுமதிகள் கூடி வருவதாலும் விலையும் கூடி வருகிறது. விலைகள் சத்தமில்லாமல் கூடி வருகிறது.

ஜுன் ஏற்றுமதி உயர்வு

சென்ற வருடம் இதே சமயங்களை வைத்துப் பார்க்கும் போது, ஏப்ரல் முதல் இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்து கொண்டே தான் வருகிறது. ஏப்ரல் மற்றும மே மாதங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் இந்த உயர்வு இருந்தது. ஆனால், ஜுன் மாதம் 46 சதவீதமாக இருக்கிறது. அதாவது ஜுன் மாத ஏற்றுமதி அளவு அமெரிக்க டாலர் மதிப்பில் 29.2 பில்லியன் டாலராக இருந்தது.

கைவினைப்பொருட்கள்

ஏற்றுமதிகைவினைப்பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாதம் கிட்டதட்ட 800 கோடி ரூபாய்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். அதிகமாக ஏற்றுமதியாகும் பொருட்கள் என்று பார்த்தால் மரம் மற்றும் மெட்டல் கைவினைப்பொருட்கள், கையால் எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள், ஜரி மற்றும் ஜரி வேலைப்பாடுள்ள துணிகள், கையால் பிரிண்ட் செய்யப்பட்ட துணிகள், இமிடேஷன் நகைகள் போன்றவை அதிகம் விற்பனையாகின்றன. முன்பெல்லாம் அதிகம் அமெரிக்கா, யூ.கே., போன்ற நாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால், தற்போது ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செய்து வருகிறோம். இமிடேஷன் நகைகள் போன்றவை சிதம்பரம் நகரில் தான் அதிகப்படியாக செய்யப்படுபவை. அங்கு செய்யப்படும் இமிடேஷன் நகைகள் மிகவும் சிறப்பாகவும், நீண்ட நாளைக்கு உழைப்பவையாக இருந்தாலும், அங்கிருந்து அதிகம் ஏற்றுமதியாவதில்லை. இந்திய கைவினைப்பொருட்கள் இன்னமும் கையால் செய்யப்படுவதாலும், வேலைப்பாடுகள் மிகவும் சிறப்பாகவும் இருப்பதாலும் அவைகளுக்கு எந்த நாட்டிலும் மதிப்பு இருக்கிறது.


ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

அதிகமாக வெளிநாட்டவர்கள் வரும் இடங்களிலெல்லாம், தமிழக அரசு ஒரு பெரிய விற்பனைக்கூடத்தை ஏற்படுத்த வேண்டும். அங்கு தமிழகத்தின் சிறந்த பொருட்களை தயாரிப்பவர்கள் அந்த விற்பனைக்கூடத்தில் நிரந்தர அரங்குகள் ஏற்படுத்த சலுகை கட்டணத்தில் அனுமதிக்கயளிக்க வேண்டும். இவற்றில் கிராமப்புறமக்கள், சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கும் வாய்ப்பளிக்கலாம். இது தமிழக பொருட்களை உலகளவில் எளிதாக கொண்டு செல்லும்.

கிருஸ்துமசுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள்

சாதாரணமாக கிருஸ்துமசுக்கான ஆர்டர்கள் 6 மாதம் முன்னமே வரத் துவங்கி விடும். அப்படி வரும் ஆர்டர்களை வைத்துத்தான் அந்த வருடம் உலகம் முழுவதும் கிருஸ்துமஸ் எப்படி இருக்கபோகிறதென்ற ஒரு பல்ஸ் பார்க்கும் வாய்ப்பாக இருக்கும். நாம் தீபாவளிக்கு முன்பு ஆடி சேல் போட்டு பொருட்களை விற்றுவிட்டு, புதிய பொருட்களை ஷெல்பில் கடைகளில் அடுக்குவது போல அவர்கள் கிருஸ்துமசுக்கு செய்வார்கள். இந்த வருடம் தோல் பொருட்கள், கைவினைப்பொருட்கள், துணிமணிகள், ஆயத்த ஆடைகள் ஆகியவகைகளுக்கான கிருஸ்துமஸ் ஆர்டர்கள் சிறப்பாக வரத்துவங்கியுள்ளன. இவை சிறப்பாகவும் இருக்கின்றன.

தோல் பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி

உலக அளவிலான தோல் பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி டெல்லியில் இந்த மாதம் 28ம் தேதியிலிருந்து நடக்கவுள்ளது. உலக அளவில் உள்ள பெரிய 200 ஏற்றுமதி கம்பெனிகள் கலந்து கொள்கின்றன.

