Sunday, May 13, 2012

இந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி


இந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி

இந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சீனா நீக்கியுள்ளது. இதையடுத்து, ஈரானுடன்  பிரச்சனையை சந்தித்து வந்த இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு,சீனா புதிய சந்தை வாய்ப்பை வழங்கியுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகம் உற்பத்தியாகிறது. சென்ற வருடம் பாசுமதி அரிசி ஏற்றுமதி 25 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வருடத்தில் இது 22 லட்சம் டன்னாக இருந்தது.

உள்நாட்டு சந்தையில், ஒரு டன் பாசுமதி அரிசி 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது, சீனாவிற்கும் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதால் ஏற்றுமதி இன்னும் கூடும்.



Saturday, May 12, 2012

நாட்டின் தானிய ஏற்றுமதி கூடும்


நாட்டின் தானிய ஏற்றுமதி கூடும் 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் தானிய உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் நாடு உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும்.

சில வருடங்களுக்கு முன்பு உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து போனதை அடுத்து, மத்திய அரசு, அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டு களாக, நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, உள்நாட்டுத் தேவைக்கும் அதிகமாக உள்ளது.

சென்ற செப்டம்பர் மாதத்தில், கோதுமை மற்றும் சாதாரண வகை அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

அண்மைக் காலமாக, நம் நாடு, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு நாடுகளுக்கு, அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. வங்க தேசத்திற்கு, குறைந்தளவில், கோதுமையும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 120 கோடிமக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்கு, ஆண்டுக்கு 7.60 கோடி டன் கோதுமையும், 9 கோடி டன் அரிசியும் தேவைப் படுகிறது. அதே சமயம், இவைகளின் உற்பத்தி நமக்கு தேவையை விட அதிகரித்துள்ளது. 

Wednesday, May 9, 2012

வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் பொருட்களை எப்படி மார்க்கெட்டிங் செய்வது



இந்த வார இணையதளம்


சிறிய பிசினஸ்களுக்கு உள்ள ப்ராபளமே எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பது தான். குறிப்பாக வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் தங்களுடைய பொருட்களை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பது குறித்துத் தான். பெரிய கம்பெனிகளுக்கு இந்த ப்ராபளம் இல்லை. மிகுந்த பொருட்செலவில் மார்க்கெட்டிங் டிவிஷனே துவங்கி அதன் மூலம் தங்கள் பொருட்களை மார்க்கெட்டிங் செய்து விடலாம், விளம்பரங்களும் பெரிய அளவிலும் செய்யலாம். இந்த இணையதளம் சிறிய பிசினஸ்கள் தங்கள் வியாபாரத்தை எப்படி உலகளவில் கொண்டு செல்லலாம் என்பதை உங்களுக்கு விளக்கும் இணையதளம். சிறிது நேரம் செலவழித்து படிக்க / பார்க்க வேண்டிய இணையதளம்.

Tuesday, May 8, 2012

எனக்கு வெளிநாட்டிலிருந்து சரக்கு வேண்டும் என்று கேட்டுள்ளவர் எப்.ஒ.பி., லண்டன் என்று கேட்டுள்ளார். எப்படி விலை நிர்ணயிப்பது?


கேள்விக்கு என்ன பதில்?

சுதர் ராஜ்

கேள்வி
எனக்கு வெளிநாட்டிலிருந்து சரக்கு வேண்டும் என்று கேட்டுள்ளவர் எப்.ஒ.பி., லண்டன் என்று கேட்டுள்ளார். எப்படி விலை நிர்ணயிப்பது?

