Sunday, January 29, 2012

நெல்லிக்காய் ஏற்றுமதியாகிறது?, ஊறுகாய் ஏற்றுமதி, விளைந்து கெடுக்கும் வெங்காயம், யுசிபி என்றால் என்ன?


சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்



நெல்லிக்காய் ஏற்றுமதியாகிறது?

நெல்லிக்காய்க்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளதா? இது பலர் பல சமயத்தில் கேட்கும் கேள்வி. ஏற்றுமதி வாய்ப்புக்களை விட உள்நாட்டு வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது. அதாவது இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவம் வளர்ந்து வருகிறது. அதற்கு நெல்லிக்காய் அதிகம் தேவைப்படுகிறது. குறிப்பாக ஆயுர்வேத மருத்துக் கம்பெனிகளும் (டாபர், சராக், ஹிமாலயா, ஹிமாமி போன்ற கம்பெனிகள்), கேரளாவில் ஆயுர்வேத மருத்துக் கம்பெனிகளும் பெருமளவில் வாங்குகின்றன. தமிழ்நாட்டில் என்ன குறைவு என்றால் தரமான பொருட்கள் தயாரிப்பவர்கள் அதை மார்க்கெட்டிங் சரிவர செய்வதில்லை. அது தான் குறை. அதை நிவர்த்தி செய்தால் தமிழ்நாட்டுப் பொருட்கள் எங்கோயே போய் நிற்கும். மேலும், அரசாங்க ஆதரவும் தேவை.


ஊறுகாய் ஏற்றுமதி

ஊறுகாயை உள்நாட்டில் விற்பதை விட வெளிநாட்டில் விற்பது எளிதாக இருக்கிறது என்று பெரிய ஊறுகாய தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெடேகர், ருச்சி, நிலான், ஏடிஎப் புட்ஸ்  (சோல் பிராண்ட்) ஆகியோர் பெரிய ஊறுகாய் தயாரிப்பாளர்கள். இவற்றில் பெடேகர் 100 வருடம் பாரம்பரியம் உள்ளது. பூனேவை சேர்ந்த நிலான் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.

யார் வாங்குகிறார்கள்? வெளிநாட்டவர்களிடையே ஊறுகாய அதிகம் பிரபலமாகவிட்டாலும் நம்மவர்கள் வாழும் நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறது.


விளைந்து கெடுக்கும் வெங்காயம்

வெங்காயத்தின் ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 150 டாலராக அரசாங்கம் குறைத்துள்ளது. அதாவது ஒரு கிலோ 7.50 ரூபாய் வரை வருகிறது. ஆனால் உள்நாட்டில் 2.50 ரூபாய் வரை தான் மொத்த மார்க்கெட்டில் (மஹாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரா) விலை இருக்கிறது. இது போல தான் உருளைக்கிழங்கு வடமாநிலங்களில் விளைந்து கெடுக்கிறது. ஒரு கிலோ ரூபாய் 1 வரை மொத்த விலையில் வந்து நிற்கிறது. சென்ற வருடம் இதே சமயத்தில் வெங்காயம் விலை கூடி எல்லோர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.  நமது நாட்டுக்கு தற்போது என்ன தேவை? அதிகப்படியான உணவுப்பொருட்களை சேமித்து வைக்க குளிர்சாதனக் கிடங்குகள் தான் தற்போதைய அவசிய தேவை.



கேள்விக்கு என்ன பதில்?

ராமராஜ்
கரூர்

கேள்வி
யுசிபி என்றால் என்ன?

பதில்
யுசிபி என்பது Uniform Customs and Practice for Docuemntary Credits ன் சுருக்கம் ஆகும். அதாவது உலகளவிலான ஏற்றுமதி / இறக்குமதிக்கான டாக்குமெண்டுகளுக்கான விதிகளாகும். 39 விதிகள் உள்ளன. புரிந்து கொள்வது கடினம். ஆனால் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் தெரிந்து வைத்திருக்கவேண்டியதாகும். எல்.சி. மூலம் ஏற்றுமதி செய்யும் போது நல்ல சரக்குகள் தயாரிப்பது மட்டும் ஏற்றுமதியில் முக்கியமில்லை, தவறில்லாத டாக்குமெண்டுகளும் முக்கியம் ஆகும்.


