Sunday, January 15, 2012

முடியும் ஏற்றுமதியாகிறது?, இந்திய கார்பெட்கள், பத்தமடைப் பாய்கள், ராஜகுமாரிக்கு ஒரு இந்திய ரோஜா, இந்த வார இணையதளம்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


முடியும் ஏற்றுமதியாகிறது?

தலையில் இருந்து கீழே விழுந்தவுடன் முடிக்கு என்ன மதிப்பு என்று தான் நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால், உண்மை வேறு. முடி தலையில் இருந்தாலும் மதிப்பு தான், கீழே விழுந்தாலும் மதிப்பு தான். மொட்டை அடிக்கப்படும் போது எடுக்கப்படும் முடி தான் அதிக அளவில் சுத்தப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களாக சீனா இந்திய முடியை அதிகம் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியா வருடத்திற்கு 1100 கோடி ரூபாய் அளவிற்கு முடியை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆமாம், முடி எங்கிருந்து கிடைக்கிறது? திருப்பதி, பழனி போன்ற இடங்களில் இறக்கப்படும் முடி தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரேசில், ஹாங்காங், அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளும் இந்திய முடியை அதிக அளவில் வாங்குகின்றன. வாங்கி என்ன செய்யும்? சிறிய முடியாக இருந்தால் ஒரு விதமான கெமிக்கல் தயாரிப்பதற்கும்,

நீளமுடியாக இருந்தால் விக் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் தங்கள் முடிகளை நன்கு பராமரித்து வருவதாலும், மற்ற நாடுகளைப் போல இல்லாமல் சுருள் முடிகளும் இருப்பதாலும் மற்ற நாடுகளில் இந்திய முடிகளுக்கு மதிப்பு அதிகமாக உள்ளது. அடுத்த தடவை உங்கள் முடியை நீங்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை செய்தால் அந்த முடி எந்த நாட்டில் இருக்கிறதோ என்று யோசிக்கலாம்.


இந்திய கார்பெட்கள்
இந்திய கார்பெட்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக காஷ்மீர் கார்பெட்கள் வேலைப்பாடுகள் மிகுந்தவை, விலையும் அதிகம். எவ்வளவுக்கு எவ்வளவு வேலைப்பாடுகள் அதிகமோ அவ்வளவுக்கு அதிகம் விலை. அடுத்த முறை சென்னை போன்ற ஊர்களுக்கு போகும் போது காஷ்மீர் எம்போரியத்தில் சென்று கார்பெட்களை பார்க்கத் தவறாதீர்கள். வருடத்திற்கு 700 மில்லியன் டாலர் (சுமார் 3500 கோடி ரூபாய்கள் அளவு) அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கார்பெட்டிலே பலவகைகள் உள்ளது. காட்டன் கார்பெட், உல்லன் கார்பெட், கைவேலைப்பாடுகள் நிறைந்த சில்க் கார்பெட், சிந்தெடிக் கார்பெட் என்று பலவகையான கார்பெட்கள் உள்ளது.


பத்தமடைப் பாய்கள்

பத்தமடைப் பாய்களின் சரித்திரம் அழிந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. பாயில் படுக்கும் காலமெல்லாம் போய் கட்டிலும், மெத்தையும் வந்து விட்டது. பாய் என்றாலும், அது பிளாஸடிக் பாயாகத்தான் இருக்கவெண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஏனெனில் நீண்டகாலம் உழைக்க வேண்டுமே என்ற எண்ணம் தான். ஆதலால் மக்களின் நடுத்தர வர்க்கம் அல்லது அதற்கு மேலே உள்ளவர்கள் பாயை மறந்து விட்டார்கள். தற்போது பத்தமடையை சேர்ந்த ஒருத்தருடன் பேசிக்கெண்டிருந்த போது அவர் கூறினார், பத்தமடையில் தற்போது ஒரு சில குடும்பங்களே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பாய் தவிர மற்ற பொருட்களும் தயாரிக்கப்படுவதாகவும் வியாபாரங்கள் பெரிய அளவில் இல்லை என்றும் கோரையும் தூரத்திலிருந்து கொண்டு வரவேண்டியிருப்பதாகவும் கூறினார். ஏற்றுமதிக்கு இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு இணையதளம் ஆரம்பித்தால் அது அவர்களின் ஏற்றுமதிக்கு உதவும்.


ராஜகுமாரிக்கு ஒரு இந்திய ரோஜா

மலர்களிலேயே ரோஜாவைப் பார்த்தவுடன் மனதுக்கு ஒரு தனி மகிழ்ச்சி வந்து விடும். அந்த அளவிற்கு அதன் அழகே தனி. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு ஒரு சரியான நேரத்தில் ஏற்பட்டிருப்பதால் (அதாவது கிருஸதுமஸ, புத்தாண்டு, காதலார்கள் தினம் போன்ற நேரத்தில்) அது இந்திய ரோஜாப் பூக்கள் ஏற்றுமதிக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளது. வருடத்திற்கு இந்தியாவிலிருந்து 25 முதல் 30 மில்லியன் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு பூ இங்கிருந்து வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்யப்படும் போது 10 முதல் 20 சென்ட் வரை விற்கப்படுகிறது. வருடத்திற்கு 350 மில்லியன் ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு முண்ணனி வகிக்கிறது. இந்தியாவிலிருந்து யு.கே. ஆஸதிரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, நியுசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


இந்த வார இணையதளம்

www.philb.com/countryse.htm

பொதுவாக தேடும் தளம் என்றால் சின்ன குழந்தை கூட கூகுள் சர்ச் பண்ணுங்க என்று சொல்லிவிடும். ஆனால், சில சமயம் நாடு தழுவிய சர்ச் இஞ்சின் அந்த நாட்டைப் பற்றிய இன்னும் சில விபரங்களை அதிகமாக தரும். ஆதலால் பல சமயங்களில் அந்த நாட்டில் சிறப்பாக இயங்கும் இணையதளத்தை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கும். அப்படி 167க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள 1500க்கும் மேலே உள்ள நாடு தழுவிய இணையதளங்களை பற்றிய தகவல்கள் அடங்கியது <http://www.philb.com/countryse.htm>


தங்களுக்கு இந்த தொடர் சம்பந்தமாக எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com <mailto:sethuraman.sathappan@gmail.com>

No comments:

Post a Comment