Wednesday, June 29, 2011

ஏற்றுமதி உலகம் - வாரம் 2

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

இந்திய ஏற்றுமதி உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் என்னென்ன நிகழ்வுகள் என்று பார்ப்போம்.

டியூட்டி என்டைடில்மெண்ட் திட்டம் நீடிப்பு

ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை பெரிய அளவில் பயன்பட்டு வந்த டியூட்டி என்டைடில்மெண்ட் திட்டம் (டி.ஈ.பி.பி. ) இன்னும் 3 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தான் தற்போது உள்ள பெரிய நற்செய்தி. அதாவது, இந்த திட்டம் இருப்பதினால் ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களை வெளிநாடுகளில் மற்று நாடுகளுக்கு விற்கும் விலைக்கு சரிசமமாக விற்க முடிந்தது. இந்த திட்டம் எடுக்கப்பட்டால் ஏற்றுமதி பொருட்கள் விலை அதிகம் வைத்து விற்கும் ஒரு சூழ்நிலை வரும், அப்படி வருமானால் அது இந்திய ஏற்றுமதியை பாதிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்ததால், இந்த திட்டத்தை இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டி வைத்துள்ளார்கள். அதற்கு பிறகு வேறு ஒரு திட்டம் கொண்டு வரப்படுமா? என்பது கேள்விக்குறிதான்.

கூடி வரும் ஏற்றுமதி

ஏப்ரல் மாத ஏற்றுமதி 25.9 பில்லியன் டாலர்களாக இருக்கிறது (116,500 கோடி ரூபாய்கள்). இது சென்ற வருடம் இதே ஏப்ரல் மாத ஏற்றுமதியை விட 57 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதே அளவில் சென்றால் இந்த வருட ஏற்றுமதி அளவை எளிதாக எட்டி விடலாம். அதே சமயம் கவலை கொள்ள வைப்பது
இறக்குமதியும் 54 சதவீதம் கூடியுள்ளது.

ஏற்றுமதி செய்ய தனித்திறமை தேவையா?

என்னைப் பொறுத்தவரை தனித்திறமை எதுவும் தேவையில்லை. தரமான பொருட்கள் இருந்தால் ஆட்கள் உங்களை தேடி வரவைக்கலாம். ஏற்றுமதிக்கென உள்ள சில திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, நேரம் தவறாமை, சரியான கடிதப்போக்குவரத்துக்கள், நல்ல பேக்கிங் போன்றவை. மற்றபடி உள்நாட்டு வியாபாரத்திற்கும், வெளிநாட்டு வியாபாரத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.


ஆர்கானிக் பொருட்கள்

ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக, அதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜீனி, பருப்பு வகைகள், உணவு எண்ணெய்கள் ஆகியவை தலா 10,000 டன்கள் வரை வருடத்திற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உணவு எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு தற்போது கட்டுபாடு உள்ளது. அந்தக் கட்டுபாடு ஆர்கானிக் விவசாயம் மூலம் உற்பத்தி செய்ய பெற்ற உணவு எண்ணெய்களுக்கு 10,000 டன்கள் வரை வருடத்திற்கு இருக்காது. இது போல சில கட்டுப்பாடுகள் ஜீனி மற்றும் பருப்பு வகைகளுக்கு இருந்தாலும், ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்டவைகளுக்கு இருக்காது.இந்தியாவிலிருந்து ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதி இன்னும் 6 வருடங்களில் இரட்டிப்பு ஆகும் வாய்ப்புக்கள் அதிகம். அமெரிக்காவில் ஆர்கானிக் பொருட்கள் உபயோகம் வருடத்திற்கு 21 சதவீதம் கூடிக்கொண்டிருக்கிறது.

ஏலக்காய் ஏற்றுமதி மணக்கிறது

உறபத்தி அதிகமாக இருக்கிறது, உள்நாட்டு தேவைகள் குறைந்து வருகிறது. இருந்தாலும் ஏற்றுமதி வாய்ப்புக்கள் வந்து கொண்டிருப்பதால் உற்பத்தியாளர்களுக்கு ஏலக்காய் மணக்கிறது.

வெங்காயம் ஏற்றுமதி குறைவுஎல்லோருக்கும் தெரிந்தது தான். இந்த வருடம், அதாவது 2010 ஏப்ரல் முதல் 2011 மார்ச் வரை 12.89 மில்லியன் டன்கள் வெங்காயம் ஏற்றுமதி செய்துள்ளோம். அதற்கு முந்தைய ஆண்டில் 18.73 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். காரணம், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை இருந்தது, உள்நாட்டில் கூடுதல் விலை போன்றவை ஆகும்.

ஏற்றுமதி பொருட்காட்சிகள்

ஏற்றுமதி செய்ய பொருட்காட்சிகளில் கலந்து கொள்வது மிகவும் அவசியம். இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் மிகப்பெரிய

உணவுப்பொருட்காட்சியான அன்னபூரணா இந்த வருடமும் மும்பையில் நவம்பர் 16 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் உணவு மார்க்கெட் 181 பில்லியன் டாலர்கள் ஆகும். ஆகவே இந்தத் துறையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. இந்தப் பொருட்காட்சியில் 250 க்கும் மேலாக கண்காட்சியாளர்களும், 8000க்கும் அதிகமான பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்விக்கு என்ன பதில் ?கேள்வி:சுதாகரன், கரூர்

வேப்ப மர இலைக்கு ஏற்றுமதிக்கு வாய்ப்புக்கள் எப்படி?

பதில்:வேப்ப மர இலைக்கு பெரிய ஏற்றுமதி வாய்ப்புக்கள் இல்லாவிடினும், வேப்பங்கோட்டை பவுடர், வேப்பிலை ஆயில், வேப்பிலை பவுடர், வேப்பமர பூ ஆகியவைகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளது. வேப்பிலை பவுடர் இந்தியாவிலேயே பெரிய அளவில் கோழித்தீவனத்தில் கலப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த வார இணையதளம்

சமீபத்தில் நமது பிரதம மந்திரி ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பாவிற்கு சென்று வந்தார். வருங்காலங்களில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் கூடும் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது கவனம் அதிகம் தேவை. கென்யாவிற்கு ஏற்றுமதி செய்ய இந்த இணையத்தளம் http://www.kenyahighcommission.net/khccontent/doing-business-in-kenya.html உங்களுக்கு உதவும். கானா நாட்டுடன் வர்த்தகம் செய்ய இந்த இணையதளம் http://www.ghana50.gov.gh/business/index.php?op=currentbusiness உங்களுக்கு உதவும். எத்தியோப்பியாவுடன் வர்த்தகம் செய்ய இந்த இணையதளம் http://www.bds-ethiopia.net/countryinformation.html உங்களுக்கு உதவும்.

உங்களது கேள்விகளை அனுப்பி வைக்கவேண்டிய ஈமெயில் முகவரிSethuraman.sathappan@gmail.com

1 comment:

  1. Very interesting topic, thanks for posting.
    Also see my webpage :: Aromatherapy essential oils

    ReplyDelete