ராமையா
வேலூர்
 
கேள்வி
தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்கள் என்னென்ன?

பதில்
எந்தப் பொருளுக்கும் ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது. அதை மார்க்கெட்டிங் செய்யும் விதத்தில் தான் உங்களின் திறமை அடங்கியிருக்கிறது. ஒரு பொருளை ஏற்றுமதி செய்ய நினைக்கும் முன், அந்த பொருளைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியம். பொருளைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லையென்றால் உங்களை பலர் ஏமாற்ற வாய்ப்புக்கள் உண்டு.


இந்த வார இணையதளம்


நிறைய முறை சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புகிறோம். யாரிடமிருந்து செய்வது என்ற கேள்வி வரும். அப்படி வரும் பட்சத்தில் உங்களுக்கு இந்த இணையதளம் உதவும். எல்லா வகையான பொருட்கள் தயாரிப்பவர்களைப் பற்றிய தகவல்களும் இருக்கிறது. சென்று பாருங்கள்.


இந்தத் தொடர் குறித்து உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய முகவரிsethuraman.sathappan@gmail.com


Sunday, January 22, 2012

தேன், ஆயுர்வேதம், இருதரப்பு ஒப்பந்தங்கள், மாட்டு மாமிசம்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

ஏற்றுமதி உலகம் புதுவருடத்தில் நல்ல பல முன்னேற்றங்களை பெறவேண்டும் என்று வாழ்த்தி தொடங்குவோம் புதுவருட ஏற்றுமதியை.

தேன்
உணவுப்பொருட்கள் ஏற்றுமதியில் மிகுந்த கவனம் வேண்டும் என்பதற்கு தேன் ஒரு உதாரணம். பல நாடுகள் தங்கள் நாடுகளுக்கு இறக்குமதி ஆகும் உணவுப்பொருட்களை பலமாக பரிசோதித்து தான் உள்ளேயே எடுத்துச் செல்வார்கள். உதாரணமாக தேன் என்றால் அதன் அடித்தங்கலில் எவ்வளவு சதவீதம் கலப்படம் இருக்கிறது என்று பார்ப்பார்கள். அதில் அதிகப்படியாக இருந்தால் அந்தத் தேனை அந்த நாட்டுக்குள் விடமாட்டார்கள். இது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன.


ஆயுர்வேதம்சைனா வருடந்தோறும் ஆயுர்வேத மருந்துகளை 5000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் ஆயுர்வேதத்தின் அடிப்படையன 5000 வருடம் பாரம்பரியம் கொண்ட இந்தியா 500 கோடி ரூபாய் அளவிற்குத்தான் வருடந்தோறும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஆயுர்வேத பொருட்களின் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளன.


இருதரப்பு ஒப்பந்தங்கள்
ஏற்றுமதிக்கு நாடுகளின் இருதரப்பு ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியம். பல ஏற்றுமதியாளர்களுக்கு அப்படி ஒப்பந்தங்கள் இருப்பதே தெரிவதில்லை. ஆதலால் அந்த ஒப்பந்தங்களின் படி உள்ள லாபங்களை அடைய முடிவதில்லை. இனிமேல் ஏற்றுமதி செய்யும் போது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் இருக்கிறதா, அதனால் நீங்கள் செய்யும் ஏற்றுமதிக்கு லாபங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து செய்யவும்.
கைவேலைப்பாடுகள் நிறைந்த துணிவகைகள்
இந்தியா இந்தத் துறையில் உலகளவில் பெரிய அளவில் வரும் வாய்ப்புக்கள் உள்ளதாக தஸகரி ஹாத் சமிதி தெரிவித்துள்ளது. இந்த சமிதியில் சுமார் 1500 கைவினைஞர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் இது வரை உலகத்தின் பல பாகங்களிலும் சுமார் 100 கைவினை பஜார்களை நடத்தியுள்ளனர். நீங்கள் கைத்திறன் மிக்கவரா? உடனடியாக இந்த சமிதியில் இணைந்துக் கொள்ளுங்கள், உலகின் பல வாய்ப்புக்கள் உங்களைத் தேடிவரச் செய்யுங்கள்.