இந்த வார இணையதளம்

இணையதளங்கள் ஏற்றுமதிக்க்கு கண் போன்றவை. இணையம் மூலமாக பல தொழில் புரட்சிகள் நடந்து வருகின்றன. ஆதலால் ஏற்றுமதியை பற்றி நினைக்கும் போது இணையதளங்களை நினைக்காமல் இருக்க முடியாது.உணவுத்தொழில் வளர்ந்து வருவது எல்லோருக்கும் தெரிந்ததே. அதில் பல நல்ல ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளது. http://www.fooddirectories.com/ என்ற இணையதளம் உங்களுக்கு இந்த துறையில் உள்ள வாய்ப்புக்களை பற்றி கூறுகிறது. இலவசமாக பதிந்து கொள்ளும் வசதியும், பணம் கட்டி பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

கேள்விக்கு என்ன பதில்?
வெங்கடேசன், தர்மபுரி
கேள்வி
எனக்கு ஆங்கிலம் பெரிய அளவில் தெரியாது. அதே சமயம் ஏற்றுமதி செய்ய ஆசை. ஆங்கிலத்தில் உள்ளவைகளை உடனுக்குடன் தமிழில் மொழிமாற்றம் செய்து படிக்க ஏதும் வசதி உள்ளதா?

பதில்

நல்ல கேள்வி. ஏற்றுமதிக்கு மொழி ஒரு தடையே இல்லை. இருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ளவைகளை மொழி மாற்றம் செய்து படிக்க அல்லது தமிழில் உள்ளவைகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து படிக்க உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கூகுள் இணையதளம் மொழி மாற்றம் சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. 100 சதவீதம் சரியான மொழிபெயர்ப்பாக இருக்க முடியாவிட்டாலும், ஒரு 50 முதல் 60 சதவீதம் வரை சரியான மொழிபெயர்ப்பாக இது இருக்கும். கூகுள் இணையதளத்திற்கு சென்றவுடன் மேல் பக்கம் “டிரான்ஸ்லேட்” என்று இருக்கும் இடத்தை கிளிக் செய்தால் அது அந்த பகுதிக்கு செல்லும். பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்ற பகுதிகளை கிளிக் செய்து தங்களுக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டிய பகுதியை டைப் செய்தோ அல்லது காப்பி / பேஸ்ட் செய்தாலோ தங்களுக்கு தேவையான மொழிமாற்றம் செய்த பகுதி உடனடியாக கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் எங்களுக்கு எழுதுங்கள். எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

Sunday, July 17, 2011

இந்திய ஏற்றுமதி உலகம் 5


இந்திய ஏற்றுமதி உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
சென்ற வாரம் என்னென்ன நிகழ்வுகள் என்று பார்ப்போம்.

ஏலக்காய் மணக்கிறது

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தேவைகள் அதிகரித்திருப்பதால் ஏலக்காய் சிறிது அதிகமாகவே மணக்கிறது. கேரளாவைத் தவிர, தமிழ்நாட்டில் போடிநாயக்கனூரிலும் வரத்து அதிகமாகி உள்ளது. அதிகபபடியான வரத்து விலைகளை ஏறவிடாமல் தடுக்கிறது. இந்த சீசனில் வரத்து சுமார் 11529 டன்னாக இருந்தது. இது சென்ற வருடம் இதே சீசனை விட சுமார் 20 சதவீதம் கூடுதலாக இருந்தது. சராசரி விலை சென்ற சீசனில் கிலோ 867 ரூபாயாகவும், இந்த சீசனில் 1012 ரூபாயாகவும் இருந்தது.


இந்தியா மலேஷியா வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா மலேஷியா வர்த்தக ஒப்பந்தம் ஜுலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்ன லாபம்? இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசி, மாம்பழம், முட்டைகள், வாகனங்கள், காட்டன் கார்மெண்ட்ஸ் ஆகியவைகளுக்கு அங்கு குறைந்த இறக்குமதி வரி அல்லது வரி விலக்கு இருக்கும். இதனால், இந்திய பொருட்கள் அங்கு அதிகம் விற்க ஏதுவாகும். இந்த ஒப்பந்தம் புரொபஷனல் வேலையாட்கள் இந்தியாவிலிருந்து அங்கு வேலைக்கு செல்ல வழிவகுக்கும். தற்போது இந்திய மலேஷிய வர்த்தகம் சுமார் 10 பில்லியன் டாலர் அளவில் நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தினால், இது 2015ம் வருடத்திற்குள் 15 பில்லியன் டாலர் அளவுக்கு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


500 பில்லியன் டாலர் ஏற்றுமதி கனவு எப்படி நனவாகும்?

