ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
இந்திய ஏற்றுமதி உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் என்னென்ன நிகழ்வுகள் என்று பார்ப்போம்.
டியூட்டி என்டைடில்மெண்ட் திட்டம் நீடிப்பு
ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை பெரிய அளவில் பயன்பட்டு வந்த டியூட்டி என்டைடில்மெண்ட் திட்டம் (டி.ஈ.பி.பி. ) இன்னும் 3 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தான் தற்போது உள்ள பெரிய நற்செய்தி. அதாவது, இந்த திட்டம் இருப்பதினால் ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களை வெளிநாடுகளில் மற்று நாடுகளுக்கு விற்கும் விலைக்கு சரிசமமாக விற்க முடிந்தது. இந்த திட்டம் எடுக்கப்பட்டால் ஏற்றுமதி பொருட்கள் விலை அதிகம் வைத்து விற்கும் ஒரு சூழ்நிலை வரும், அப்படி வருமானால் அது இந்திய ஏற்றுமதியை பாதிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்ததால், இந்த திட்டத்தை இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டி வைத்துள்ளார்கள். அதற்கு பிறகு வேறு ஒரு திட்டம் கொண்டு வரப்படுமா? என்பது கேள்விக்குறிதான்.
கூடி வரும் ஏற்றுமதி
ஏப்ரல் மாத ஏற்றுமதி 25.9 பில்லியன் டாலர்களாக இருக்கிறது (116,500 கோடி ரூபாய்கள்). இது சென்ற வருடம் இதே ஏப்ரல் மாத ஏற்றுமதியை விட 57 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதே அளவில் சென்றால் இந்த வருட ஏற்றுமதி அளவை எளிதாக எட்டி விடலாம். அதே சமயம் கவலை கொள்ள வைப்பது
இறக்குமதியும் 54 சதவீதம் கூடியுள்ளது.
ஏற்றுமதி செய்ய தனித்திறமை தேவையா?
என்னைப் பொறுத்தவரை தனித்திறமை எதுவும் தேவையில்லை. தரமான பொருட்கள் இருந்தால் ஆட்கள் உங்களை தேடி வரவைக்கலாம். ஏற்றுமதிக்கென உள்ள சில திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, நேரம் தவறாமை, சரியான கடிதப்போக்குவரத்துக்கள், நல்ல பேக்கிங் போன்றவை. மற்றபடி உள்நாட்டு வியாபாரத்திற்கும், வெளிநாட்டு வியாபாரத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.
ஆர்கானிக் பொருட்கள்
ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக, அதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜீனி, பருப்பு வகைகள், உணவு எண்ணெய்கள் ஆகியவை தலா 10,000 டன்கள் வரை வருடத்திற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உணவு எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு தற்போது கட்டுபாடு உள்ளது. அந்தக் கட்டுபாடு ஆர்கானிக் விவசாயம் மூலம் உற்பத்தி செய்ய பெற்ற உணவு எண்ணெய்களுக்கு 10,000 டன்கள் வரை வருடத்திற்கு இருக்காது. இது போல சில கட்டுப்பாடுகள் ஜீனி மற்றும் பருப்பு வகைகளுக்கு இருந்தாலும், ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்டவைகளுக்கு இருக்காது.இந்தியாவிலிருந்து ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதி இன்னும் 6 வருடங்களில் இரட்டிப்பு ஆகும் வாய்ப்புக்கள் அதிகம். அமெரிக்காவில் ஆர்கானிக் பொருட்கள் உபயோகம் வருடத்திற்கு 21 சதவீதம் கூடிக்கொண்டிருக்கிறது.
ஏலக்காய் ஏற்றுமதி மணக்கிறது
உறபத்தி அதிகமாக இருக்கிறது, உள்நாட்டு தேவைகள் குறைந்து வருகிறது. இருந்தாலும் ஏற்றுமதி வாய்ப்புக்கள் வந்து கொண்டிருப்பதால் உற்பத்தியாளர்களுக்கு ஏலக்காய் மணக்கிறது.
வெங்காயம் ஏற்றுமதி குறைவுஎல்லோருக்கும் தெரிந்தது தான். இந்த வருடம், அதாவது 2010 ஏப்ரல் முதல் 2011 மார்ச் வரை 12.89 மில்லியன் டன்கள் வெங்காயம் ஏற்றுமதி செய்துள்ளோம். அதற்கு முந்தைய ஆண்டில் 18.73 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். காரணம், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை இருந்தது, உள்நாட்டில் கூடுதல் விலை போன்றவை ஆகும்.