மாட்டு மாமிசம்இந்தியாவில் பல பகுதிகளில் மாட்டு மாமிசம் அதிகளவில் சாப்பிடப்படுகிறது. அதாவது ஆட்டு, பன்றி மாமிசத்தை விட அதிக அளவில் சாப்பிடப்படுகிறது என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். அதே சமயம் இந்தியாவிலிருந்து மாட்டு மாமிசம் அதிகளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அமெரிக்காவிற்கு மட்டும் 1.28 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளர் என்ற அந்தஸதையும் பெற்றுள்ளது.


சென்ற வார இணையதளம்www.thebrazilbuisness.com
வெளிநாட்டு வணிகம் செய்பவர்கள் பிரேசில் தவிர்த்து வணிகம் செய்வது குறைவு. அந்தளவுக்கு பிரேசில் பல நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்துப் பார்க்கும் போது பிரேசில் உலகின் 6வது இடத்தில் இருக்கிறது. இது யு.கே., இத்தாலி, கனடா, ஸ்பெயின் ஆகிய நாடுகளை விட முன்பு இருக்கிறது. பிரேசிலின் ஏற்றுமதியை விட இறக்குமதி குறைவாகும். டிரேட் சர்ப்ளஸ் 30 பில்லியன் டாலர் இருக்கிறது. சோயா பீன், இரும்பு தாது ஆகியவை அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஆகும். அந்த நாட்டுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்களை அறிந்து கொள்ள மேலே கண்ட இணையதளம் உங்களுக்கு உதவும்.


கேள்விக்கு என்ன பதில்?
ராமசாமி
உடையார்பாளையம்
கேள்வி
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ஏகத்துக்கும் கீழே விழுந்துள்ளது. மற்ற கரன்சிகளுக்கு எதிராக ரூபாய் எப்படியுள்ளது என்று கூறவும்.
பதில்
கரன்சி மதிப்புக்கள் பல ஆங்கில வர்த்தக தினசரிப் பத்திரிக்கைகளில் வருகின்றது. சமீபத்திய நிலவரத்தை கீழே கொடுத்துள்ளோம்.
ஆஸதிரேலியா டாலர்   ரூபாய் 53.75
பிரிட்டிஷ் பவுண்டு   ரூபாய் 81.10
கனடா டாலர்    ரூபாய் 51.45
யூரோ      ரூபாய் 66.94
ஹாங்காங் டாலர்    ரூபாய்  6.69
ஜப்பானிய யென்  (100)   ரூபாய் 67.84
சிங்கப்பூர் டாலர்    ரூபாய் 40.49
யூஏஈ திர்காம்    ரூபாய் 14.1
அமெரிக்க டாலர்    ரூபாய் 52.44

இந்த தொடர் பற்றிய கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுத வேண்டிய முகவரி sethuraman.sathappan@gmail.com

Sunday, January 15, 2012

முடியும் ஏற்றுமதியாகிறது?, இந்திய கார்பெட்கள், பத்தமடைப் பாய்கள், ராஜகுமாரிக்கு ஒரு இந்திய ரோஜா, இந்த வார இணையதளம்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


முடியும் ஏற்றுமதியாகிறது?

தலையில் இருந்து கீழே விழுந்தவுடன் முடிக்கு என்ன மதிப்பு என்று தான் நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால், உண்மை வேறு. முடி தலையில் இருந்தாலும் மதிப்பு தான், கீழே விழுந்தாலும் மதிப்பு தான். மொட்டை அடிக்கப்படும் போது எடுக்கப்படும் முடி தான் அதிக அளவில் சுத்தப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களாக சீனா இந்திய முடியை அதிகம் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியா வருடத்திற்கு 1100 கோடி ரூபாய் அளவிற்கு முடியை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆமாம், முடி எங்கிருந்து கிடைக்கிறது? திருப்பதி, பழனி போன்ற இடங்களில் இறக்கப்படும் முடி தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரேசில், ஹாங்காங், அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளும் இந்திய முடியை அதிக அளவில் வாங்குகின்றன. வாங்கி என்ன செய்யும்? சிறிய முடியாக இருந்தால் ஒரு விதமான கெமிக்கல் தயாரிப்பதற்கும்,