எப்படி 500 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை 2013-14 ம் வருடத்திற்குள் எட்டுவது என்பது குறித்து அரசாங்கம் ஒரு பேப்பர் வெளியிட்டுள்ளது. இதில் எஞ்சினியரிங் ஏற்றுமதி 125 பில்லியன் டாலர் அளவு எட்டுமென்றும், பெட்ரோலியம் பொருட்கள் 80 பில்லியன் டாலர் எட்டுமென்றும், மருத்துப் பொருட்கள் 25 பில்லியன் டாலர் எட்டுமென்றும், கெமிக்கல்ஸ 19 பில்லியன் டாலர் எட்டுமென்றும், எலக்ட்ரானிக்ஸ் 17 பில்லியன் டாலர் எட்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நெய் என்றால் உருகாத மனது

தற்போது நெய் என்றாலே பலர் காத தூரம் ஔடிவிடுவர். ஏனெனில் அது கொழுப்புச் சத்து மிகுந்தது என்று. ஆனால், ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது மிகவும் நல்லது என்று அமுல் நிறுவனம் தற்போது அதை பிரபலப்படுத்த தொடங்கியுள்ளது. நெய்க்கு 5000 ஆண்டு கால வரலாறு உள்ளது எனவும், ஆயுர்வேதத்தில் அதன் சிறப்புக்களை பற்றி விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது எனவும், ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டால் அது உடல்நிலையை சீராக வைக்க உதவும் எனக்கூறி பல நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகப்படுத்தி வருகிறது. தற்போது 30 நாடுகளுக்கு நெய் ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற வருடம் சுமார் 9000 கோடி ரூபாய்களுக்கு நெய் விற்பனை செய்துள்ளது, அதில் 900 கோடி ரூபாய் அளவு ஏற்றுமதி செய்துள்ளது.


மாம்பழமாம் மாம்பழம்

உலகத்தில் அதிக அளவு மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். இந்தியா 15 மில்லியன் டன் மாம்பழம் உற்பத்தி செய்கிறது. இது உலக உற்பத்தில் 50 சதவீதம் ஆகும். இந்தியாவில் 1000 மாம்பழம் வெரைட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், 20 வகைகள் தாம் மக்களிடையே மிகவும் பிரபலமானவை. இதில் அல்போன்சா, கேசர், பங்கனபள்ளி, தசேரி, லாங்டா, சாவுசா ஆகிய வகைகள் மிகவும் பிரபலமானவை. இந்தியா சென்ற வருடம் சுமார் 50 மில்லியன் டாலர் ரூபாய் அளவிற்கு மாம்பழம் ஏற்றுமதி செய்துள்ளது. அதிகம் இறக்குமதி செய்த நாடுகள் கல்ப் நாடுகள், ஐரோப்பா, தென்கிழக்கு ஆசிய நாடுகளாகும். மாம்பழக் கூழும் இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


கேள்விக்கு என்ன பதில் ?
வினய் சேது

கேள்வி: ஏற்றுமதியை பகுதி நேர தொழிலாக செய்ய முடியுமா?

பதில்: தற்போது நீங்கள் வேலை செய்து வருபவராக இருந்தால், ஏற்றுமதியின் ஆரம்பத்தை பகுதி நேரமாக செய்வது நல்லது. ஏனெனில் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைப்பது முதலில் சிறிது கடினம். அதுபோல சமயங்களில் உங்களை நீங்களே தைரியப்படுத்திக் கொள்ள தற்போது செய்து வரும் வேலை உதவியாக இருக்கும்.


கேட்டவர்கள் பலர்


கேள்வி: எத்தனை பொருட்கள் ஏற்றுமதி செய்யலாம்?

பதில்: பலரும் கேட்கும் கேள்வி இது. நீங்களே தயாரிப்பாளராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் தயாரிக்கும் பொருட்களை மட்டும் முதலில் ஏற்றுமதி செய்யத் தொடங்குங்கள். வேறு ஒருவர் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைத்தால், முதலில் அந்தப் பொருட்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் நான்கு அல்லது ஐந்து பொருட்களுக்கு மேல் ஏற்றுமதி செய்ய நினைக்காதீர்கள். இந்த முறை உங்களுக்கு வெற்றியை தரும்.


