ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
ஏற்றுமதி உலகத்திலும் பங்குச் சந்தை போல ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. எந்த ஒரு தொழிலிலும் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
களிமண்ணும் கலையாகும், ஏற்றுமதியாகும்
சமீபத்தில் பரிதாபாத்தில் நடைபெற்ற சுரஜ்கண்ட் கைவினைபொருட்கள் மேளாவில் களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மிகுந்த மவுசு இருந்தது. பிண்டோ பர்மானி என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கலைஞர் களிமண்ணால் செய்து பேப்ரிக் கலரால் பெயிண்ட் செய்யப்பட்டிருந்த பென் ஸ்டாண்ட், வால் செயின், பிள்ளையார், ராதாகிருஷ்ணா, யாணைகள், குதிரைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை மிகுந்த வரவேற்பை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களிடமிருந்து பெற்றன. மண்டையில் என்ன களிமண்ணா இருக்கு என்று இனி நாம் யாரையும் கேட்க மாட்டோம்.
ஜனவரி ஏற்றுமதி உயர்வு
ஜனவரி மாத ஏற்றுமதி சென்ற வருடம் இதே காலத்தை விட 10 சதவீதம் கூடி 25.4 பில்லியன் டாலராக இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜனவரி வரை ஏற்றுமதி 242 பில்லியன் டாலராக இருக்கிறது. மார்ச் மாத இறுதியில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 300 முதல் 305 பில்லியன் டாலராக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட டார்கெட்டான 300 பில்லியனை எட்டி பிடித்து விடும். ஆனால் அடுத்த வருட டார்கெட்டை எட்டுவது தான் குதிரைக் கொம்பாக இருக்கும்.
பொதினா ஆயில் ஏற்றுமதி
இந்தியா உலகின் மிகப்பெரிய பொதினா உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராகும். பொதினா இலைகளிலிருந்து எடுக்கப்படும் மிண்ட் ஆயில் (பொதினா ஆயில்) அதிகப்படியாக உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும், மிட்டாய் தயாரிப்பிலும், மருந்துகள் தயாரிப்பிலும், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது. இந்தியாவிலிருந்து 17000 முதல் 20000 டன்கள் வரை கடந்த மூன்று வருடத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1200 முதல் 1700 கோடி ரூபாய்கள் வரையாகும்.
கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி
வருடத்திற்கு 3500 கோடி ரூபாய் மதிப்புள்ள கைவினைப் பொருட்கள் பானிப்பட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு மட்டும் 350 ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள் ஒரு முறை சென்று பார்க்க வேண்டிய ஊர். அப்போது தான் ஒரு ஐடியா கிடைக்கும்.
டாலரும் ரூபாயும்
டாலருக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றுக் கொண்டே வந்தது.
49க்கும் கீழே சென்று ஏற்றுமதியாளர்களை பயமுறுத்தியது. தற்போது சுமார் 70 பைசா வரை வலுவிழந்து 49 ரூபாயை தாண்டியுள்ளது.
பாகிஸ்தான் இந்தியா வர்த்தகம்
இந்தியா பாகிஸதான் வர்த்தகம் தற்போது வருடத்திற்கு 2.7 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது 2001ம் வருடம் 144 மில்லியனாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து நிறைய பொருட்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது காட்டன், கன்பெக்ஷனரி பொருட்கள், ஆர்கானிக் கெமிக்கல்ஸ், காய்கறிகள் போன்றவை. காய்கறிகள் போன்றவை மட்டும் சென்ற ஆண்டு 350 கோடி ரூபாய்களுக்கு மேல் ஏற்றுமதியாகியுள்ளது.
இந்த வார இணையதளம்
www.indiayellowpagesonline.com
இந்தியாவில் பொருட்கள் தயாரிப்பவர்களின் பெயர் மற்றும் விலாசங்கள், அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் நீங்கள் தயாரிக்கும் பொருட்களை யார் யார் தயாரிக்கிறார்கள், விலை விபரம் எப்படி என்று அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். இது போன்ற பல யெல்லோ பேஜஸ் இருக்கின்றன.
கேள்வி பதில்
அரசு
சமயபுரம்
கேள்வி
திருச்சி பகுதியில் வாழை அதிகம் விளைகிறது. ஏற்றுமதி வாய்ப்புக்கள் எப்படி?
பதில்
இந்தியா உலகளவில் அதிகம் வாழைப்பழம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் ஏற்றுமதி மிகக்குறைந்த அளவே செய்கிறோம். ஏற்றுமதிக்கு தகுந்த வெரைட்டிகளை உற்பத்தி செய்வதில்லை என்பதே காரணம். ஆனால் வாழைக்காய் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதை முயற்சி செய்யலாம். திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையத்தில் இதற்கென நிறைய பயிற்சிகள் தருகிறார்கள்.