நீளமுடியாக இருந்தால் விக் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் தங்கள் முடிகளை நன்கு பராமரித்து வருவதாலும், மற்ற நாடுகளைப் போல இல்லாமல் சுருள் முடிகளும் இருப்பதாலும் மற்ற நாடுகளில் இந்திய முடிகளுக்கு மதிப்பு அதிகமாக உள்ளது. அடுத்த தடவை உங்கள் முடியை நீங்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை செய்தால் அந்த முடி எந்த நாட்டில் இருக்கிறதோ என்று யோசிக்கலாம்.


இந்திய கார்பெட்கள்
இந்திய கார்பெட்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக காஷ்மீர் கார்பெட்கள் வேலைப்பாடுகள் மிகுந்தவை, விலையும் அதிகம். எவ்வளவுக்கு எவ்வளவு வேலைப்பாடுகள் அதிகமோ அவ்வளவுக்கு அதிகம் விலை. அடுத்த முறை சென்னை போன்ற ஊர்களுக்கு போகும் போது காஷ்மீர் எம்போரியத்தில் சென்று கார்பெட்களை பார்க்கத் தவறாதீர்கள். வருடத்திற்கு 700 மில்லியன் டாலர் (சுமார் 3500 கோடி ரூபாய்கள் அளவு) அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கார்பெட்டிலே பலவகைகள் உள்ளது. காட்டன் கார்பெட், உல்லன் கார்பெட், கைவேலைப்பாடுகள் நிறைந்த சில்க் கார்பெட், சிந்தெடிக் கார்பெட் என்று பலவகையான கார்பெட்கள் உள்ளது.


பத்தமடைப் பாய்கள்

பத்தமடைப் பாய்களின் சரித்திரம் அழிந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. பாயில் படுக்கும் காலமெல்லாம் போய் கட்டிலும், மெத்தையும் வந்து விட்டது. பாய் என்றாலும், அது பிளாஸடிக் பாயாகத்தான் இருக்கவெண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஏனெனில் நீண்டகாலம் உழைக்க வேண்டுமே என்ற எண்ணம் தான். ஆதலால் மக்களின் நடுத்தர வர்க்கம் அல்லது அதற்கு மேலே உள்ளவர்கள் பாயை மறந்து விட்டார்கள். தற்போது பத்தமடையை சேர்ந்த ஒருத்தருடன் பேசிக்கெண்டிருந்த போது அவர் கூறினார், பத்தமடையில் தற்போது ஒரு சில குடும்பங்களே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பாய் தவிர மற்ற பொருட்களும் தயாரிக்கப்படுவதாகவும் வியாபாரங்கள் பெரிய அளவில் இல்லை என்றும் கோரையும் தூரத்திலிருந்து கொண்டு வரவேண்டியிருப்பதாகவும் கூறினார். ஏற்றுமதிக்கு இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு இணையதளம் ஆரம்பித்தால் அது அவர்களின் ஏற்றுமதிக்கு உதவும்.


ராஜகுமாரிக்கு ஒரு இந்திய ரோஜா

மலர்களிலேயே ரோஜாவைப் பார்த்தவுடன் மனதுக்கு ஒரு தனி மகிழ்ச்சி வந்து விடும். அந்த அளவிற்கு அதன் அழகே தனி. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு ஒரு சரியான நேரத்தில் ஏற்பட்டிருப்பதால் (அதாவது கிருஸதுமஸ, புத்தாண்டு, காதலார்கள் தினம் போன்ற நேரத்தில்) அது இந்திய ரோஜாப் பூக்கள் ஏற்றுமதிக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளது. வருடத்திற்கு இந்தியாவிலிருந்து 25 முதல் 30 மில்லியன் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு பூ இங்கிருந்து வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்யப்படும் போது 10 முதல் 20 சென்ட் வரை விற்கப்படுகிறது. வருடத்திற்கு 350 மில்லியன் ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு முண்ணனி வகிக்கிறது. இந்தியாவிலிருந்து யு.கே. ஆஸதிரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, நியுசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