பதில்
எப்.ஓ.பி. லண்டன் என்று வராது. எப்.ஓ.பி., என்றால் சரக்குகளை நீங்கள் கப்பலில் ஏற்றி அனுப்பியுடன் உங்கள் பொறுப்பு முடிந்தது. ஆதலால் எப்.ஓ.பி., மும்பை அல்லது சென்னை என்று தான் வரும். எப்.ஓ.பி., என்றால் ப்ரி ஆன் போர்டு என்று அர்த்தம், அதாவது சரக்குகளை துறைமுகம் வரை எடுத்துச் செல்ல வேண்டியது உங்கள் கடமை, மேலும் சரக்குகளை கப்பலில் தளத்தில் வைப்பது வரையான செலவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். சரக்குக் கட்டணம், இன்சூரன்ஸ்  நீங்கள் செலுத்தத் தேவையில்லை.

Sunday, May 6, 2012

விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு, ஏற்றுமதியில் ஏற்றம் தருமா?


விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு, ஏற்றுமதியில் ஏற்றம் தருமா?

தட்பவெப்ப நிலை காரணமாக இந்த வருடம் மாங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியா முழுவது இதே நிலை தான். இந்தியாவில் அதிகம் மாம்பழம் உற்பத்தி செய்யும் மஹாராஷ்டிராவிலேயும் இதே நிலை தான். அங்கு அதிகமாக விளையும் அல்போன்சா மாம்பழம் இந்த வருடம் 5 டஜன்கள் 5000 ரூபாய் வரை சென்றது. தற்போது 2000 ரூபாய் வரை வந்து நிற்கிறது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைச்சல் குறைவால்,  மாங்காயின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக பெங்களூரா, தோத்தாபுரி, மல்கோவா உள்ளிட்ட ரக மா அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஊறுகாய் தயாரிப்பதற்கு உகந்த ரகம் பீத்தர் ஆகும். இதுவும் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது . 

இந்தாண்டு தட்பவெப்ப நிலை காரணமாக, மா மரங்களில் பூக்கள் பூப்பது தாமதமானது. இதனால், ஊறுகாய் மாங்காய் அறுவடையும் தாமதமாகியுள்ளது. விலையும் கூடியுள்ளது. சீ சீ இந்த மாம்பழம் புளிக்கும் என்று நிலைக்கு போகாமல் நம்மை மாம்பழங்கள் விலை குறைந்து நம்மை மகிழ்விக்க வேண்டும். விலை கூடுதலாலும், விளைச்சல் குறைவாலும் இந்த வருடம் ஏற்றுமதி குறைய வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.

Friday, May 4, 2012

மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளது


மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளது

தமிழ்நாடு மக்காச்சோளம் அதிகம் தயாரிக்கும் மாநிலங்களில் ஒன்று. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு நடக்கிறது. 10,000 டன் மக்காச்சோளம், பிஸ்கட், மாவு உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் தயாரிக்க வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் கறிக்கோழி தீவனத்திற்காக கோழிப் பண்ணைகளுக்கும் அனுப்பப்படுகிறது. ஏற்றுமதிக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், உள்நாட்டிலேயே போதுமான தேவை இருப்பதால் வெளிநாட்டுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. அறுவடை செய்தபின், மீதமாகும் சோள தட்டை மாட்டுக்கு தீவனமாக போடப்படுகிறது. விறகாகவும் பயன்படுத்தப்படுகிறது.  

Wednesday, May 2, 2012

வெள்ளை பூண்டு ஏற்றுமதிக்கு வாய்ப்பு


வெள்ளை பூண்டு ஏற்றுமதிக்கு வாய்ப்பு

வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வெள்ளைப் பூண்டு ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. பூண்டு உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து, பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு  அனுப்பப்படுகிறது. அங்குள்ள கூட்டுறவு சங்கங்கள் விலை நிர்ணயிக்கின்றன. தமிழகத்தில், தேனி வடுகப்பட்டி, திண்டுக்கல் வத்தலக்குண்டு, கோவை மேட்டுப்பாளையத்தில் பூண்டு மற்ற மாவட்டங்களுக்கு செல்கிறது. இந்தியாவில் இருந்து, மே முதல், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், மலேசியாவிற்கு பூண்டு ஏற்றுமதி துவங்கிவிடும்.