Sunday, December 18, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம், போலி ஆர்டர்கள் உஷார், மீன்கள் ஏற்றுமதி, வெங்காயம்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


இந்த தொடருக்கு வரும் பாராட்டுக்களை பார்க்கும் போது  மகிழ்சியாக இருக்கின்றது. இனி  சென்ற வார ஏற்றுமதி உலகத்தை பார்ப்போம்.


போலி ஆர்டர்கள் உஷார்

ஏற்றுமதி செய்ய ஆர்வம் பலருக்கு இருப்பதால், ஆர்டர் ஏதும் கிடைத்து விட்டால் வானத்துக்கும், பூமிக்கும் குதித்து விட்டு யாரிடமும் இது பற்றி சொல்வதில்லை. சொன்னால், அந்த ஆர்டரை அந்த நண்பர் செய்து விடுவாரோ என்ற எண்ணமும் தலை தூக்கி விடுகிறது. ஆதலால், ரகசியத்தை காப்பது போல் காத்து ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறார்கள். என்னிடம் சந்தேகம் கேட்கும் போது கூட யாரிடமிருந்து ஆர்டர் வந்துள்ளது, என்ன ஆர்டர் வந்துள்ளது என்று கூறுவதில் சிறிது தயக்கம். எங்கே ஆர்டர் போய்விடுமோ என்ற பயம் தான் காரணம். ஆனால், உண்மையில் நடப்பது என்ன? பலர் தங்களுக்கு வரும் ஆர்டரை உண்மையான ஆர்டரா இல்லை போலியா என்று கூட பார்ப்பதில்லை. இதுவோ பல இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அவர் நேரடியாக வருவார், சரக்கை பார்த்து விட்டு சென்றுவிடுவார் (சரக்கு நன்றாக இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்கு). பின்னர் ஆர்டர் வரும். நீங்கள் சரக்குகளை அனுப்புவீர்கள், அவர் டாக்குமெண்டில் குறை கண்டுபிடித்து சரக்குகளை நிராகரித்து விடுவார். சரக்குகளை நிராகரித்து விடும் போது உங்களுக்கு பயம் வந்து விடும், ஆதலால் பெரிய தள்ளுபடிகள் கொடுத்து நீங்கள் மீதிப்பணத்தை பெறவேண்டி இருக்கும். இதற்காக தான் சொல்வது ஏற்றுமதியில் ஒவ்வொரு படியும் மிகவும் முக்கியம். அவசரப்படக்கூடாது. தமிழ்நாட்டில் ஏற்றுமதி டாக்குமெண்ட்கள் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. உங்களுக்கு எல்.சி. மற்றும் டாக்குமெண்ட்களில் சந்தேகம் வரும் போது உடனடியாக எங்களுக்கு மெயில் செய்யுங்கள், இலவசமான ஆலோசனைகளைப் பெறுங்கள். நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம் பத்திரமாக இருக்க இது உதவும்.


மீன்கள் ஏற்றுமதி

மீன்கள் ஏற்றுமதி ஆந்திரா சிறந்து விளங்கி வருகிறது. அங்கிருக்கும் விவசாயிகள் மீன்கள் வளர்ப்பதிலும், மார்க்கெட்டிங் செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் தற்போது சிறந்து விளங்கி வருகிறார்கள். நெல்லூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, சிரிகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இந்த தொழில் சிறந்து விளங்கி வருகிறது. மீன் வளர்ப்பது மட்டும் முக்கியம் அல்ல, அதற்கான கட்டமைப்பு வசதிகளும் தேவை. அதாவது ஐஸ்   பேக்டரிகள், பாக்கேஜிங் வசதிகள் போன்றவை. இவைகளையும் இவர்களே ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பது தான் ஆச்சரியம். தற்போது அமெரிக்கா, ஜப்பான், யூ.கே., ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

வெங்காயம்

வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ஒரு டன்னுக்கு 250 அமெரிக்க டாலர்கள் என்று குறைக்கப்பட்டுவுள்ளது. இதனால், வெங்காயத்திற்கு சிறிது டிமாண்ட் கூடியுள்ளது. நாசிக்கில் இருக்கும் யுனைடெட் பசிபிக் அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி அதிக அளவில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

கேள்விக்கு என்ன பதில்

சுதர்சன்

கேள்வி
ஒ.இ.எம். என்றால் என்ன?
 பதில்
ஒ.இ.எம். என்றால் ஒரிஜினல் எக்யூவிப்மெண்ட் மெனுபெக்சரர் என்று அர்த்தம். அதாவது, நீங்கள் ஒரு கம்பெனி வைத்துள்ளீர்கள், ஏற்றுமதி செய்யப் போகும் பொருளை நீங்கள் தான் தயாரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் தாம் ஒ.இ.எம். எனப்படுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்த கேள்வியை உங்களிடம் கேட்பார்கள். ஏனெனில் சரக்குகள் உங்களிடம் இருந்து தான் வருகிறதா, இல்லை வேறு யாரிடமாவது நீங்கள் வாங்கித் தருகிறீர்களா என்று தெரிந்து கொள்வதற்காகத் தான்.
ராமசாமி
திருப்பூர்


கேள்வி
எனக்கு ஏற்றுமதி மூலம் வரும் டாலரை, டாலராகவே வங்கியில் வைத்துக் கொள்ள முடியுமா?

பதில்
தாராளமாக முடியும். ஈ.ஈ.எப்.சி., என்ற கணக்கின் கீழ், அதாவது எக்சேஞ் ஏனர்ஸ் பாரின் கரன்சி என்ற கணக்கில் வரும் வெளிநாட்டு பணத்தை அப்படியே வைத்துக் கொள்ளலாம். பிறகு வேண்டும் போது மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இந்த பணத்திற்கு வட்டி கிடைக்காது. வங்கியில் ஏற்றுமதிக்காக கடன்கள் வாங்கியிருந்தால் அதை முதலில் செலுத்த வேண்டும், மீதியைத் தான் இந்தக் கணக்கில் வைத்துக் கொள்ள இயலும்.

இந்த வார இணையதளம்
www.textrendsindiafair.com

டெல்லியில் ஜனவரி 19 முதல் 21 வரை பிரகதி மைதானில் நடக்கவிருக்கும் பெரிய கண்காட்சி இது. இதில் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தபட்ட 1000 ஸ்டால்கள் இருக்கும். டெக்ஸ்டைல்ஸ் தவிர, கார்பெட், கைவினைபொருட்கள், சணல் பொருட்கள் ஹாண்ட்லூம், சில்க், பேஷன் ஜுவல்லரி,  ஆகியவையும் காட்சியில் இருக்கும். டெல்லியும் பார்த்தது போல இருக்கும், கண்காட்சியும் பார்த்தது போல இருக்கும்.

இந்த தொடர் சம்பந்தமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி
sethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment