கோவையில் முதன் முறையாக தமிழில் ஏற்றுமதி கருத்தரங்கு: மகளிர் குழுவுக்கு இலவச பயிற்சி
Advertisement
பதிவு செய்த நாள்
24டிச2014
00:12
'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி?' மற்றும் 'ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?' என்ற தலைப்பில், கோவையில் முதன் முறையாக, தமிழில் கருத்தரங்கு நடக்கிறது. இதில், ஏற்றுமதி தரத்தில் பொருள் தயாரிக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
புது நம்பிக்கை:
மும்பையில் இயங்கி வரும் முன்னணி ஏற்றுமதி பயிற்சி நிறுவனமான, 'இன்ஸ்டிடியூட் பார் லேர்னிங் எக்ஸ்போர்ட்ஸ்' விடுத்துள்ள அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடியின், 'மேக் இன் இந்தியா' அறிவிப்புக்கு பிறகு, இந்தியாவின் உற்பத்தி துறையில் புதிய சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. சிறு பொருளை உற்பத்தி செய்பவர் மத்தியில் கூட புது நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. உலக நாடுகளிடம் இந்திய வர்த்தகர்கள் மீதான தனி கவனம் பதிந்துள்ளது. தென்னிந்தியாவின் வர்த்தக கேந்திரங்களாக, தமிழகத்தின் முக்கிய பொருளாதார மையங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் போன்ற மாவட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. புதிய தலைமுறை தொழிலதிபர்கள், சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வர்த்தகம், நிதி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் போன்றோருக்கு, ஏற்றுமதி தொழில் குறித்த விழிப்புணர்வு தேவைப்படும் மிகச் சரியான தருணம் இது. இதை கருத்தில் கொண்டு, கோவையில் முதன் முறையாக, 'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி?' மற்றும் 'ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?' என்ற தலைப்பில், இனிய தமிழில் ஒரு நாள் கருத்தரங்கம் நடக்க இருக்கிறது.
புதிய மார்க்கெட்டிங்:
ஏற்றுமதி தொழில் தொடங்கியவுடன், புதையல் போல நமக்கு டாலர்களை கொட்டிக் கொடுக்காது. முறையான பயிற்சி பெற்று, தவறில்லாமல் தொழில் செய்யும்போது, ஏற்றுமதியில் லாபம் பார்க்கலாம். தொழில் சிந்தனையுள்ள இளைஞர்களும், சுயதொழில், சிறுதொழில் புரிபவர்களும் ஏற்றுமதியாளர்களும், ஏற்றுமதி தொழிலை தவறில்லாமல் தெரிந்து கொண்டு, அதில் வெற்றிகரமாக ஈடுபடவும், புதிய மார்க்கெட்டிங் வாயில்களை ஏற்றுமதியாளர்கள் தேடித் திறக்க உதவும் வகையில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட இருக்கிறது. ஏற்றுமதி டாக்குமென்டேஷன் விதிகள் பற்றிய சிறந்த பயிற்சியாளரும், ஏற்றுமதி மற்றும் பங்குச் சந்தை வர்த்தகம் குறித்த கட்டுரைகளை முன்னணி தமிழ் நாளிதழ்கள், வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவரும், தமிழகம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுமதி பயிற்சி அளித்து வருபவருமான, மும்பையின் பிரபல வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன் இந்த பயிற்சியை அளிக்க உள்ளார்.
இலவச அனுமதி:
கோவை பீளமேட்டில் உள்ள, 'பி.எஸ்.ஜி. டெக்.,' கல்லூரி அரங்கத்தில், வரும் டிசம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கருத்தரங்கு நடக்கிறது. பயிற்சி கட்டணம், 2,500 ரூபாய். மதிய உணவு, பயிற்சி புத்தகம் வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு, 50 சதவீத கட்டண சலுகை. ஏற்றுமதி தரத்தில் பொருள் தயாரிக்கும் மகளிர் சுய உதவி குழு பெண்கள், 20 பேருக்கு, இலவசஅனுமதியும் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 098696 - 16533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கோவை விஜயா பதிப்பகம், இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது. விஜயா பதிப்பக கிளைகளில் நேரில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
- நமது நிருபர் -