ஏற்றுமதி பொருட்காட்சிகள்
ஏற்றுமதி செய்ய பொருட்காட்சிகளில் கலந்து கொள்வது மிகவும் அவசியம். இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் மிகப்பெரிய
உணவுப்பொருட்காட்சியான அன்னபூரணா இந்த வருடமும் மும்பையில் நவம்பர் 16 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் உணவு மார்க்கெட் 181 பில்லியன் டாலர்கள் ஆகும். ஆகவே இந்தத் துறையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. இந்தப் பொருட்காட்சியில் 250 க்கும் மேலாக கண்காட்சியாளர்களும், 8000க்கும் அதிகமான பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேள்விக்கு என்ன பதில் ?கேள்வி:சுதாகரன், கரூர்
வேப்ப மர இலைக்கு ஏற்றுமதிக்கு வாய்ப்புக்கள் எப்படி?
பதில்:வேப்ப மர இலைக்கு பெரிய ஏற்றுமதி வாய்ப்புக்கள் இல்லாவிடினும், வேப்பங்கோட்டை பவுடர், வேப்பிலை ஆயில், வேப்பிலை பவுடர், வேப்பமர பூ ஆகியவைகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளது. வேப்பிலை பவுடர் இந்தியாவிலேயே பெரிய அளவில் கோழித்தீவனத்தில் கலப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.
இந்த வார இணையதளம்
சமீபத்தில் நமது பிரதம மந்திரி ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பாவிற்கு சென்று வந்தார். வருங்காலங்களில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் கூடும் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது கவனம் அதிகம் தேவை. கென்யாவிற்கு ஏற்றுமதி செய்ய இந்த இணையத்தளம் http://www.kenyahighcommission.net/khccontent/doing-business-in-kenya.html உங்களுக்கு உதவும். கானா நாட்டுடன் வர்த்தகம் செய்ய இந்த இணையதளம் http://www.ghana50.gov.gh/business/index.php?op=currentbusiness உங்களுக்கு உதவும். எத்தியோப்பியாவுடன் வர்த்தகம் செய்ய இந்த இணையதளம் http://www.bds-ethiopia.net/countryinformation.html உங்களுக்கு உதவும்.
உங்களது கேள்விகளை அனுப்பி வைக்கவேண்டிய ஈமெயில் முகவரிSethuraman.sathappan@gmail.com
Wednesday, June 29, 2011
Sunday, June 19, 2011
ஏற்றுமதி உலகம் 1
சேதுராமன் சாத்தப்பன்
இந்தியாவின் ஏற்றுமதி பெருகி வருகிறது. தமிழ்நாட்டின் ஏற்றுமதியும் பெருகி வருகிறது. இந்த சமயத்தில் ஏற்றுமதி உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுமதியாளர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் எடுத்துக் கூறும் விதமாக இந்த தொடர் அமையும். சென்ற வாரத்தில் ஏற்றுமதி உலகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு எடுத்துச் சொல்லும், வழிகாட்டியாக அமையும்.
இந்தியாவும் ஏற்றுமதியும்2009-2010 வருடத்தில் குறைந்து கொண்டே சென்ற ஏற்றுமதி, 2010-2011ம் ஆண்டில் மிகச் சிறப்பாக இருந்தது. மார்ச் மாத ஏற்றுமதி டார்கெட்டான 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தாண்டி 246 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 3000 கோடி ரூபாய்கள் அளவு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து வருகிறோம். வருடம் வருடத்தில் இன்னும் 25 சதவீதம் கூடுதலாக ஏற்றுமதி செய்ய டார்கெட் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வருடத்தில் இதை இரட்டிப்பாக்கவும், அதாவது 500 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடல்பொருட்கள் ஏற்றுமதி உயர்வு
இந்தியாவின் கடல்பொருட்கள் ஏற்றுமதி 2009-10ம் ஆண்டு 2.1 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2010-11ம் ஆண்டு 2.6 பில்லியனாக கூடியுள்ளது. அதாவது சுமார் 25 சதவீதம் கூடியுள்ளது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கடல் உணவுப் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் மாநிலங்கள் மஹாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஆகும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறைந்து வரும் மஞ்சள் ஏற்றுமதி
தங்கத்திற்கு இணையாக போட்டி போட்டு கொண்டு சென்ற வருடம் முழுவதும் ஏறிவந்தது மஞ்சள் (ஒரு வேளை அதுவும் தங்க கலரில் இருந்ததாலேயே என்னவோ). ஆனால், சமீப காலமாக சரிவு நிலை தொடங்கியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அதிகமான வரத்து, இரண்டாவது அதிகம் டிமாண்ட் இல்லாதது. கடந்த வருட ஏற்றுமதி அதற்கு முந்தைய வருட ஏற்றுமதியை விட குறைந்துள்ளது. இது தவிர இந்த வருடம் விளைச்சலும் அதிகம். இவை எல்லாம் சேர்ந்து விலையையும் குறைத்துள்ளன.