இந்த வார இணையதளம்

www.philb.com/countryse.htm

பொதுவாக தேடும் தளம் என்றால் சின்ன குழந்தை கூட கூகுள் சர்ச் பண்ணுங்க என்று சொல்லிவிடும். ஆனால், சில சமயம் நாடு தழுவிய சர்ச் இஞ்சின் அந்த நாட்டைப் பற்றிய இன்னும் சில விபரங்களை அதிகமாக தரும். ஆதலால் பல சமயங்களில் அந்த நாட்டில் சிறப்பாக இயங்கும் இணையதளத்தை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கும். அப்படி 167க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள 1500க்கும் மேலே உள்ள நாடு தழுவிய இணையதளங்களை பற்றிய தகவல்கள் அடங்கியது <http://www.philb.com/countryse.htm>


தங்களுக்கு இந்த தொடர் சம்பந்தமாக எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com <mailto:sethuraman.sathappan@gmail.com>

Sunday, January 8, 2012

அரிசி ஏற்றுமதி, தலித் தொழிலதிபர்கள், கயிறும் ஏற்றுமதியாகிறது, கொய்யாப்பழம் ஏற்றுமதி,

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


அரிசி ஏற்றுமதி


இந்தியாவிலிருந்து 2011-12 வருடம் மட்டும் 7 மில்லியன் டன்கள் அரிசி ஏற்றுமதியாகியுள்ளது. சென்ற வருடம் இதன் அளவு 2.2 மில்லியன் டன்னாக இருந்தது. பாசுமதி அல்லாத அரிசிக்கு இருந்த ஏற்றுமதி தடையை நீக்கியது, நல்ல விளைச்சல், அதிகம் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸதான் போன்ற நாடுகளின் விளைச்சல் குறைந்தது ஆகியவை இந்தியாவின் ஏற்றுமதி கூடுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு விழுந்ததும் அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய லாபங்களை தரும்.


தலித் தொழிலதிபர்கள்
தலித் மக்களில் தொழிலபதிர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள். தலித் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ என்று அந்த அமைப்புக்கு பெயர். இவர்கள் எல்லாம் சேர்ந்து ரத்தன் டாடா தலைமையில் மூன்று நாள் டிரேட் பேர் சமீபத்தி நடத்தினார்கள். 200 தலித் தொழிலதிபர்கள் பங்கு பெற்ற இந்த டிரேட் பேர் அவர்களின் உள்நாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கும், ஏற்றுமதிக்கு வழி வகுத்தது. பல தொழில் வாய்ப்புக்கள் முடிவு செய்யப்பட்டன. 


கயிறும் ஏற்றுமதியாகிறது
2010-11 கயிறு மற்றும் கயிறு பொருள்கள் ஏற்றுமதி, 808 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இந்தியாவில், தேங்காய் நார் மூலம் தயாரிக்கப்படும் கயிறு மற்றும் கயிறுசார்ந்த பொருள்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு பெருகி வருகிறது. கைத்தறி, விசைத்தறி தரைவிரிப்புகள், கயிற்றினால் ஆன ஜவுளிகள், ரப்பருடன் இணைந்த கயிறு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்திய கயிறு மற்றும் கயிறு பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளும் நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
நம் நாட்டின் கயிறு மற்றும் கயிறு பொருள்களை 111 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன.


கொய்யாப்பழம் ஏற்றுமதி
கொய்யாபழம் ஏற்றுமதியில் உலகளவில் இந்தியாவிற்கு தாம் முதலிடம். பாகிஸதான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகள் மத்திய கிழக்கு நாடுகள், யு.கே., சுவுதி அரேபியா, கனடா ஆகியவை. கொய்யா பிரஷ்ஷாகவும், வேல்யு அடிசன் செய்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் மிகச் சிறந்த கொய்யாகாய்கள் மஹாராஷ்டிராவில் நாசிக் மற்றும் ஷிரடி ஆகிய இடங்களில் தாம் விளைகிறது. அங்குள்ள பழங்கள் அவ்வளவு சுவை.

