Sunday, November 13, 2011

சென்ற வாரம் ஏற்றுமதி உலகம் - 18, சிவகாசி வெடி, காய்கறிகள் ஏற்றுமதி, எந்த வங்கியில் கணக்கு வைக்கலாம்?, கார்பெட் ஏற்றுமதி, சிட்பியின் மார்க்கெட்டிங் உதவி, தஞ்சாவூர் ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


சிவகாசி வெடி
இந்திய அளவில் சிவகாசி என்றாலே பட்டாசு தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு புகழ் பெற்ற சிவகாசி பட்டாசு ஏற்றுமதியில் இன்னும் பெரிய அளவு வளரவில்லை. பல தடைகள் அவர்களுக்கு இருந்தாலும், தொடர்ந்து அவர்கள் விற்பனை கூடிக்கொண்டு தான் இருக்கிறது. ஏற்றுமதிக்கு இன்னும் விலை போட்டியாக இருக்க வேண்டும், குறிப்பாக அவர்கள் சீனாவுடன் போட்டி போடும் அளவிற்கு விலை வைக்க வேண்டும், மிஷனரி மூலமாக வெடி தயாரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். சீனா தான் இதிலும் நமது நாட்டிற்கு போட்டியாக உள்ளது.


காய்கறிகள் ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து காய்கறிகள் நிறைய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதில்லை. அருகிலுள்ள நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதியாகிறது. மத்திய கிழக்கு நாடுகள், பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நோபாள், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறது.
 

எந்த வங்கியில் கணக்கு வைக்கலாம்?
பலர் பல சமயத்தில் கேட்கும் கேள்வி இது. அந்நிய செலாவணி விஷயங்களை கையாளும் வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைப்பதே உத்தமமானது. கூட்டுறவு வங்கிகளில் சில வங்கிகளில் தான் அந்நிய செலாவணி விஷயங்களை கையாளுவார்கள். அதே சமயம், எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வைக்கலாம்.



கார்பெட் ஏற்றுமதி
உலகளவில் இந்திய கார்பெட்களுக்கும் நல்ல மவுசு இருக்கிறது. விலை சகாயமாகவும் இருப்பதாலும், வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமாகவும் இருப்பதாலும் இவை விரும்பப்படுகின்றன. இதன் ஏற்றுமதியை கூட்டுவதற்கென்றே ஒரு ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் இருக்கின்றது. தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருகின்ற நாடுகளை தவிர மற்ற நாடுகளிலும் தற்போது மார்க்கெட்டிங் செய்ய இந்த கழகம் உதவி வருகிறது. குறிப்பாக பிரேசில், துபாய், சைனா, ஜப்பான், சிலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மிகவும் நுணுக்கமான பட்டுப்புடவைகள் நெய்பவர்கள் இருந்தாலும், கார்பெட் நெய்யும் கலை இன்னும் வரவில்லை. இது ஒரு குறைதான். தமிழ்நாட்டின் சீதோஷண நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.



சிட்பியின் மார்க்கெட்டிங் உதவி
சிட்பி சிறுதொழில் செய்பவர்களுக்கு மார்க்கெட்டிங் செய்ய பலவகைகளில் உதவுகிறது. வர்த்தக கண்காட்சிகளில் பங்குபெறவும், அது உள்நாட்டு கண்காட்சியாகவும் இருந்தாலும் சரி, வெளிநாட்டு கண்காட்சியாக இருந்தாலும் சரி. மேலும், வாங்குபவர், விற்பவர் இடையே நடக்கும் மீட்களில் கலந்து கொள்ளவும் இன்னும் பல வழிகளிலும் உதவுகிறது. சிட்பி வங்கியை தொடர்பு கொண்டு அவர்களின் உதவிகளை பெற முயலுங்கள்.



கேள்விக்கு என்ன பதில்?

கோபாலகிருஷ்ணன்
தஞ்சாவூர்

கேள்விதஞ்சாவூர் ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

பதில்இந்திய ஓவியங்களுக்கு, குறிப்பாக தஞ்சாவூர் ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், நல்ல முறையில் இந்த வகை ஓவியங்கள் மார்க்கெட்டிங் செய்யப்படவில்லை. அது தான் குறை. இந்த வகை ஓவியர்களை அல்லது விற்பவர்களை ஒருங்கிணைத்து ஏற்றுமதி முயற்சிகள் செய்யப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எல்லா வழிகாட்டுதலும் இந்த பகுதி மூலம் கிடைக்கும். மேலும், பத்தமடை, தைக்கால் போன்ற இடங்களில் பாய் நெய்பவர்கள் போன்று ஒரு இடத்தில் / ஒரு ஊரில் இருந்து சிறப்பான கலையை பரப்பி வருபவர்களுக்கு ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கேள்வி
கலையரசி
மேட்டூர்
2011-12ம் ஆண்டு 300பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு இருக்கிறது? அதற்கு முந்தைய ஆண்டுகளில் எவ்வளவு ஏற்றுமதி செய்திருக்கிறோம்?

பதில்2009-10ம் ஆண்டில் 178 பில்லியன் டாலர்களும், 2010-11ம் ஆண்டில் 246பில்லியன் டாலர்களும் ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்த ஆண்டு 300பில்லியன் டாலர்கள் கிட்டே நெருங்க வாய்ப்புக்கள் மிகவும் அதிகம்.
 


சென்ற வார இணையதளம்www.international.gc.ca

கனடாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விரும்புபவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய உபயோகமான அரசாங்க இணையதளம். இதில் கனடாவைப் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இது தவிர பல நாடுகளைப் பற்றியும் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன.


தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

No comments:

Post a Comment