Sunday, January 1, 2012

ஏற்றுமதி / இறக்குமதி கடன்களை டாலரில் வாங்குவதா? ரூபாயில் வாங்குவதா?, மிளகு, யோகா ஏற்றுமதி, டெனிம், இந்திய துறைமுகங்கள், உலகத்தில் வேகமாக வளர வாய்ப்புள்ள நாடுகள்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

ஏற்றுமதி / இறக்குமதி கடன்களை டாலரில் வாங்குவதா? ரூபாயில் வாங்குவதா?
ஏற்றுமதி / இறக்குமதி கடன்களை டாலரில் வாங்குவதா? ரூபாயில் வாங்குவதா என்று பலருக்கு சந்தேகம் இருக்கும். தற்போதைய நிலையில் டாலரில் வாங்குவது நல்லது. ஏனெனில் டாலர் வட்டி விகிதங்கள் மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம் டாலரில் கடன்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. அவ்வளவு டாலர் ஷார்ட் ஆக இருக்கிறது. டாலர் லோன் கிடைக்கும் பட்சத்தில் டாலரில் வாங்குவது தற்போதும் நல்லது. ஆனால், இறக்குமதியாளர்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்து வருவதால், இறக்குமதி லோனை டாலராக வாங்கும் பட்சத்தில் அதற்கு பார்வர்ட் காண்டிராக்ட் போடுவது நல்லது. அப்படி பார்வர்ட் காண்ட்ராக்ட் போட்ட பின்னும் டாலர் லோன் லாபம் என்றால் வாங்கலாம்.


மிளகு

உலகளவில் மிளகு விலை குறைந்து வருகிறது. அதாவது அக்டோபர் மாதம் ஒரு டன் 8350 டாலராக இருந்த விலை, நவம்பர் மாதம் 7150 ஆக குறைந்து விட்டது. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு கீழே விழுந்ததால் இந்த விலை குறைவு இந்திய விற்பனையாளர்களை அதிகம் பாதிக்கவில்லை. ஏனெனில் ரூபாய் மதிப்பும் அந்த அளவு குறைந்திருந்தது. ஆனால் உள்நாட்டில் ஒரு கிலோ 370 என்ற அளவிலேயே இருக்கிறது. சென்ற வருடம் ஒரு கிலோவிற்கு ரூபாய் 250 வரை தான் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. உலகத்தின் அதிக அளவு மிளகு ஏற்றுமதியாளரான வியட்நாமில் சரக்குகள் இல்லாததால் இந்திய மிளகுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்புக்கள் வந்திருக்கிறது. இருந்தாலும், கேரளாவில் மிளகு பயிரிடுவதை விட ரப்பர் பயிரிடுவதையே அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் அதில் அதிக லாபம் கிடைப்பதால் தான்.

யோகா ஏற்றுமதி
யோகாவை உலகுக்கு தந்தது இந்தியா என்று எல்லோருக்கும் தெரியும். யோகக்கலையை உலகத்திற்கு தந்ததிற்காக உலகமே நம்மை தற்போது போற்றி வருகிறது. இதனால், இந்திய யோகா டீச்சர்களுக்கு உலகளவில் பெரிய வரவேற்பு உள்ளது. சைப்ரஸ், கயானா, யேமன், துனிஷியா ஆகிய நாடுகளில் யோகா சென்டர்களில் நிறுவப்பட்டு வருகிறது. யோகா டீச்சர்களை ஏற்றுமதி செய்வோம்.. வாருங்கள்.


டெனிம்

உங்களுக்கு தெரியுமா? உலகம் முழுவதும் ஜீன்ஸ்  இன்று மிகவும் புகழ்பெற்று உள்ளது. ஜீன்ஸ்  இந்தியாவில் முதலில் போடப்படாவிட்டாலும், இன்று ஜீன்ஸ்  தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் துணி தயாரிப்பதில் ஒரு இந்திய நிறுவனம் தான் உலகத்தின் நம்பர் ஒன்னாக இருக்கிறது. ஆமாம், அஹமதாபாத்தை சேர்ந்த அரவிந்த் மில்ஸ்  தான் உலகத்தின் நம்பர் ஒன் டெனிம் துணி தயாரிப்பாளர்கள். இவர்கள் கம்பெனியை சேர்ந்தது தான் ஆரோ பிராண்ட். தற்போது டெனிம் துணிகளில் பல புதுமைகளை புகுத்த திட்டமிட்டுள்ளார்கள். அதாவது, காக்கி டெனிம், டிஜிட்டல் டெனிம், எக்சல் டெனிம் போன்ற துணிகளை அறிமுகப்படுத்தவுள்ளார்கள்.


இந்திய துறைமுகங்கள்
ஏற்றுமதிக்கு துறைமுகங்கள் மிகவும் முக்கியம். இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதம் கப்பல் மூலமாகவே செல்கிறது. அதில் 60 சதவீதம் கன்டெய்னர்கள் மூலமாக செல்கிறது. இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் உள்ளது. இதில் சென்னை துறைமுகம் 4வது இடத்தை பெற்றுள்ளது. இந்திய துறைமுகங்கள் 2010-11ம் வருடத்தில் 870 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாண்டுள்ளன. வரும் 2020ம் வருடத்தில் இந்திய துறைமுகங்கள் சுமார் 3130 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாளும் வகையில் இருக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது.. ஏற்றுமதி இன்னும் 10 வருடத்தில் பல மடங்கு பெருகப் போகிறது.


உலகத்தில் வேகமாக வளர வாய்ப்புள்ள நாடுகள்

உலகத்தில் வேகமாம வளர வாய்ப்புள்ள நாடுகள் என்ற ஆய்வில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தாம் வெகு வேகமாக வரும் காலத்தில்
வளரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக யுகாண்டா, கென்யா, டான்சானியா போன்ற நாடுகள். காரணம் என்ன? அங்குள்ள இயற்கை வளம், உழைக்க ரெடியாக இருக்கும் மக்கள் போன்றவை. பாதகமாக உள்ள அம்சங்கள் தொடர்ந்து நடைபெறும் கொலை, குற்றங்கள், பெருகி வரும் எய்ட்ஸ்  போன்ற நோய்கள். இவைகளை கட்டுப்படுத்த அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் வருங்காலத்தில் இந்த நாடுகள் செழிப்பாக வாய்ப்புக்கள் நிறைய உண்டு. இந்திய ஏற்றுமதிக்கும் வாய்ப்புள்ள நாடுகள் இவை.


கேள்விக்கு என்ன பதில்?

கேள்வி:இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் புளி அதிகம் விளைகிறது?

பதில்:புளி தென் மாநிலங்களில் மட்டுமே விளைகிறது. ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகத்தில் மட்டுமே அதிகம் விளைவிக்கப்படுகிறது. 2,00,000 டன்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இதில் பொரும்பலும் உள்நாட்டிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. மிகவும் குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது.


கேள்வி:மூலிகைகள் என்று நாம் குறிப்பிடுவதில் மிகவும் முக்கியமான பயிர்கள் யாவை?

பதில்:இந்தியாவில் நூற்றுக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும், முக்கியமானவை என்று பிரித்து பார்த்தால் அதில் அஸ்வகாந்தா, செனா, பிரமி, அமலா (நெல்லி), சட்டாவாரி, பாசில், ரோஸ்மேரி, வெட்டிவேர், லெமன்கிராஸ், மென்தால் ஆகியவை வரும். இந்த லிஸ்ட் மிகவும் நீளமானது, பதில் சொல்வது மிகவும் கடினம்.


இந்த வார இணையதளம்www.wlw.com
Wlw என்றால் who supplies what என்று அர்த்தம். அதாவது இந்த இணையதளத்தின் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் யார் என்ன பொருட்களை சப்ளை செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும். ஜெர்மனி, ஆஸதிரியா, சுவட்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், ஸ்லோவேனியா, க்ரோஷியா, பின்லாந்து, யு.கே., இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளில் உள்ள ஏற்றுமதி / இறக்குமதியாளர்களை தெரிந்து கொள்ள உதவும் இணையதளம்.

இந்தத் தொடரைப் பற்றிய கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmal.com
 

No comments:

Post a Comment