இந்த வார இணையதளம்

ஏற்றுமதி சம்பந்தமாக பல நாடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும், பல மக்களை பார்க்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் பழக்க வழக்கங்கள் வித்தியாசப்படும். எந்த நாட்டுக்கு செல்லும் போது எப்படி அந்த நாட்டவருடன் பழக வேண்டும், பேச வேண்டும், எப்படி உடைகள் அணியவேண்டும் என்பதை எடுத்துக் கூறும் இணையத்தளம் http://www.executiveplanet.com/


உங்கள் கேள்விகளை அனுப்பி வைக்கவேண்டிய ஈமெயில் முகவரிSethuraman.sathappan@gmail.com

Sunday, July 10, 2011

ஏற்றுமதி உலகத்தில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம். 4

ஏற்றுமதி உலகத்தில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

ஜொலிக்கும் வைரம்

குழந்தைகளை தங்கமே, வைரமே என்று அம்மாக்கள் கொஞ்சுவார்கள். குழந்தைகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தங்கம், வைரம் பெண்களுக்கு. அந்த அளவு நம் நாட்டுக்கும் முக்கியம் வைரம் ஏற்றுமதி. இந்தியா, உலகளவில் அதிகளவு பட்டை தீட்டப்படாத வைரத்தை இறக்குமதி செய்து அதை பட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இது பல லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை தருவதுடன், இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பங்கும் வகிக்கிறது. சென்ற வருடம் மே மாதம் ஏற்றுமதி செய்யப்பட்டதை விட இந்த வருடம் மே மாதம் 24 சதவீதம் கூடுதலாக, அதாவது இந்த வருடம் மே மாதம் மட்டும் 2.22 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 10,000 கோடி ரூபாய்கள்) அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி

கானா நாட்டுக்கு சென்ற நமது இந்திய இஞ்சினியர் ஒருவர் தற்போது அந்த நாட்டின் பெரிய விவசாய விளைபொருட்கள் உற்பத்தியாளராகியுள்ளார். அதாவது சுமார் 2200 ஹெக்டேர் அளவில் விவசாயம் செய்து வருகிறார். ரிசோர்சஸ் ஆப்பிரிக்கா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார், இதன் மூலம் ஏற்றுமதியும் செய்து வருகிறார். இது போல பெரிய அளவில் உற்பத்தி செய்யும் போது தான் உள்நாட்டு விற்பனையாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு விற்பனையாக இருந்தாலும் சரி போட்டி போட இயலும். கூட்டுறவு முறையில் பல நபர்கள் ஒன்றாக சேர்ந்தால் இந்தியாவிலும் இதுவும் சாத்தியமே.


மங்கும் மெழுகுவர்த்தி ஏற்றுமதி

மெழுகுவர்த்தி தொழிலுக்கு தேவையான மெழுகின் விலை கூடிக்கொண்டே செல்கிறது. மேலும், அதை பேக் செய்ய உதவும் போர்டின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதானல், சிறிய அளவில் மெழுகுவர்த்தி தயார் செய்து விற்பனை செய்பவர்கள் மிகவும் பாதிக்கபப்ட்டுள்ளார்கள். இது தவிர உலக அளவில் நம்மால் போட்டி போட இயலவில்லை. கச்சா எண்ணெய் விலை கூடுவது தான் காரணம். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இவர்களின் வாழ்வில் ஒளி வருகிறதா என்று பார்ப்போம்.

பத்தமடை, தைக்கால், திருச்சி பாய்கள்

ஒரு காலத்தில் பர்மா பாய்கள் மிகவும் பிரசத்தி பெற்றவை. நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எதை பர்மாவில் இருந்து கொண்டு வருகிறார்களோ இல்லையோ, பர்மாவிலிருந்து பாய்கள் கொண்டு வர மறக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு பாய்கள் அங்கு மிகவும் பிரபலம். அந்த அளவிற்கு நமது பத்தமடை, தைக்கால், திருச்சி கோரைப்பாய்கள் மிகவும் பிரபலம். தற்போது அந்த தொழில் நசிந்து வருகிறது. ஏற்றுமதிக்கு மிகவும் வாய்ப்புள்ள தொழில் இது. அதாவது, நல்ல தரமான கோரை பாய்கள் தவிர, கோரைகள் மூலமாக திரைசீலைகள், யோகா மேட் போன்றவைகளும், மற்ற பல உபயோகமான பொருட்களும் தயாரிக்கலாம். தரமான பொருட்களுக்கு நல்ல விலைகள் கொடுத்து வாங்க வெளிநாட்டில் பலர் தயாராக இருக்கிறார்கள். இந்த தொழில் நசித்துப் போகும் முன்பு அரசாங்கம் ஒரு புத்துயிர் கொடுக்க வேண்டும்.