இந்த தொடர் பற்றிய கருத்துக்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் sethuraman.sathappan@gmail.com

Sunday, January 1, 2012

ஏற்றுமதி / இறக்குமதி கடன்களை டாலரில் வாங்குவதா? ரூபாயில் வாங்குவதா?, மிளகு, யோகா ஏற்றுமதி, டெனிம், இந்திய துறைமுகங்கள், உலகத்தில் வேகமாக வளர வாய்ப்புள்ள நாடுகள்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

ஏற்றுமதி / இறக்குமதி கடன்களை டாலரில் வாங்குவதா? ரூபாயில் வாங்குவதா?
ஏற்றுமதி / இறக்குமதி கடன்களை டாலரில் வாங்குவதா? ரூபாயில் வாங்குவதா என்று பலருக்கு சந்தேகம் இருக்கும். தற்போதைய நிலையில் டாலரில் வாங்குவது நல்லது. ஏனெனில் டாலர் வட்டி விகிதங்கள் மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம் டாலரில் கடன்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. அவ்வளவு டாலர் ஷார்ட் ஆக இருக்கிறது. டாலர் லோன் கிடைக்கும் பட்சத்தில் டாலரில் வாங்குவது தற்போதும் நல்லது. ஆனால், இறக்குமதியாளர்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்து வருவதால், இறக்குமதி லோனை டாலராக வாங்கும் பட்சத்தில் அதற்கு பார்வர்ட் காண்டிராக்ட் போடுவது நல்லது. அப்படி பார்வர்ட் காண்ட்ராக்ட் போட்ட பின்னும் டாலர் லோன் லாபம் என்றால் வாங்கலாம்.


மிளகு

உலகளவில் மிளகு விலை குறைந்து வருகிறது. அதாவது அக்டோபர் மாதம் ஒரு டன் 8350 டாலராக இருந்த விலை, நவம்பர் மாதம் 7150 ஆக குறைந்து விட்டது. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு கீழே விழுந்ததால் இந்த விலை குறைவு இந்திய விற்பனையாளர்களை அதிகம் பாதிக்கவில்லை. ஏனெனில் ரூபாய் மதிப்பும் அந்த அளவு குறைந்திருந்தது. ஆனால் உள்நாட்டில் ஒரு கிலோ 370 என்ற அளவிலேயே இருக்கிறது. சென்ற வருடம் ஒரு கிலோவிற்கு ரூபாய் 250 வரை தான் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. உலகத்தின் அதிக அளவு மிளகு ஏற்றுமதியாளரான வியட்நாமில் சரக்குகள் இல்லாததால் இந்திய மிளகுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்புக்கள் வந்திருக்கிறது. இருந்தாலும், கேரளாவில் மிளகு பயிரிடுவதை விட ரப்பர் பயிரிடுவதையே அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் அதில் அதிக லாபம் கிடைப்பதால் தான்.

யோகா ஏற்றுமதி
யோகாவை உலகுக்கு தந்தது இந்தியா என்று எல்லோருக்கும் தெரியும். யோகக்கலையை உலகத்திற்கு தந்ததிற்காக உலகமே நம்மை தற்போது போற்றி வருகிறது. இதனால், இந்திய யோகா டீச்சர்களுக்கு உலகளவில் பெரிய வரவேற்பு உள்ளது. சைப்ரஸ், கயானா, யேமன், துனிஷியா ஆகிய நாடுகளில் யோகா சென்டர்களில் நிறுவப்பட்டு வருகிறது. யோகா டீச்சர்களை ஏற்றுமதி செய்வோம்.. வாருங்கள்.


டெனிம்

உங்களுக்கு தெரியுமா? உலகம் முழுவதும் ஜீன்ஸ்  இன்று மிகவும் புகழ்பெற்று உள்ளது. ஜீன்ஸ்  இந்தியாவில் முதலில் போடப்படாவிட்டாலும், இன்று ஜீன்ஸ்  தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் துணி தயாரிப்பதில் ஒரு இந்திய நிறுவனம் தான் உலகத்தின் நம்பர் ஒன்னாக இருக்கிறது. ஆமாம், அஹமதாபாத்தை சேர்ந்த அரவிந்த் மில்ஸ்  தான் உலகத்தின் நம்பர் ஒன் டெனிம் துணி தயாரிப்பாளர்கள். இவர்கள் கம்பெனியை சேர்ந்தது தான் ஆரோ பிராண்ட். தற்போது டெனிம் துணிகளில் பல புதுமைகளை புகுத்த திட்டமிட்டுள்ளார்கள். அதாவது, காக்கி டெனிம், டிஜிட்டல் டெனிம், எக்சல் டெனிம் போன்ற துணிகளை அறிமுகப்படுத்தவுள்ளார்கள்.