வெள்ளிப் பொருட்கள்
ஏற்றுமதிவெள்ளி விலை கூடிவருவது எல்லோருக்கும் ஒரு கவலை அளிக்கு விஷயம் தான். ஆனால், வெள்ளி விலை என்ன கூடினால் என்ன என்று வெள்ளிப் பொருட்களின் ஏற்றுமதி கூடி வருகிறது. அதாவது இந்தியாவிலிருந்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெள்ளியினால் செய்யப்பட்ட பொருட்கள் 179 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் இதே சமயத்தில் செய்யப்பட்ட ஏற்றுமதியான 133 கோடி ரூபாயை விட அதிகமாகும். இந்திய வெள்ளிப் பொருட்களுக்கு உலகளவில் பெரும் மதிப்பு ஏற்பட்டு வருகிறது. நம் சேலம் தான் இந்திய அளவில் வெள்ளிக் கொலுசுகள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இங்குள்ளவர்கள் மதிப்புக்கூட்டப்பட்ட மற்ற வெள்ளிப் பொருட்களை தயாரிப்பார்களேயானால் அது உலகளவில் சேலத்தை திரும்பிப் பார்க்க வைக்கும்.
தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது எப்படி?
தவறாமல் எல்லோரும் கேட்கும் கேள்வி இது. தவறில்லாமல் ஏற்றுமதி செய்ய மூன்று விஷயங்களை உங்கள் கண்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஒன்று தரமான பொருட்கள், இரண்டாவது சரியான விலை, மூன்றாவது தவறில்லாத ஏற்றுமதி டாக்குமெண்ட்கள். சரக்குகள் மிகவும் சிறப்பாக இருந்தாலும் ஏற்றுமதி டாட்குமெண்ட்களில் தவறிருந்தால் எல்.சி. மூலம் அனுப்பும் சரக்குகள் சர்ச்சைக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம். ஆதலால் எல்.சி.. மூலம் செய்யும் ஏற்றுமதியில் டாக்குமெண்ட்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
இணையதளங்கள்
ஏற்றுமதியாளர்களுக்கு இணையதளங்கள் மிகவும் முக்கியமானவை. ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் இணையதளங்களில் நல்லவைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை வாரம் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். இந்த வாரம்http://www.economy.gov.ae/ஏற்றுமதி என்று எடுத்துக் கொண்டால் அருகிலுள்ள ஐக்கிய அரபு நாடுகளுக்கு பெருமளவில் செய்து வருகிறோம். அந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அந்த நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அந்த நாட்டின் அரசாங்க இணையத்தளமான http://www.economy.gov.ae/ மிகவும் உதவியாக இருக்கும். ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள ஏழு நாடுகளை பற்றி தகவல்களை அறிந்து கொள்ள உதவும் இணையத்தளம்.
ஏற்றுமதி செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்றுமதி குறித்து சந்தேகங்கள் இருக்கலாம். அவற்றில் வாரம் ஒன்று அல்லது இரண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளேன்.
கேள்விக்கு என்ன பதில்?
கேள்வி: விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யும் போது எந்த விவசாய விளைபொருள் எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? மேலும், என்ன விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்பதையும் எப்படி தெரிந்து கொள்வது?
பதில்: அபிடா இணையதளத்திற்கு (http://www.apeda.gov.in/) சென்று இடது பக்கம் இருக்கும் ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் என்ற பகுதிக்கு சென்றால் உங்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் கிடைக்கும். அதாவது, கடந்த மூன்று வருடங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் விவசாய விளைபொருட்கள் எவ்வளவு மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த நாடுகளுக்கு எந்தெந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதை வைத்துக் கொண்டு ஏற்றுமதி செய்ய விரும்புபவர் என்ன பொருளை ஏற்றுமதி செய்ய இயலும், எந்த நாடுகளில் வாய்ப்புக்கள் உள்ளது என்றும் அறிந்து கொள்ளலாம்.
அடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம். sethuraman.sathappan@gmail.com
Subscribe to:
Posts (Atom)