டெக்ஸடைல்ஸ் மற்றும் ஆயத்த ஆடைகள்

2005ம் வருடத்திலிருந்து 2010ம் வருடம் வரை உள்நாட்டு ஆயத்த ஆடைகள் விற்பனை 6.2 சதவீதம் கூடியுள்ளது. இந்த துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? ஆயத்த ஆடைகளின் விற்பனை வளர்ச்சி வருடத்துக்கு 9 சதவீதம் இருக்கும். ஏற்றுமதி 12 பில்லியன் டாலர்களை கடக்கும் எனவும் கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இஞ்னியரிங் பொருட்கள் ஏற்றுமதி

இந்தியாவின் இஞ்சினியரிங் பொருட்கள் ஏற்றுமதி, அதாவது டிரான்ஸ்போர்ட் சாதனங்கள், கேபிடல் குட்ஸ், மெஷினரிகள், கேஸ்டிங், போர்ஜிங்ஸ் மற்றும் பாஸ்ட்னர்ஸ் போன்றவைகளின் ஏற்றுமதி கூடிக்கொண்டே செல்கிறது. அதாவது மே மாதம் மட்டும் 7.9 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்துள்ளோம் (கிட்டதட்ட 35,500 கோடி ரூபாய்கள் மதிப்பிற்கு). இந்த வருடம் 72 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த வருட ஏற்றுமதியில் கிட்டதட்ட இது மூன்றில் ஒரு பகுதிக்கு சிறிது குறைவாகும். தமிழ்நாட்டில் இந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகம், ஆதலால் ஏற்றுமதி வாய்ப்புக்களும் அதிகம்.


இந்த வார இணையதளம்

http://www.toboc.com/கனடா நாட்டை சேர்ந்தவர்களால் உருவாக்கபப்ட்ட இணையதளம். 222 நாடுகளில் உள்ள ஏற்றுமதி / இறக்குமதியாளர்களை இணைக்கும் இணையதளம். உபயோகமான டிரேட் லீட்களை தருகிறது.பணம் கட்டி சேரவேண்டும் என்ற கட்டுபாடு இருந்தாலும், முதல் மூன்று மாதம் இலவசமாக மெம்பராகவும் வாய்ப்புக்கள் உள்ளது.


கேள்விக்கு என்ன பதில்?

ராமநாதன், மதுரை

கேள்வி: ஏற்றுமதிக்குஅடிப்படையாக செய்ய வேண்டியது என்ன?

பதில்: நிறைய பேர் தமிழ்நாட்டில் ஏற்றுமதி செய்ய துடிக்கிறார்கள். எந்த ஒரு தொழிலில் இறங்க விரும்பினாலும், அந்த தொழிலைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் ஏற்றுமதி தொழிலில் இறங்க விரும்புபவர்கள் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள / படிக்க பொறுமை இல்லை. ஏற்றுமதி குறித்து பல புத்தகங்கள் தமிழில் / ஆங்கிலத்தில் வந்துள்ளன. அவற்றை படித்து ஏற்றுமதி நடைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இது தவறில்லாத ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். மேலும், தங்களின் பாடுபட்ட பணம் காணாமல் போக உதவும். ஏனெனில் ஏற்றுமதியில் வெளிநாட்டில் இருந்து உங்களிடம் சரக்கு வாங்குபவரகளை பார்க்கும் வாய்ப்புக்கள் குறைவு. ஆதலால், நடைமுறைகளில் ஏதும் தவறு வராத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும்.


அறிவழகன், திருச்சி

கேள்வி:இந்தியாவிலிருந்து என்னென்ன பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளது?