இந்திய துறைமுகங்கள்
ஏற்றுமதிக்கு துறைமுகங்கள் மிகவும் முக்கியம். இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதம் கப்பல் மூலமாகவே செல்கிறது. அதில் 60 சதவீதம் கன்டெய்னர்கள் மூலமாக செல்கிறது. இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் உள்ளது. இதில் சென்னை துறைமுகம் 4வது இடத்தை பெற்றுள்ளது. இந்திய துறைமுகங்கள் 2010-11ம் வருடத்தில் 870 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாண்டுள்ளன. வரும் 2020ம் வருடத்தில் இந்திய துறைமுகங்கள் சுமார் 3130 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாளும் வகையில் இருக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது.. ஏற்றுமதி இன்னும் 10 வருடத்தில் பல மடங்கு பெருகப் போகிறது.


உலகத்தில் வேகமாக வளர வாய்ப்புள்ள நாடுகள்

உலகத்தில் வேகமாம வளர வாய்ப்புள்ள நாடுகள் என்ற ஆய்வில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தாம் வெகு வேகமாக வரும் காலத்தில்
வளரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக யுகாண்டா, கென்யா, டான்சானியா போன்ற நாடுகள். காரணம் என்ன? அங்குள்ள இயற்கை வளம், உழைக்க ரெடியாக இருக்கும் மக்கள் போன்றவை. பாதகமாக உள்ள அம்சங்கள் தொடர்ந்து நடைபெறும் கொலை, குற்றங்கள், பெருகி வரும் எய்ட்ஸ்  போன்ற நோய்கள். இவைகளை கட்டுப்படுத்த அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் வருங்காலத்தில் இந்த நாடுகள் செழிப்பாக வாய்ப்புக்கள் நிறைய உண்டு. இந்திய ஏற்றுமதிக்கும் வாய்ப்புள்ள நாடுகள் இவை.


கேள்விக்கு என்ன பதில்?

கேள்வி:இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் புளி அதிகம் விளைகிறது?

பதில்:புளி தென் மாநிலங்களில் மட்டுமே விளைகிறது. ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகத்தில் மட்டுமே அதிகம் விளைவிக்கப்படுகிறது. 2,00,000 டன்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இதில் பொரும்பலும் உள்நாட்டிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. மிகவும் குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது.


கேள்வி:மூலிகைகள் என்று நாம் குறிப்பிடுவதில் மிகவும் முக்கியமான பயிர்கள் யாவை?

பதில்:இந்தியாவில் நூற்றுக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும், முக்கியமானவை என்று பிரித்து பார்த்தால் அதில் அஸ்வகாந்தா, செனா, பிரமி, அமலா (நெல்லி), சட்டாவாரி, பாசில், ரோஸ்மேரி, வெட்டிவேர், லெமன்கிராஸ், மென்தால் ஆகியவை வரும். இந்த லிஸ்ட் மிகவும் நீளமானது, பதில் சொல்வது மிகவும் கடினம்.


இந்த வார இணையதளம்www.wlw.com
Wlw என்றால் who supplies what என்று அர்த்தம். அதாவது இந்த இணையதளத்தின் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் யார் என்ன பொருட்களை சப்ளை செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும். ஜெர்மனி, ஆஸதிரியா, சுவட்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், ஸ்லோவேனியா, க்ரோஷியா, பின்லாந்து, யு.கே., இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளில் உள்ள ஏற்றுமதி / இறக்குமதியாளர்களை தெரிந்து கொள்ள உதவும் இணையதளம்.

இந்தத் தொடரைப் பற்றிய கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmal.com