சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
இந்தத் தொடருக்கு கிடைத்து வரும் ஆதரவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாசகர்கள் பலர் பல கேள்விகள் கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில்கள் அனுப்புகிறேன். மேலும், பலருக்கும் உபயோகமான கேள்விகளை இந்தத் தொடரிலும் சேர்க்கிறேன். இனி சென்ற வார ஏற்றுமதி உலகத்திற்குள் செல்வோம்.
ரூபாயின் தொடர்ந்த உயர்வு
ஏற்றுமதியாளர்களை சில மாதங்களுக்கு முன்பு மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தற்போது தலைகீழாக மாறிவிட்டது. 50 ரூபாய் வரை ரேட் வைத்து தங்களது சரக்குகளுக்கு விலை நிர்ணயம் செய்திருந்தவர்களே கையை பிசையும் நிலை. 53 ரூபாய் வரை வைத்திருந்தவர்களை கேட்கவே வேண்டாம்.
டாலரின் எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது. வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும், ஒடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பது போன்ற கதை தான். தற்போது டாலர் மதிப்பு 49 ரூபாய்க்கும் கீழே வந்துள்ளது. ஏன் இப்படி அநியாத்திற்கு கூடிக்கொண்டே செல்கிறது என்றால் இரண்டு காரணங்கள். ஒன்று, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அதிக அளவில் இந்தியாவிற்கு பணங்களை அனுப்புவது. இரண்டாவது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் அதிக அளவு முதலீடு செய்வது.
2013ம் வருடமும், ஏற்றுமதி டார்கெட்டும்
2013-14ம் வருடத்திற்கு ஏற்றுமதி டார்கெட் 500 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி அடைவது என்பதைப் பற்றி கர்நாடாக பியோ (FIEO) ஒரு கருத்தரங்கத்தை வரும் பிப்ரவரி மாதம் மங்களூரில் ஏற்பாடு செய்துள்ளது.
மாம்பழம் ஏற்றுமதி
பாகிஸதானில் மாம்பழம் ஏற்றுமதிக்கு USAID (United States Agency for International development) நிறைய உதவிகள் செய்து வருகிறது. நமது கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழ உற்பத்தியாளர்களும் ஏன் அவர்களை தொடர்பு கொண்டு உற்பத்தி மற்றும் விற்பனை முயற்சிகளை கூட்டுவதற்கு வாய்ப்புக்களை உருவாக்ககூடாது. இவர்களுக்கு இந்தியாவிலும் அலுவலகம் உள்ளது. www.usaid.gov/in/ என்பது அவர்களின் இணையதள முகவரி.
மிளகாய் வற்றலும் ஏற்றுமதியும்
சென்ற வாரம் மிளகாய் ஏற்றுமதியை பற்றி பார்த்தோம். இந்த வாரமும் பார்ப்போம். ஏனெனில் இன்னும் காரம் குறையவில்லை ஆனால் விலை குறைந்து வருகிறது. விலை குறைவது பல ஏற்றுமதியாளர்களையும், உள்ளூர் வியாபாரிகளையும் கவலையைடையச் செய்துள்ளது. புதிதாக காண்டிராக்ட் போடுபவர்களுக்கு நல்ல லாபம்.
காதலர்கள் தினமும், ரோஸ் ஏற்றுமதியும்
ரோஸ் ஏற்றுமதி இந்த வருடம் 8 முதல் 10 சதவீதம் வரை கூடியுள்ளது. குறிப்பாக புனேயில் உற்பத்தி கூடியுள்ளது. கோடை காலத்தில் 4 செ.மீ வரை இருக்கும் ரோஸகள், குளிர்காலத்தில் 5 செ.மீ. வரை இந்தியாவில் தற்போது இருக்கிறது. மேலும், ரூபாய் மதிப்பு சமீபகாலத்தில் குறைந்ததும் நாம் கென்யாவை விட விலை குறைத்து கொடுக்க வாய்ப்புக்கள் இருந்த்து. இது எல்லாம் காதலர்கள் தினத்தை உலகம் சிறப்பாக கலர்புல்லாக கொண்டாட நமது ஏற்றுமதியாளர்களும் ஒரு காரணமாக இருக்கப் போகிறோம். ஹோசூர் ரோஜாக்களும் உலகின் பல பகுதிகளுக்கும் செல்கின்றன என்பது குறிப்பிடதக்கது.
அரிசி ஏற்றுமதி
பாசுமதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து அதிகம் வருகிறது.
கண்காட்சிகள்
கண்காட்சிகள் ஏற்றுமதியாளர்களின் கண்களை திறக்கும் ஒரு உன்னதமான அதிகம் செலவில்லாத ஒரு வாய்ப்பாகும்.
மார்ச் 27, 28, மும்பை, உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்கள் கண்காட்சி
இந்தக் கண்காட்சிகளுக்கு செல்வதால் என்ன லாபம்? உங்கள் பொருட்கள் சம்பந்தப்பட்ட புதிய ஐடியாக்கள் கிடைக்கலாம், இதுவரை நீங்கள் கையால் தயார் செய்து கொண்டிருந்தவைகளுக்கு இயந்திரங்கள் மூலம் தயாரிக்க முடியுமா அப்படியெனில் அந்த இயந்திரங்கள் எங்கு கிடைக்கும், யார் தயாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம், பல தரப்பட்ட வியாபாரிகளைக் காணலாம், பிசினஸ் டீலிங்க்ஸ் நடக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு.
கேள்விக்கு என்ன பதில்?
கருணாகரன்
கோவை
கேள்வி
வெளிநாட்டிற்கு எப்படி பாக்கிங் செய்யப்பட வேண்டும்?
பதில்
இந்தக் கேள்வி ஏற்றுமதி செய்ய நினைப்பவர்களுக்கு பல சமயங்களில் வருவதுண்டு. பாக்கிங் வெளிநாட்டிலிருந்து உங்களிடம் சரக்குகள் வாங்குபவர் எப்படி கூறுகிறாரோ அப்படித்தான் இருக்கவேண்டும். உதாரணமாக இங்கு ரெடிமேட் சட்டைகள் வாங்கினால் அதற்கு அழகான அட்டைப்பெட்டி போட்டு அதில் வைத்துத்தான் பல இடங்களில் கொடுப்பார்கள். அப்படி இருந்தால் தான் நமக்கும் வாங்கிய ஒரு திருப்தி இருக்கும். ஆனால், வெளிநாடுகளுக்கு அனுப்பும் போது அவர்கள் சட்டையை அட்டைப்பெட்டி, பிளாஸடிக் பை போன்றவற்றில் போடவிரும்பமாட்டார்கள். சட்டையை வாங்கிய பிறகு அந்த பிளாஸடி பையையும், அட்டைப்பெட்டியையும் எப்படி அப்புறப்படுத்துவது என்ற கேள்வியும் வருவதால் தான். இது ஒரு சிறிய உதாரணம் தான். இது போன்று பல உள்ளது. ஆதலால் பேக்கிங் எப்படி செய்யப்படவேண்டும் என்பது பற்றி கான்டிராக்டிலேயே போட்டுக் கொள்வது நல்லது.
இந்தத் தொடர் குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரிsethuraman.sathappan@gmail.com