விலை வீழ்ச்சியால் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு
மஞ்சள் விலை வீழ்ச்சியால், அதன் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில் மஞ்சள் உற்பத்தியில், இந்தியா 78 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து சீனா (8 சதவீதம்), மியான்மர் (4 சதவீதம்), நைஜீரியா (3 சதவீதம்) மற்றும் வங்கதேசம் (3 சதவீதம்) ஆகியவை உள்ளன.
இந்நிலையில், சென்ற ஆண்டில் மஞ்சள் விலை 75 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. தற்போது, ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒரு கிலோ மஞ்சள் 33-34 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 167-170 ரூபாயாக இருந்தது.
மஞ்சள் விலை குறைந்ததால், அதன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்திய மஞ்சளுக்கு மிகப் பெரிய சந்தையாக ஐக்கிய அரபு எமிரேட் விளங்குகிறது. அடுத்த இடங்களில் மலேசியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
மஞ்சள் உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்திய மஞ்சளில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட "கர்குமின்' என்ற பொருள்தான் அதன் விலையை நிர்ணயிக்கிறது. இந்திய மஞ்சளில் இது அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாகவே, சர்வதேசச் சந்தையில் இந்திய மஞ்சளுக்கு தேவை அதிகரித்து வருகிறது.