பதில்:இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு ஏர்றுமதி வாய்ப்புக்கள் இருந்தாலும், உங்களுக்கு தெரிந்த / அறிந்த பொருட்களையே ஏற்றுமதி செய்வது நல்லது. மேலும், உங்கள் குடும்பம் தற்போது செய்து வரும் / தயாரித்து வரும் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைத்தால் அது தான் நல்ல முடிவாக இருக்கும். அதுவே உங்கள் ஏற்றுமதியின் தொடக்கமாக இருக்கலாம். அதன் பிறகு மற்ற பொருட்களுக்கு உங்கள் ஏற்றுதியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். தெரியாத பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது பல பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது.


கேள்விகள் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.comஅடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம்.

Monday, July 4, 2011

ஏற்றுமதி உலகம்

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

காரமான ஏற்றுமதி

இந்த வருடம் மிளகு ஏற்றுமதி சிறிது குறையும் போல இருப்பதால், விலைகளிலும் பெரிய முன்னேற்றம் இல்லை. உலக அளவில் வியட்நாம் தான் அதிகம் மிளகு உற்பத்தி செய்கிறது. வியட்நாம் வருடத்திற்கு 110,000 டன்கள், இந்தியா 48,000 டன்கள், இந்தோனேஷியா 37000 டன்கள், பிரேசில் 35000 டன்கள், மலேஷியா 25000 டன்கள், சைனா 23000 டன்கள், இலங்கை 17000 டன்கள் மற்றும் தாய்லாந்து 9700 டன்கள். உலகளவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடும் வியட்நாம் தான். கடந்த வருடம் சுமார் 56000 டன்கள் ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா 18850 டன்கள் ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 383 கோடி ரூபாய்களாகும். ஒரு கிலோ 203 ரூபாய் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வருடம் ஒரு கிலோ 158 ரூபாய் என்ற அளவில் தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்குஉலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு என்ன தெரியுமா?

1.4 சதவீதம் தான். இதை 2020 வருடத்திற்குள் 5 சதவீதமாக கூட்டுவதற்கு அரசாங்க முயற்சிகள் எடுத்து வருகிறது.

வரும் மாதங்களில் ஏற்றுமதி குறையுமா?

ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக இருந்தது. இன்னும் சில மாதங்களில் டி.ஈ.பி.பி. திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் எடுக்கப்பட்டுவிடும், அதானால் ஏற்றுமதிகள் குறையும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அப்படி டி.ஈ.பி.பி., திட்டம் எடுக்கப்படும் பட்சத்தில், ஏற்றுமதியாளர்கள் நஷ்டமடையாத அளவு ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று டிஜிஎப்டி டைரக்டர் ஜெனரல் கூறியுள்ளார். இது நிச்சியம் ஏற்றுமதியாளர்கள் வயிற்றில் பால் வார்த்த மாதிரி தான்.

கனடா தேடும் இந்தியா

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு சுமார் 42 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு வருடத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம் கனடாவிலிருந்து இறக்குமதி சுமார் 2.1 பில்லியன் டாலர்கள் தான் செய்கிறோம். உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டாவது நாடாக இருக்கும் கனடாவிற்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.


எக்சிம் வங்கியும், ஆப்பிரிக்க நாடுகளும்

எக்சிம் வங்கி எத்தியோப்பியா நாட்டிற்கு 91 மில்லியன் டாலர்களும், டான்சானியா நாட்டிற்கு சுமார் 36 மில்லியன் டாலர்களும் லைன் ஆப் கிரிடிட் கடனாக கொடுத்துள்ளது, சமீபத்தில் நமது பிரதமர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று வந்ததும், அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதை பற்றியும் கூறியது நினைவிருக்கலாம்.

மலேஷியாவிற்கு ஏற்றுமதி செய்யலாமா?

இந்திய-மலேஷிய வர்த்தக உறவுகள் பலப்பட்டு வருகின்றன. 2011 வருடத்தில் முதல் நான்கு மாதத்தில் மட்டும் சுமார் 30 சதவீதம் வர்த்தகம் கூடியுள்ளது. இந்தியா அதிகம் இறக்குமதி செய்வது எலக்டிரிக்கல், எலக்டிரானிக் சாமன்கள், குரூடு பெட்ரோலியம், கெமிக்கல், பாமாயில் முதலியவவை. அதே சமயம் இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்வது மெஷினரிகள், அயர்ன் அன்டு ஸ்டீல், மெட்டல், அப்ளையன்சஸ போன்றவையாகும். இது தவிர இந்தியர்கள் அங்கு அதிகம் உள்ளதால் அங்கு அவர்களுக்கு தேவையான பொருட்களும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவின் தடை பாகிஸ்தானின் ஆதாயம்

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த வருடம் 2 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இன்னும் பல லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யவுள்ளது.

ஏற்றுமதி வட்டி விகிதங்கள்

உலக அளவில் வட்டி விகிதங்கள் கூடாததால் ஏற்றுமதி கடன்களை ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு பணத்திலே (பாரின் கரன்சி பிசிஎப்சி) பெற நினைக்கிறார்கள். அதற்கு வட்டி விகிதஙகள் குறைவு என்ற காரணம் தான். ஆனால், பல வங்கிகளிடம் வெளிநாட்டு பணமாக கொடுக்க வசதிகள் இல்லை. ஆதலால், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி கடனை ரூபாயாக வாங்க வேண்டியுள்ளது. அதற்கு வட்டி விகிதங்கள் அதிகம். இதனால் பல வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுடன் விலையில் போட்டி போட முடியவில்லை. சிறிய கம்பெனி வைத்திருப்பவர்களுக்கு, அதாவது எஸ்.எஸ்.ஐ. கம்பெனிகள் வைத்திருப்பவர்களுக்கு 7 சதவீதத்திலும், மற்ற கம்பெனிகளுக்கு 9 சதவீதத்திலும் ரூபாய் ஏற்றுமதிக் கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வார இணையதளம்
www.edb.gov.sg
வர்த்தகம் செய்ய வாய்ப்புள்ள் நாடுகள், பாதுகாப்பான நாடு என்று எடுத்துக் கொண்டால் அதில் சிங்கப்பூரும் நிச்சியம் வரும். உலகத்தில் வர்த்தகம் செய்ய சிறப்பான நாடுகள் என்ற வரிசையில் 6வது இடத்தில் இருக்கிறது சிங்கப்பூர். அந்த நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அங்குள்ள வர்த்தக வாய்ப்புக்களை அறிந்து கொள்ளவும் உதவும் அரசாஙக இணையத்தளம்.

கேள்விக்கு என்ன பதில்?
கிரிகரி, அமெரிக்கா (ஈமெயில் மூலம்)

கேள்வி: பனை வெல்லம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில்: சர்க்கரை ஏற்றுமதிக்கு தான் தடை இருக்கிறது. சில சமயம் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது ஏற்றுமதிக்கு வாய்ப்புக்களுக் அளிக்கப்படுகிறது. ஆனால், பனைவெல்லம் ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை.

ஹரி, பாபநாசம்

கேள்வி:விபூதி ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில்:நிச்சியம் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், வாய்ப்புக்கள் குறைவு. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் உள்ள நாடுகளை தான் நீங்கள் குறிவைத்து ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய வேண்டும். அதுவும் அங்குள்ள ஆலயங்களை தொடர்புகொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து ஏற்றுமதி செய்யலாம். பெரிய அளவு ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புக்கள் இல்லாவிடினும், தொடக்கம் சிறியதாக இருப்பது மிகவும் நல்லது. சிறிது சிறிதாக மற்ற பூஜைப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக்கள் உங்களை தேடிவரும்.

அடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம். sethuraman.sathappan@gmail.com

Friday, July 1, 2011

வினய் சேது கேள்விக்கு பதில்


vinay sethu said...
GREETING OF THE DAY SIR,I WAS VERY MUCH IMPRESSED BY YOUR ARTICLE AND I DECIDED TO START EI BUSINESS.I HAVE LIST OF QUERIES REQ EXPORT IMPORT BUSINESS:
1. SHALL I DO THIS BUSINESS AS PART TIME BUSINESS
you are already in business or job, it is better to start as a part-time. But much efforts are required when you do part time.
2. I HAVE HEARD THAT FOR OPENING EIC CURRENT ACCOUNT IS NEEDED? IS IT MANTADORY
Yes. In your company name you have to open a current account with a bank (with an authorized dealer who deals in foreign exchange). Normally all the banks are authorized dealers except co-operative banks.
3. ONCE I OPEN MY EIC WHAT WOULD BE MY NEXT STEP
You have to obtain a PAN, Local registrations, if required for the company, Current Account. Then only you have to go for IEC (import export code number). It is better to go to promotion council registration later when you are about get an order. Otherwise, I have seen lot of people just register and pay Rs.5000 to Rs.6000 unnecessarily expecting orders and the same has to be paid every year. Hence, it is better to pay when you are about to get an order.